Adsense

இரண்டு கவிதைகள்


நீள அகலம் அதிகமற்ற
இந்த அறை முழுதும்
நிரம்பிக் கிடக்கிறது பயத்தின்
பல பரிமாணங்கள்

வாயைப் பிளந்தபடியே
கண்களை இறுக மூடியபடியான
உன் தூக்கம் நிம்மதியின்றி
அலைக்கழிக்கின்றது என்னை
மருந்து வாசனை நெடிகளுக்கு
மத்தியில் சீராக ஏறி இறங்கும்
உன் வயிற்று பிரதேசத்தின்
அசைவுகளிலேயே ஒத்திப்போடப்படுகிறது
ஓவென ஒலிக்கத் துவங்கும்
ஓர் ஓலம்

என் நிச்சயமின்மையையும்
என் தைரியத்தையும்
என் நம்பிக்கையையும்
தீராமல் பரிகசித்தபடியே
நீள்கிறது உன் இருப்பு

-------

இரவின் சோடியம் வெப்பர்
வெளிச்சத்தில் எதுவுமே சரியாக தெரியவில்லை
அதிகாலை யாருக்கும் தெரியாமல்
நோட்டம் விட்டதில் சிறிய திட்டாக
தெரிந்தது ரத்தக்கறை

குடலோ வேறு சதைப்பகுதியோ
எங்கும் தென்படாதபொது
கிடைத்த ஆசுவாசம்
பிணந்தின்னி கழுகுகளையும்
காக்கை கூட்டங்களையும் நினைத்தபோது
மறைந்தது

எவ்வளவு அழுத்திதுடைத்தும்
மறையவில்லை காரின் பின்பகுதியில்
முளைக்கத் துவங்கியிருக்கும் வால் பகுதி

இன்று பல்துலக்கும் போது
கண்ணாடியில் கண்டேன்
ரத்தம் கசியும் கோரைப்பல்லொன்று
உதட்டுக்கு வெளியே நீண்டு வளர்வதை

No response to “இரண்டு கவிதைகள்”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman