Adsense

தசாவதாரம்


மு கு: ஹாசினி பேசும் படம் ரேஞ்குக்கு இல்லாவிட்டாலும், அதற்கு கொஞ்சம் குறைவாக தசாவதாரத்தைப் பாராட்டப் போகும் பதிவு இது. இந்தப் படத்தை குருவியோடு ஒப்பிடும் நண்பர்கள் மேற்கொண்டு படிப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் :-)

12-ம் நூற்றாண்டில் கடலுக்குள் வீசி எறியப்பட்ட சிலை ஒன்று டெக்டாணிக் பிளேட்டை உராய்வதால் ஏற்படும் சுனாமியால் உலகம் அழிவிலிருந்து காப்பாற்றப்படுகிறது என்பது படத்தின் ஒன் லைன் (படம் வந்து 1 வாரத்திற்கு மேல் ஆகின்றது – இன்னும் spoilers இல்லாமல் விமர்சனம் எழுத வேண்டுமா என்ன ?). புத்திசாலித்தனமான கற்பனை. இது போன்ற திரைப்படங்கள் ஹாலிவுட்டில் மிகவும் பரவலாக எடுக்கப்படுகின்றன. தமிழில் எனக்குத் தெரிந்த வரை இது தான் முதல் முறை. அதாவது சில சரித்திர நிகழ்வுகளுக்கு நடுவே ஒரு கற்பனையை இழைத்து ஒரு கதை செய்வது. இதற்கு முன் கமல் எடுத்த ஹே ராம் (என் கணிப்புப் படி இது வரை எடுக்கப்பட்ட தமிழில் படங்களில் மிகச்சிறந்த படம் இது தான்) ஒரு வரலாற்று பிண்ணனியுடன் எடுக்கப்பட்டிருந்தாலும் அது தசாவதாரத்தைப் போல அன்று. அந்த கால கட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கற்பனைக் கதை அவ்வளவே. சிலருக்கு அந்த 12 ம் நூற்றாண்டு சம்பவம் எதற்காக படத்தில் காட்டுகிறார்கள் என்று புரியவில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு. அவர்களுக்கு டெக்டாணிக் பிளேட்ஸ் பற்றியும் butterfly effect பற்றி இணையத்தில் சிலர் வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உதவியை அல்லது கூகிளின் உதவியை நாடவும்.

சரி திரைப்படத்திற்குத் திரும்புவோம். கமல் நாத்திகம் பேசுவதாக இந்த படத்தில் தோன்றினாலும் அவர் அடிப்படையில் “அடியேன் ராமானுஜ தாசன்” சொல்வதைத் தான் சொல்கிறார். ஆத்திக கோணத்தில் - மனிதர்களை மிகப்பெரிய அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக தன்னைத் தானே பல நூற்றாண்டுகளுக்கு மூன்னதாக பெருமாள் தன்னை மூழ்கடித்துக் கொண்டதாகத் தான் கதையை முடிக்கிறார். எந்த ஒரு செயலும் ஏதோ ஒரு காரணத்துக்காகத் தான் கடவுளால் நிகழ்த்தபடுகின்றது என்ற ஆன்மிக சிந்தனையையே இந்த படமும் நிலை நாட்டுகிறது. ஒரு கட்டமைப்பில் ஒருவரோடு ஒருவர் பிணைக்கப்பட்டு ஒருவரோடு ஒருவர் சார்ந்த படி அமைந்திருக்கிறது இந்த உலக வாழ்வு. இந்த கட்டமைப்பை உடைக்க நாம் செய்யும் செயல்கள் எதிர்காலத்தில் இந்த உலக மக்களின் வாழ்வில் மாற்ற முடியாத மாற்றங்களை ஏற்படுத்தும். அறிவியல் இந்த கட்டமைப்பை chaos theory கொண்டு முன் வைக்கிறது, ஆன்மிகம் கடவுளைக் கொண்டும் விதியைக் கொண்டும் முன் வைக்கிறது.

இந்த chaos theory பொதுவாக time travel சம்பத்தப் பட்ட படங்களில் ஒரு காண்செப்டாக ஹாலிட்டில் பயன்படுத்துகிறார்கள் (back to the future, butterfly effect போன்ற படங்கள்). இதை சமுக கட்டமைப்பு சார்ந்த திரைப்படத்தில் பயன்படுத்தப் படுத்தி ஒரு கமர்ஷியல் படம் பண்ணியிருப்பது கமலின் சாமர்த்தியம். சுனாமி வருவதை நியாயப்படுத்த ஒரு உயிர்கொல்லியை உருவாக்கி அந்த உயிர்கொல்லியை செயலியக்கச் செய்ய Nacl (உப்பு) தான் மாற்று என்று கதைக்கான விதியை நிர்ணயித்து விட்டு அதைச் சுற்றி அமெரிக்கா, டோக்கியோ, சிதம்பரம், சென்னை என்று பல ஊரையும் சுற்றி கதையை உருவாக்கியிருக்கிறார் கமல்.

இந்த படத்தில் பத்து கதாபாத்திரங்கள் செய்திருக்கிறார் – வில்லனைபிடிக்க மாறு வேடத்திமாக ஒரு மச்சத்தை ஒட்டிக் கொண்டு கண்ணாடி அணிந்து கொண்டு ஹிரோ செல்வது பொதுவாக ஒத்துக் கொள்ளப்படும் தமிழ் சினிமா சூழலில், கதாபாத்திரத்துக்கு கதாபாத்திரம் உடல் மொழியையும் உச்சரிப்பையும் உருவத்தையும் மாற்றியிருக்கும் கமலுக்கு வந்தனம். பல்ராம் நாயுடு, பூவராகன், fletcher மூன்று கதாபாத்திரத்திற்கான மேக்கப்பும் ஆரம்பத்தில் eye ball popping-ஆக இருந்தாலும் படம் செல்ல செல்ல கதாபாத்திரம் மட்டுமே கண் முன் நிற்கிறது. ஜப்பனிய கேரக்டரின் மேக்கப்புக்கு இன்னும் கொஞ்சம் மெணக்கெட்டிருக்கலாம். எனக்கு முக்கியமாக பிடித்தது வசனம் தான். குருதிப் புணல் போல சீரியஸ் இண்வெஸ்டிகேஷன் செய்யும் போலிஸ்காரர்கள் இல்லாமல் காமெடி செய்யும் ரா ஆசாமி தான் இதில் தீவிரவாதியைப் பிடிக்க மெனக்கெடும் ஆசாமி. எல்லா கேரக்டருமே காமெடி பண்ணுகிறார்கள் – எல்லாமே புரிதலில்லாமையால் ஏற்படும் காமெடி – முற்றிலும் டயலாக் காமெடியாக செய்திருக்கிறார். இந்த காமெடி படத்தில் இல்லையென்றால் படம் இப்போது சென்றடைந்திருக்கும் அளவு கூட சென்றடைந்திருக்காது. ஜார்ஜ் புஷ் கேரக்டரை அவரால் முடிந்த வரை நக்கலடித்திருக்கிறார்.

இது போன்ற திரைப்படங்கள் தான் இன்றைய சூழ்நிலைக்கு தமிழ் சினிமாவுக்குத் தேவை. வெயில், காதல், தசாவதாரம், ஹேராம் போன்ற திரைப்படங்கள் அவை எடுக்கப்பட்ட genre-யின் உச்சத்தைத் தொடாவிட்டாலும் அந்த் genre-யின் அடுத்த கட்டத்துக்கு தமிழ் சினிமாவை அழைத்துச் சென்றிருக்கின்றன. இவை மிகவும் முக்கியமான மாற்றம். அதன் வழக்கமான நாடகத்தன்மையிலிருந்தும் பன்ச் டயலாக் பேசும் பால்வாடி ஹீரோக்களிலிருந்தும், இரட்டை அர்த்த வசனத்தையே ஆதாரமாகக் கொண்டு காமெடி செய்யும் காமெடியன்களிலிருந்தும், உரத்த குரலில் கத்தி கத்தி வில்லத்தனம் செய்யும் கோமாளிகளிலிருந்தும் இன்னும் சில வருடங்களில் தமிழ் சினிமா முற்றிலுமாக மீள்வதற்கான அறிகுறிகள் இவை. இது போன்ற முயற்சிகள் வரவேற்கப் படவேண்டியவை. இந்த படத்திற்கு செய்யப்பட்டிருக்கும் மார்கெட்டிங் தகும். தமிழ் சினிமாவின் தரம் இது போன்ற படங்களால் உயர்ந்து கொண்டே தான் இருக்கின்றது – அந்த முயற்சி உலகத்தரத்தோடு எவ்வளவு கீழே இருந்தாலும்.

இந்த படத்தில் கோட்டை விடாத இடங்களே இல்லையா என்றால் – அடிமடியிலேயே கை வைக்க வேண்டியிருக்கிறது. கமல், take it with a bag of Nacl.

- Butterfly effect என்பதை இந்தத் திரைக்கதை பயன்படுத்தியிருப்பதாக கமல் நம்பிருந்தாலும், butterfly effect என்பது அதிக முக்கியத்துவமில்லாத ஒரு சம்பவத்தின் தொடர்ச்சியாக ஒரு மிகப்பெரிய செயல் நிகழ்வதை குறிக்கும். ஒரு கடவுளை அதன் கோயிலிலிருந்து அகற்றுவது என்பது அவ்வளவு சின்ன விஷயமா என்ன ? Butterfly effect –ஐப் பொருத்தவரை 10-19 என்பது ஒதுக்கக்கூடிய இலக்கமல்ல. அந்த அளவிற்கு முக்கியமில்லாத ஒரு செயலாக மூலம் இருக்க வேண்டும். அந்த அதிமுக்கியமில்லாத செயலின் தொடர்ச்சியாக நிகழும் செயல்கள் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்குவதாக இருக்க வேண்டும். இந்த படத்தில் கமலஹாசன் கையாண்டிருக்கும் உத்தியை butterfly effect என்று சற்று அரைகுறையாகத் தான் ஏற்றுக் கொள்ள முடிகிறது. எனக்குத் தெரிந்த வரை இந்த Butterfly effect-ஐ 12 B (மறைந்த இயக்குனர் ஜீவா எடுத்த படம் – Sliding doorsஇன் தழுவல்) இன்னும் சரியாக பயன்படுத்தியிருக்கிறது.
- தொண்டையில் நுழைந்த புல்லட் கரைக்டாக டியூமரை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றது எல்லாம் – கோவிந்த ராமசாமி பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் South end of the north facing horse. இன்னும் எத்தனை நாளைக்குத் தான் நாம் “It is a medical miracle” வசனத்தைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமோ தெரியலையே, பெருமாளே !
- படத்தின் ஓட்டத்துக்கு காமெடி உறுதுணயாக இருந்தாலும், மிகவும் முக்கியமான சமயங்களிலும் காமெடி வசனங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது காமெடியாகத் தான் இருக்கின்றது.
- கல்லை மட்டும் கண்டால், முகுந்த முகுந்தா தவிர வேறு எந்த பாட்டும் மனதில் நிற்கவில்லை

இது ஒரு வணிகப்படம். மூன்று மணி நேரம் இருக்கையில் உட்கார வைத்து சிரிக்க வைத்து, ஜாலங்கள் காட்டி, பின்னர் டாட்டா காட்டும் ஒரு கமர்ஷியல் படம். நீங்கள் இது வரை பார்த்திராத ஒரு தளத்தில் இயங்கும் படம் – நல்ல அனுபவமாக அமையக்கூடிய ஒரு வணிக படம் – அவ்வளவே. இதை ஒரு அறிவியல் புணைவாகவோ, வரலாற்று படமாகவோ, முக்கியமான சமுக பிரச்சணையை முன் வைக்கக்கூடிய படமாகவோ எதிர் பார்த்துக் கொண்டு சென்றால் முழு திருப்தி தரக்கூடிய தமிழ் படத்தை பார்க்க இன்னும் குறைந்தது 5 ஆண்டுகளாவது நாம் காத்திருக்க வேண்டியிருக்கும். இப்போது கிடைக்கும் தரத்திலேயே அதிக பட்ச தரமான தமிழ் படம் இது.

4 Responses to “தசாவதாரம்”

விஜய் said...

ஹலோ சந்திரசேகரன்,
நானும் நேற்றுத்தான் இப்படத்தைப் பார்த்தேன். என்ன தான் கமல் நாத்திகவாதியாக இருந்தாலும் படத்திலே கூட கடவுள் இருக்கிறாரா என்று கேள்விகள் கேட்டாலும், ஒரு ஆத்திகக் கருத்தைத் தான் தெரிவித்திருக்கிறார்.
உங்கள் விமர்சனம் சுஹாசினி பேசும் படத்தைவிட நன்றாகவே இருக்கிறது. வாழ்த்துக்கள்.

விஜய்

Saravana said...

//ஹாசினி பேசும் படம் ரேஞ்குக்கு இல்லாவிட்டாலும்//

What are you refering to? Are you talking about the movie Pesum Padam, in that case how is it related to Suhasini?

தமிழ் சினிமாவையும் (இப்போது உலக சினிமாவையும்) சுஹாசினி அலசும் நிகழ்ச்சி. ஜெயா டி வி யில் வருகிறது.

Saravana said...

oh thankyou, have'nt watched Jaya TV, was totally unaware about that show. My bad.

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman