Adsense

குப்பை கூட்டும் ஆயா குப்பைத்தொட்டியை 2 செண்டிமீட்டர் இன்று தள்ளிவைத்ததால் எதிர்காலத்தில் உங்களுக்கு குழந்தை பிறக்கப்போகிறது


யுகமாயினியின் ஜூலை இதழில் வெளிவந்த கட்டுரை.

கணிதத்தில் (சிலர் இதை இயற்பியலில் என்று சொல்ல வேண்டும் என்று சொல்வார்கள்) ஒழுங்கின்மை கோட்பாடு (Chaos Theory) என்று ஒன்று உண்டு. அதாவது உலகத்தில் இருக்கும் எந்த ஒரு விஷயமும் ஒரு ஒழுங்குமுறைக்கு உட்பட்டத்தாகவே இருக்கின்றது. ஒரு விஷயத்தின் மூலத்தை மிகச்சிறிய அளவில் மாற்றத்திற்கு உட்படுத்துவதால் முற்றிலும் மாறுபட்ட விளைவை ஏற்படுத்த முடியும். இந்த ஒழுங்கின்மை கோட்பாடில் மூலத்தை மாற்றுவதால் ஏற்படும் மாறுபட்ட விளைவுகளை Butterfly Effect என்று சொல்வார்கள். எளிமையாக சொல்லவேண்டுமென்றால், இந்த கட்டுரையை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கட்டுரையை படித்ததால் இதில் நான் குறிப்பிட்டிருக்கும் இந்த ஒழுங்கின்மை கோட்பாட்டின் மேல் உங்களுக்கு ஒரு ஆர்வம் ஏற்பட்டு அது குறித்து நிறைய படித்து உங்கள் தோழர்கள் குழாமில் பேசுவதால் அந்த குழாமில் இருக்கும் உங்கள் எதிர் பாலின நண்பர் ஒருவர் உங்களை அறிவு ஜீவி என்று நம்பி உங்களை கல்யாணம் செய்து கொண்டு அதன் மூலம் உங்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நான் இந்த கட்டுரையை இப்போது எழுதக் காரணம் இப்போது என்னை சந்திக்க வரவேண்டிய என் நண்பன் இன்னும் வராததே. அவன் வரும் வரை என்ன செய்வது என்று எனக்குத் தெரியாததால் இதை எழுத தலைப்பட்டிருக்கிறேன். அவன் கிண்டி தாண்டும் போது ஒரு போட்டோ பிரேம் மாற்றும் கடை வாசலில் கவனிக்காது போடப்பட்டிருந்த ஒரு ஆணி குத்தி அவன் மோட்டார் சைக்கிள் டயர் பஞ்சர் ஆகி இருப்பதால் அவனால் நேரத்திற்கு வர முடியவில்லை. குப்பை கூடையில் போட்டிருக்க வேண்டிய ஆணி சாலையில் விழுந்திருக்கிறது. அந்த பிரேம் மாற்றும் கடையில் குப்பை கூட்டும் ஆயா வழக்கமாக வைக்கும் இடத்திலிருந்து குப்பைத் தொட்டியை 2 செண்டிமீட்டர் தள்ளி வைத்ததால், பிரேம் மாற்றுபவர் பழைய சட்டத்திலிருந்து பிடுங்கி எறிந்த ஆணி குப்பைத் தொட்டியில் விழாமல் சாலையில் விழுந்தது என்று அனுமானிக்கலாம். அப்படி அனுமானித்தால் இந்த நிகழ்வை ஒரே வரியில் சொன்னால், “குப்பை கூட்டும் ஆயா குப்பைத்தொட்டியை 2 செண்டிமீட்டர் இன்று தள்ளிவைத்ததால் எதிர்காலத்தில் உங்களுக்கு குழந்தை பிறக்கப்போகிறது” !!! குப்பைத் தொட்டியை வைப்பது என்பது மூலம் (initial parameter). அந்த மூலம் (எவ்வளவு சிறியதாக இருந்தாலும்) மாறுவதால் எதிர் காலத்தில் பெரிய மாற்றங்கள் உண்டாகலாம். அவ்வளவு ஏன் ஆண் பெண் என்பது என்ன ஒரே ஒரு க்ரோமோசோம் வித்தியாசம் தானே. இதை தான் அறிவியல் butterfly effect என்கிறது.

இந்த butterfly effect-உம் chaos theory-உம் பல அறிவியல் திரைப்படங்களில் பயன்பட்டிருக்கிறன. அல்லது இவற்றை ஆதாரமாகக் கொண்டு பல படங்கள் எடுத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் Butterfly effect என்ற படத்தைப் உங்களுக்கு நான் சிபாரிசு செய்வேன். அந்த படத்தில் இருக்கும் பெரிய சிக்கல் என்னவென்றால் நீங்கள் butterfly effect என்றால் என்ன என்று தெரியாமல் படத்தைப் பார்த்தால் தலை கால் புரியாது. என்ன நடக்கிறது என்பதே குழப்பமாக இருக்கும். சிறிய வயது டயரியை புரட்டும் ஒருவன் தன் சின்ன வயதில் நடந்த ஒவ்வொரு செயலையும் மாற்றுவதால் அவன் வாழ்கை எந்த விதமான மாற்றத்திற்கு ஆளாகிறது என்ற சிந்தனையே இந்த படம். சிறிய வயதில் அடிக்கடி (தீவிர உணர்வு நிலைக்கு ஆளாகும் போது) மயக்கமாகும் ஒரு சிறுவனுக்கு அவனுடைய் சைக்காட்ரிஸ்ட் நினைவுகளை பத்திரப்படுத்த டயரி எழுதும்படி சொல்வதால் அவனுக்கென்று ஒரு டயரி வைத்துக் கொள்கிறான். பிற்காலத்தில் அவன் அந்த டயரியை புரட்டுவதால் அந்த டயரி மூலம் அவன் தன் சிறிய வயதிற்கு திரும்ப முடிகிறது. அவன் சின்ன வயதில் செய்த சிறிய தவறுகளையும் அதன் விளைவுகளையும் எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும்படியாக மாற்ற முயற்சிப்பதால் ஏற்படும் பின்விளைவுகள் அவனது நிகழ்காலத்தை (அதாவது கடந்தகாலத்தின் எதிர்காலத்தை) எப்படி பாதிக்கிறது என்பது புணைவு. இதில் முக்கியமான விஷயம் இந்த திரைப்படத்தில் அறிவியல் திரைப்படங்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் time travel தான் உபயோகிக்கப்பட்டிருக்கிறது என்றாலும், கடந்த காலத்தைய நிகழ்வை மாற்றியமைப்பதினால் அந்த கதாபாத்திரத்தின் வாழ்க்கையும் அந்த கதாபாத்திரத்திரத்தை சுற்றியிருப்பவர்களுடைய வாழ்க்கையும் அடையும் மாற்றங்கள் தெளிவாகவே இருக்கும். மற்றபடி புற சூழ்நிலைகள் பெரிதாக மாறுவதாக காட்டியிருக்க மாட்டார்கள்.



நீங்கள் எதிர்காலத்தில் நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு செயல் (எவ்வளவு சிறிய செயலாக இருந்தாலும் சரி) நீங்கள் நினைத்தபடி நினைத்த நேரத்தில் நடக்க வேண்டுமென்றால், சராசரியாக 1 ட்ரில்லியன் செயல்கள் துணை செய்ய வேண்டும் (அதாவது சரியாக நடக்க வேண்டும்). இந்த செயல்களில் எதேனும் ஒன்று தவறானால் கூட நீங்கள் நினைத்தது நினைத்த நேரத்தில் நடக்காது. இதில் குழப்பம் என்னவென்றால் அப்படி நிகழ வேண்டிய செயல்களில் பல என்னவென்றோ, நிகழ்த்துபவர் யாரென்றோ உங்களுக்கு அந்த செயல் நிகழ்ந்து முடியும் வரை தெரியாது (நிகழ்ந்து முடிந்த பின் ஓரளவு தெரியலாம் – முழுதாக தெரிந்தால் நீங்கள் கடவுள்). ஆனால் நீங்கள் வெற்றி பெற அவையெல்லாம் சரியாக நிகழவேண்டும். அப்படி இருக்கும் போது எந்த ஒரு வெற்றிக்கும் நான் தான் மூல காரணம் என்று சொந்தம் கொண்டாடுவது சற்றே அபத்தமாகத் தான் தோன்றும். உங்கள் வெற்றியோ தோல்வியோ சார்ந்திருக்கும் செயல்கள் எவையென்றோ, அவற்றை நிகழ்த்தியவர் யாரென்றோ, உங்கள் செயல் சரியாக நிகழவில்லை என்று நீங்கள் root cause analysis செய்யும் போது தான் உங்களுக்கு தெரிய வரும். ஒரு வேளை time travel machine போன்ற ஒரு கருவியின் துணையுடன் சென்று எதோ ஒரு செயலை நீங்கள் சரி செய்தால் கூட நிச்சயம் நடக்க வேண்டியது நடக்கும் என்று சொல்வதற்கில்லை. ஒரு தர்க்கத்திற்காக எல்லா செயல்களையும் நீங்கள் சரி செய்துவிட்டீர்கள் என்றாலும் நீங்கள் நடக்க வேண்டும் என்று நினைத்த செயலின் தேவை தீர்ந்து விடலாம்.

நிகழும் எதுவுமே ஒரு விதமாக வேறு ஏதோ ஒன்றை எப்போதுமே சார்ந்து இருப்பதாக இருக்கிறது. நீங்கள் கண்ணை சிமிட்டுவது முதல் மூன்றாம் உலக யுத்தத்திற்கு திட்டம் தயாரிப்பது வரை எல்லாமே ஒரு கட்டுமானத்திற்குட்பட்டது. You are destined to do that. எதுவுமே நீங்களாக செய்யவில்லை. நாம் அனைவரும் யாருக்கும் புலப்படாத கட்டத்திற்குள் காய்களாக நகர்ந்து கொண்டிருக்கிறோம். உங்கள் சிந்தனைகள் உங்கள் சிந்தனைகள் அல்ல. அவை உங்களால் சிந்திக்கப்படுகின்றன, அவ்வளவே. அந்த சிந்தனையின் தேவை, வீரியம் மற்றும் வீச்சை நீங்கள் முடிவு செய்வதில்லை. உங்களை சார்ந்த அல்லது நீங்கள் சார்ந்திருக்கும் வினைகளே முடிவு செய்கின்றன. அனால் அந்த வினைகளை முடிவு செய்வது நீங்கள் அல்ல – கண்ணுக்கும் அறிவுக்கும் புலப்படாத எத்தனையோ காரணிகள். அதனால் Transitivity Rule-இன் படி உங்கள் சிந்தனை உங்கள் சிந்தனை அல்ல. அந்த சிந்தனை விளைவாய் நீங்கள் படைக்கும் எதுவும் உங்கள் படைப்பு அல்ல !!! அதனால் தான் ஆன்மிகவாதிகள் இறைவன் அருளால் எல்லாம் நிகழ்ந்தது என்று தன்னை மிஞ்சிய சக்தியை போற்றுகிறார்கள், “நடப்பதெல்லாம் நல்லதுக்கே” என்று சொல்கிறார்கள். இங்கிருந்து கிளைத்தால் ஒரு metaphysical discussion-ஆக இது மாறக்கூடிய அபாயம் இருப்பதால் இத்துடன் முற்றுப்புள்ளி.

சரி, இப்போது சொல்லுங்கள் ஜீவா எடுத்த 12 B (Sliding Doors-இன் தழுவல்) திரைப்படமும், குஷி, அருணாச்சலம் (!!!) திரைப்படங்களும் அறிவியல் புணைவா இல்லையா.

பி கு: நான் butterfly effect திரைப்படத்தின் அறிமுகத்தை இங்கே எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கடைசியில் வேறு ஏதோ ஒன்றை எழுதியிருக்கிறேன். இதை எழுதி முடித்தவுடன் Butterfly effect திரைப்படத்தின் அறிமுகம் தேவையில்லை என்றே தோன்றுகிறது :-).

No response to “குப்பை கூட்டும் ஆயா குப்பைத்தொட்டியை 2 செண்டிமீட்டர் இன்று தள்ளிவைத்ததால் எதிர்காலத்தில் உங்களுக்கு குழந்தை பிறக்கப்போகிறது”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman