Adsense

சுஜாதாஎங்கிருந்து தொடங்குவதென்றே தெரியவில்லை.

16 வயதில் காகித பக்கங்கள் மூலமாக மட்டுமே எனக்கு பரிச்சயமாகி இருக்கும் சுஜாதா ஜீன்ஸ் பேண்ட் அணிந்த, ப்ரெஞ் பியர்ட் வைத்த, சற்றே தடிமனான கோல்டன் ப்ரேம் போட்ட கண்ணாடி அணிந்த, முன்வழுக்கை விழத்துவங்கிய ஒரு 40 வயது மனிதர். யாரையும் திட்ட மாட்டார். He can keep others guessing. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நைசாக கிண்டல் அடிக்கத்தெரிந்தவர். ஒரு அறிவியல் தியரியை ஒரு கதையின் மூலம் விளக்கத் தெரிந்தவர். அதைத்தாண்டிய ஒரு பிம்பத்தை என்னால் அவரது புகைப்படங்களை பார்க்காமல் இருந்தால் கற்பனை செய்திருக்க முடியாது.

மண்ணைப் பற்றிய பதிவுகளை எந்த விதமான பெரிய Hang ups உம் இல்லாமல் பதிவு செய்தவர் சுஜாதா. சமயத்தில் எனக்கு சுஜாதாவின் எழுத்துக்கும் R K Narayan இன் எழுத்துக்கும் ஒற்றுமைகள் தோன்றும். குறிப்பாக ஸ்ரீரங்கத்து தேவதைகளில் அவர் காட்சியாக விவரித்து இருக்கும் கிரிக்கெட் பற்றிய குறிப்புகளுக்கும் R K Narayanஇன் Swami and Friendsஇல் விவரித்து இருக்கும் காட்சிகளும் அற்புதமான பதிவுகள். சிறு நகரங்களிலிருந்து வந்த என் போன்றவனுக்கு அவர் காட்டிய காட்சிகள் எல்லாம் கற்பனை கிடையாது. மதியான வெயில், கிரிக்கெட் மட்டை, திண்ணைப் பேச்சு பேசும் மாமா, ரகசிய உறவுகள் கொண்ட மாமாக்கள் – எல்லாமே நிஜம். R K Narayanக்கு ஒரு மால்குடி; சுஜாதாவுக்கு ஸ்ரீரங்கம்.

எனக்குத்தெரிந்து அவர் இலக்கியத்தரத்தை நிலை நிறுத்துகிறேன் பார் என்ற தோரணையில் எல்லாம் எழுதியது இல்லை. எப்படி எழுதினால் நாலு பேர் படிப்பார்கள் என்ற வித்தையை நன்றாக தெரிந்து வைத்திருந்தார். அவர் விஷயத்தை ஆழமாக அலசியதைக் காட்டிலும் பரவலாக அலசுவார். ஒரு விஷயத்திலிருந்து மற்றொரு விஷயத்துக்கு தாவும் போது எகிறி குதித்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தாமல் இயல்பாக நகர்தலைப்போலவே தோன்றச் செய்யும் லாவகம் அவருக்குத் தெரியும். ஒரு வேளை உண்மையான வாழ்விலும் அதிகம் அலட்டிக்கொள்ளாத ஒரு மனிதராகவே அவர் இருந்திருப்பாரோ என்ற எண்ணம் எனக்குத் தோன்றியதுண்டு.

சுஜாதா தமிழுக்கு கொடுத்த மிகப்பெரிய கொடை என நான் கருதுவது அறிவியல் புணைகதைகள். யாரும் எழுத முற்படாத தளத்தில் அவர் மட்டுமே வெகுகாலம் இயங்க நேர்ந்தது துரதிருஷ்டம் தான். இன்றைக்கும் தமிழில் அறிவியல் கதைகள் என்றால் சுஜாதா என்பது போன்ற ஒரு தோற்றமே எஞ்சி இருக்கிறது. ஒரு வேளை அவர் அறிவியல் படித்தவராக இருந்ததால் அறிவியல் புணைக்கதை என்பது அவருக்கு இயல்பானது என்று நினைக்கிறேன். சுஜாதா பல சின்ன சின்ன, அதே சமயம் சிக்கலான டெக்னாலஜியை ஆதாரமாக வைத்து அறிவியல் கதைகள் செய்திருக்கிறார் – உதாரணத்திற்கு Holographics (கொலையுதிர் காலம்) முதல் இன்றைய சிவாஜியின் self destructive algorithm வரை எத்தனையோ சின்ன சின்ன டெக்னாலஜிகள். எனக்குத் தெரிந்து Space City Sigma இந்தியாவில் வந்த புதிதில் டி டியில் தமிழில் என் இனிய இயந்திரா எடுத்தார்கள் (ஜூனோ, சிபி, நிலா).
என்னுடைய கம்பெனியில் சில இளம் இஞ்சினியர்களுக்கோ சில எம் பி ஏக்களுக்கோ டெக்னாலஜி பாடம் எடுக்கும் போது நான் tape drive-ஐ விளக்க இந்த உதாரணத்தை தான் சொல்லுவேன் – “விக்ரம் படம் பாத்திருக்கியா. அதுல லிசிய பாக்க கமல் ஐ ஐ டி போற சீன்ல பெரிய சக்கரம் மாதிரி லிசிக்கு பின்னாடி இருக்குமே அதான் டேப் டிரைவ்” (அந்த சீன்ல உங்களுக்கு பாக்க வேற விஷயமே கிடைக்கலையா ?!). சுஜாதா கைங்கரியம். இன்றைக்கு தமிழில் அறிவியல் கதை எழுத நினைக்கும்/ எழுதிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் சுஜாதாவின் கதைகள் தான் முதல் பாடம்.

அவர் வயதுடைய பல எழுத்தாளர்கள் தளர்ந்து போய்விட்டாலும், சுஜாதா தொடர்ந்து இயங்குதலுக்கு காரணம் அவரது பன்முகத்தன்மை தான் என்பது என் மாறாத எண்ணம். எத்தனை துறைகளை மனிதர் தொட்டிருக்கிறார். ஒரு வேளை இந்த பன்முகத்தன்மை தான் அவர் இத்தனைப் பேரை சென்றடைய காரணமோ. அவரது வாழ்வில் அவர் எழுதிய சுஜாதா தரத்திலில்லாத எழுத்துகளை – (யவனிகா போன்ற நாவல்கள், சில்வியா தொடர், கற்றதும் பெற்றதுமில் சில பகுதிகள்) நீக்கிவிட்டு மீதமிருப்பதற்காகவே அவர் இன்னும் 100 ஆண்டுகள் நினைவில் வைத்துக் கொள்ளப்படுவார்.

சுஜாதாவை அறிவு ஜீவி என்ற கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. அவர் மேதையாக இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? அவர் தனது எழுத்தால் அவர் தோட்ட மனிதர்கள் எத்தனை என்பது அவரது மரணத்துக்காக அஞ்சலியாக அவர் குறித்த தனது நினைவுகளை/ சினேகத்தை/ வெளிப்படுத்துவதையே கடமையாக எத்தனைப்பேர் கொண்டிருக்கிறார்கள் என்பதை கணக்கிட்டாலாயே தெரியும். அது சரி, அவர் அறிவு ஜீவி என்பதற்காகவா நான் இந்த பதிவை எழுதுகிறேன்.

கடைசியா சுஜாதாவிடம் ஒரு கேள்வி.
சார், அந்த மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கை உங்க வைகுண்ட வாசத்துல மஹா விஷ்ணுகிட்டயாவது சொல்வீங்களா ?

2 Responses to “சுஜாதா”

KC,

I am also regular reader of sujatha and fall in love with columns about science and day to day life " katrathum petrathum" in anatha vikatan..


http://www.desikan.com/blogcms/?item=144&category=sujatha

http://www.desikan.com/blogcms/?item=63

http://www.desikan.com/blogcms/?item=follow-up

i am a unfortunate reader of sujatha never had a opportunity to meet him...;(

sathish said...

sir,suja sir style il avarathu ninaivukal irunthathu. last line la kanner vara vechutinga.

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman