Adsense

பாரதி என்னும் துரதிருஷ்டசாலியின் நினைவுக்கு


"என்னவோ தெரியவில்லை. சிலருக்கு தான் அப்படிபட்ட ஜாதகம் அமைகிறது. கொஞ்சம் அதிகப்படியாகவே துரதிருஷ்டம் செய்தால் தான் இப்படி பட்ட ஜாதகம் அமையக்கூடும்.
பாரதியும் அப்படிதான். மனம் போன போக்கில் வாழ்ந்து, யாராலும் யோசிக்க முடியாததை யோசித்து, யோசிக்கக்கூடிய திராணியில்லாத ஒரு சமுகத்துக்கு கவிதைகள் செய்து கொடுத்து (அதை வைத்து பின் வரும் தலைமுறைகள் இசையமைத்து, வலைபதிவு எழுதி, கேசட் போட்டு, தமிழ் கச்சேரி பாடி, காசு பண்ணி பிழைத்துக் கொள்ளட்டும் என்று), அல்பாயுசில் செத்து - என்ன பண்ணி என்ன பயன்.
பாரதி, உன் ஜாதகத்தில் ஏதேனும் ஒரு கட்டமேனும் உனக்கு யோகம் கொடுக்கும் கட்டமாக இருக்குமேயானால் நீ ரஜினி காந்த் பிறந்த நாளுக்கு முந்தைய நாள் பிறந்திருப்பாயா ? ரஜினிக்கு வாழும் காலத்தில் பாலாபிஷேகம் செய்து பழக்கப்பட்ட நாங்கள் போயும் போயும் உனக்கு உன் பிறந்த நாளை நியாபகம் வைத்துக் கொண்டா கொண்டாடுவோம். அல்லது நீ எதாவது ஜாதி கட்சியின் பிரதிநிதியாகவாவது வாழ்ந்திருக்க வேண்டும் - மவுண்ட் ரோடில் சிலை வைத்து, அரசு நிமித்தமாக ஆட்சியில் இருக்கும் போதும் இல்லாத போதும் மாலை போடுவோம் - அவ்வளவு தான் இல்லை சினிமாவுக்காவது பாட்டெழுதிவிட்டு செத்திருக்கக்கூடாதா."

இந்த உணர்ச்சியே என் மனதில் எழுந்தது இன்று காலை முதல். இன்று காலை முதல் எனக்குத் தெரிந்த வரை பாரதியை நினைவில் வைத்த ஊடகம் FM Rainbow மட்டுமே. பாரதியார் பாடல்களாக வரிசையாக போட்டுக் கொண்டிருந்தனர். வாழ்ந்த காலத்திலும், அதன் பின்னும் அதிகமாக மதிக்கப்படாத இந்த கவிஞனைப் பற்றி நினைக்கும் போது ஏற்படும் ஆதங்கம் தாகூரை நினைக்கும் போது இன்னும் அதிகமாகிறது. வாழும் போதும், இறந்த பின்னரும் தாகூரைக் கொண்டாடும் வங்காளிகளைக் கண்டால் எங்களை விட நீங்கள் புத்திசாலிகளாக இருந்திருக்கிறீர்களே என்று சொல்லத் தோன்றுகிறது. தாகூரைப் பற்றிய முழுமையான பதிவு இன்றும் இருக்கிறது. NDFC சார்பாக தாகூரைப் பற்றிய ஆவணப்படம் சத்யஜித் ரேயால் எடுக்கப்பட்டது (அந்த கவிஞனுக்கு எல்லாமே அமைந்திருக்கிறதய்யா). இன்று நம்மிடையே இருப்பதெல்லாம் இரண்டாம் தரத்திலான ஒரு ஆவண பதிவு (பல நூறு கோடிகளைப் போட்டு படம் பண்ண முன் வரும் AVMகளும், சங்கர்களும், மணிரத்தினங்களும் பாரதியில் commercial viability பார்க்கவில்லை போலும்).

தாகூரின் சிறுகதைகளை தமிழில் பெயர்த்த கவிஞன் பாரதி (தாகூர் கதைகள் - சந்தியா பதிப்பகம் - விலை 30 /-). அந்த சிறுகதைகளின் நுட்பத்தை நவினத்தை மிகவும் அறிந்தவனாக வாழ்ந்திருக்கிறான். ஒரு படைப்பளிக்கு மிகப் பெரிய பாராட்டே அந்த படைப்பின் வீரியத்தை முழுவதுமாக உள் வாங்கிய வாசகன் தான். அந்த வகையில் தாகூர் அதிர்ஷ்டம் செய்தவர் தான். இந்த அனுபவத்துக்கு சான்று யதுகிரி அம்மாள்* எழுதிய "பாரதி நினைவுகள்"-இல் கிடைக்கிறது. கீழே கொடுத்திருப்பவை அந்த புத்தகத்திலிருந்த செல்லம்மாவுக்கும் பாரதிக்குமான உரையாடல்.
பாரதி: க்ஷுதித பாஷாணம் என்றால் பசி கொண்ட கற்கள் அல்லது பாறைகள் என்று சொல்லலாம். ரவீந்திர நாதரின் கதை அது. அப்படிப்பட்ட கதைகளை மொழி பெயர்பதும் நல்லதே. பாவ கர்பிதமான துணுக்குக் கதைகள்.
செல்லம்மா: அன்று சொன்னீர்களே, மான பங்கம் அல்லது கிரிபாலா கதை. அதில் ஆரம்பம் சரியாக இல்லை. முடிவு சரியாக இல்லை; புதிர் போல இருக்கிறது. "கோபிநாதன் கை கால்களை உதைத்துக் கொண்டு அவளைக் கொல்லுவேன்" என்றான். திரை விழுந்தது" என்று முடிகிறது கதை. இது எங்களுக்கு சரியாக புரியவில்லை.
பாரதி: இல்லை. செல்லம்மா, நன் வழக்கம். "ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தான்" என்று ஆரம்பித்து "சௌக்கியமாக இருந்தான்" என்று முடிப்பது. ஆனால் இந்த புதுவழியோ, புயற்காற்றுப் போல் ஒரு காட்சியைக் காட்டி மறைந்து விடுகிறது. நாமே சில நேரம் யோசனை செய்தால் பொருள் தெளிவாக தெரியும். புத்தி கூர்மைப்படுத்த இது ஒரு வழி. இப்படி சில கதைகள் படித்தால் பிறகு பழக்கமாகி விடும்.
நவின கதைகளின் சூட்சுமத்தை அப்போதே தெரிந்திருக்கிறான் பாரதி. நவின கதைகளுக்கும் கவிதைகளுக்கும் அவன் செத்த பிறகே புதிர் அந்தஸ்து கிடைத்திருக்கிறது.


கடல் கடந்து பாரதியின் கவிதைகளை எடுத்துச் செல்ல நம்மால் முடியவில்லை. பாப்லோ நெருதாவை இன்று தமிழ்நாட்டில் கவிதை எழுதும் பலருக்குத் தெரியும். பாரதியை சிலியில் எத்தனை இலக்கியவாதிகளுக்கு தெரியும். லண்டனில் ? ஜப்பானில் ?

நம்மால் பாரதியை ஒரு தமிழைத் தாண்டி எடுத்துச் செல்ல முடியவில்லை. ஒரு தீவிரமான task force கொண்டு இந்த பணியை செய்யும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றிலாமல், நம் அன்றாட வாழ்வில் சில சின்ன சின்ன உத்திகளைக் கையாளலாம்
- மேலை நாடுகளில் படிக்கும் பாரதியால் ஈர்க்கப்பட்ட தமிழ் மாணவர்கள் ஆராய்ச்சி நூலை சமர்பணம் செய்யும் போது பாரதியின் கவிதை வரிகளை (மொழி பெயர்த்த வரிகள்) பயன்படுத்தலாம். இதற்கு மொழிபெயர்க்கப் பட்ட சிறந்த வரிகளுக்கான தொகுப்பு ஒன்று தேவை
- மேலை நாடுகளில் வாழும் தமிழர்கள் பாரதியினால் ஈர்க்கப்பட்டவரானால் (நான் வாசிக்கும் எவ்வளவு வலைப்பதிவுகள் பாரதியின் புகைப்படத்தையோ, கவிதை வரியையோ தாங்கி இருக்கின்றன) பாரதியின் புகைப்படத்தை உங்கள் அலுவலகத்தில்/ கியூபிக்கலில் ஒட்டி அதன் கீழ் பாரதியின் கவிதையை எழுதி வைக்கலாம். Hey who is this funny looking person - என்று உங்கள் வெள்ளைக்கார சகா கேட்டால் போதும்( இதை செய்யும் முன் பாரதியைப் பற்றி கொஞ்சம் நன்றாகவே தெரிந்து வைத்துக் கொள்ளவும்)
- பாரதியின் முண்டாசு மட்டும் மீசை மட்டுமே பொறித்த டீ சர்டுகள் அணியலாம்.

இன்னும் சில ஆண்டுகள் பின் பிறக்கும் குழந்தைகளுக்கு நிச்சயம் பாரதி யாரென்று தெரியாமல் போகும். அவன் எழுதிய கவிதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்டுக் கொண்டிருக்கும். அவ்வளவே. ஆனால் அந்த சமயத்திலும் "சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும்".

*பாரதியுடன் சிறு வயது முதலே நெருங்கிப் பழகி அவர் அன்புக்குப் பாத்திரமாகும் பேறு பெற்றவர்

3 Responses to “பாரதி என்னும் துரதிருஷ்டசாலியின் நினைவுக்கு”

Sundara said...

மிக நல்ல பதிவு.
உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
இன்று தமிழ்நாட்டில் எழுதப்படாத வாய்மொழிச் சட்டம் ஒன்று இருக்கிறது.பாரதியைப் பற்றியோ, சோவைப் பற்றியோ பேசவோ, எழுதவோ கூடாது என்பதுதான் அது. அதன்விளைவுதான் ஊடகங்களின் மௌனம்.

Vaasu said...

God......... This is really harmed me.
Bharathi done wasted his talent for Tamil society. He might became celebrated one in the world, If he born in America or other country.
Really he was unlucky.

Vaasu said...

God......... This is really harmed me.
Bharathi done wasted his talent for Tamil society. He might became celebrated one in the world, If he born in America or other country.
Really he was unlucky.

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman