Adsense

சுப்ரமணியபுரம்


மதுரையை சொந்த ஊராகக் கொண்ட என்னுடைய நண்பர் ஒருவர் இந்த படத்தின் மேல் அதிக ஆர்வம் காட்டியதால் அவருடன் சேர்ந்து இந்த படம் பார்த்தேன். உண்மையில் இடைவேளைக்கு 5 நிமிடம் முன்பிலிருந்து தான் திரைப்படமே தவங்குகிறது. இங்கிருந்து கடைசி காட்சிவரை படம் பார்வையாளரை முற்றிலுமாக ஆக்கிரமிக்கிறது. அதற்கு முன்பு இருக்கும் காட்சிகள் எல்லாம் சும்மாவுக்காக.

எந்த விதமான முன்முடிவும், எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த படத்துக்குச் சென்ற எனக்கு இந்த படம் ஆச்சரியத்தையே தந்தது - கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட இன்னொரு நல்ல தமிழ் படம். படத்தில் எல்லோருமே ஏறக்குறைய அறிமுகம் தான். நடிகர், நடிகைகள் முதல் ஆடை வடிவமைப்பாளர் வரை எக்கச்சக்க புதுமுகங்கள். இவ்வளவு பேர் மேல் நம்பிக்கை வைத்து படத்தை எடுத்த தயாரிப்பாளரையும், இயக்குனரையும் முதலில் பாராட்ட வேண்டும். “கண்கள் இரண்டால்” இந்த வருடத்தின் சிறந்த மெலடி. கதாநாயகியின் (பெயர் மறந்து விட்டது) சிரிப்பு அழகாக இருக்கிறது. தாடிக்கார இளைஞர்கள், பழைய பத்து ரூபா நோட்டு, பத்து பைசா, சரோஜ் நாராயண்சுவாமியின் செய்தி அறிக்கை, பெல் பாட்டம், நரசூஸ் காப்பியின் பழைய லோகோ என்று 1980களின் காலத்தை நுணுக்கமாக காட்சிக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.துரோகம் துரோகம் துரோகம் – இது தான் படத்தின் அடிநாதமாக இருக்கிறது. எதுவுமே முழுமையாக நிறைவு பெறவில்லை. ஒரு நல்ல ரொமான்ஸ் இருக்கிறது – ஆனால் திருமணத்தில் முடிந்து முழுமையடையவில்லை. நட்பு இருக்கிறது – ஆனால் நட்பு கொண்டாடப்படாமல் துரோகத்தால் முடிகிறது. விசுவாசம் இருக்கிறது – அதுவும் சுயநலத்தில் பகடைக்காயாக்கப்படுகிறது. படம் முழுவதும் துரோகமும் அவநம்பிக்கையும் ஒரு கதாபாத்திரம் போல வலம் வருகின்றன. படம் முடியும் போது முகத்தில் அறைந்து திரையரங்கை விட்டு வெளியேற்றுகின்றன. நீரற்ற ஒரு பாலை நிலப்பரப்பில் கால் கடுக்க உச்சி வெயிலில் அழைத்து செல்கிறது இந்த படம். கதாபாத்திரங்கள் எல்லோருமே பலவீனமாக இருக்கிறார்கள் – அல்லது இயல்புக்கேற்ற சக்தியோடு இருக்கிறார்கள். 1980களில் வேலையில்லா திண்டாட்டம், சுயம் தொலைத்த இளைஞர்கள், சுயநலத்தின் வக்கிர முகம் எல்லாவற்றையும் இந்த படம் காட்சியாக்குறது. கொஞ்சம் அதிதமாகவே வன்முறையை கையிலெடுத்துக் கொண்டிருப்பதால் குழந்தைகளுடன் இந்த படத்தை பார்ப்பதை தவிர்க்கலாம்.

வெயில், காதல் போன்ற இயல்பியலை மையமாக்கியப்படங்கள் தந்த தாக்கத்தை இந்த படம் தருவதில் கொஞ்சம் தவறுகிறது – கொஞ்சம் அதிகப்படியாகவே படத்தை இழுப்பதாக தோன்றியது. படம் பார்க்கும் போது எப்போடா இடைவேளை வரும் என்ற சிந்தனை தவிர்க்கமுடியாததாகியது. வன்முறையை இந்த அளவோடு நாம் திரைப்படத்தில் நிறுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும். நிஜ வாழ்க்கைக்கு அருகில் செல்ல செல்ல வன்முறையின் குருரத்தை நம்மால் தாங்க முடியாதோ என்று தோன்றுகிறது. இந்த படம் பார்க்கும் போதும் இதே கேள்வி நூறாவது முறையாக தோன்றியது – “இயல்பாக படமெடுப்பது என்றால் சோகமும், அவநம்பிக்கையும், வலியையும் பற்றி மட்டும் தான் படம் எடுக்க முடியுமா ?”. இந்த படத்தில் இயல்பைக்காட்டிலும் shock value-வே அதிகம் இருப்பதாக உணர்கிறேன்.

படம் முடியும் போது ஏதோ வெறுமை இருப்பது உண்மை. அது திரைப்படம் சொன்ன கதையால் வந்ததா – அல்லது என் கேள்விக்கு பதில் தெரியாத காரணத்தால் வந்ததா என்று எனக்கு நிச்சயம் தெரியவில்லை. எதுவாக வேண்டுமானால் இருக்கட்டும் - நாம் மொழி தெரியாத ஒருவரிடம் இது எங்க ஊரு படம் பெருமையாக போட்டுக் காட்டக்்கூடிய படம்.

One response to “சுப்ரமணியபுரம்”

இன்னைக்குத் தான் உங்க வலைப்பதிவுக்கு முதல்ல வர்றேன். நல்லா இருக்கு. நீங்க கேட்ட கேள்வி தான் என் மனதிலயும். இயல்பு என்றால் சோகம் தானா? மகிழ்ச்சியா இருக்கக்கூடாதா? இன்னொன்னு, தமிழ்நாட்டு கடந்த ஆண்டுகள்ல மிரள வைச்ச மாதிரி ஓடுன பல படங்கள் துயர முடிவு உடையவை தான்.. சேது, காதல், வெயில், காக்க காக்க ... தமிழ்நாட்டுல மட்டும் தான் இப்படி ஓடுது..ஆந்திராவுல துயர முடிவு இருந்தா ஓடாதுன்னு நண்பன் சொல்றான்.

அப்புறம், சுப்பிரமணியபுரம் படத்தின் இயக்குநர் தான் அதன் தயாரிப்பாளரும். அதனாலேயே தரத்தில் சமரசம் செய்யாமல் புதியவர்கள் மேல் நம்பிக்கை வைத்துச் செய்ததாகச் சொல்லி இருக்கிறார்.

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman