Adsense

கவிதைகள் 3


வடதிசைக்காட்டி
---------------------------
சூனியம் நிறைந்த
பெருவெளி மத்தியில் நிற்கும்
சூனியமல்லாத என்னை
விழுங்க விரைந்தது சூனியம்.
தப்பிக்கும் திசையறியாது
குழம்பிய என்முன்
முதலில் வந்தது வட திசைகாட்டி
நான் உய்யும் திசை
வடக்கு என சாதித்தது.
காரணம் ஒவ்வொன்றாய் அடுக்கி
பிரும்மாண்ட சாலை கட்டியது
வடதிசை நோக்கி.
எங்கிருந்தோ வந்தது கிழக்கு
வடக்கின் காரணம் ஒவ்வொன்றாய்
பொய்பித்து
சாலை இடித்து இன்னும் பிரும்மாண்டமாய்
சாலை கட்டியது கிழக்கு திசைக்கு.
பின்பு வந்தன இன்னபிற திசைகள்
இடித்து இடித்து கட்டப்பட்டன சாலைகள்
இக்கணத்திலும் சூனியமற்ற பெருவெளி
நடுவில் இருக்கும் என்னைச் சுற்றி
இரைந்து கிடக்கின்றன குழப்பங்களும்
அதன் காரணங்களும்.
குழப்பங்களிலிருந்து மீளும்
வழி தெரியா என்னை நோக்கி
விரைகிறது வடதிசைக்காட்டி

-------@@@@-------

அகாலத்தில் உயிர்பெற்ற
அடையாளங்களால்
பிரக்ஞை ஸ்தம்பித்து
உண்மையான நான் தொலைந்த
வேளையில்
உண்மையான நானென்று
ஸ்தாபிக்கப்ப்ட்ட அடையாளத்தின்
செயலற்ற மெளனத்தில்
அலறலாய் கேட்கிறது
உண்மை போன்ற நானால்
அழிக்கப்பட்ட
உண்மையான நானின்
விசும்பல் !

-------@@@@-------

அழகு
-----------
அழகாய்த்தான் இருந்திருக்க வேண்டும்
அழகாய் இருப்பதாய் கற்பனை செய்யப்பட்ட
அந்த தினங்கள்
அதன் நீட்சியில் கழியும்
இக்கணமும் அழகாகவே இருக்கின்றது
அழகின்றி எப்படி அமையும்
இனி வரும் கணங்கள்,
கற்பனையில் அழகை வரிக்க வாய்த்த
என் மனதுக்கு

-------@@@@-------

No response to “கவிதைகள் 3”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman