Adsense

The seventh seal


என்னிடமிருந்து யாரும் தப்புவதில்லை; எதுவும் தப்புவதில்லை. – மரணத்தால் மட்டுமே இப்படி பேச முடியும் (ஒரு வேளை மரணத்தால் பேசக்கூடுமென்றால்). விளிம்பு நிலைக்கு எந்த மனிதனையும் தள்ளக்கூடிய வல்லமை மரணத்திற்கு மட்டுமே சாத்தியப்படுவதாக தோன்றுகிறது. மரணம் விடுதலை; மரணம் வலி; மரணம் ஒரு முடிவின் தொடக்கம் – தொடக்கத்தின் முடிவு. கால வெளிகளுக்கு அப்பால் பட்ட பரிமாணமற்ற வடிவிலி. கலில் ஜிப்ரன் The Prophet-இல் சொன்னது போல வாழ்க்கையின் இதயத்தில் வசிக்கிறது மரணம். வாழ்விலிருந்து பிரிக்கமுடியாதது – வாழ்க்கையைப் போன்றே சத்தியமானது. இன்னும் சொல்லப்போனால் வாழ்வின் ஒரே சத்தியம்.

மரணத்தைப் பற்றிய சிந்தனை எனக்கு நடுக்கமூட்டுவதாகவே இருக்கிறது. அந்த உண்மையை தரிசிக்கக்கூடிய நிர்வாணம் அடையாதவரை மணலுக்குள் கழுத்தைப் புதைத்துக்கொள்ளும் நெருப்புக் கோழியைப் போல மரணத்தை பற்றிய சிந்தனையை புறம் தள்ளுதால் மரணத்தை தற்காலிகமாக ஒவ்வொரு நாளும் வென்று கொண்டு இருக்கிறோம். கடைசியாக ஒரு முறை மரணத்திடம் தோற்கும் வரை இந்த வெற்றி தொடரவே செய்கிறது. மரணம் பற்றிய சிந்தனை அறுக்க முடியாத ஒரு தொடர் சங்கிலியாக என்னை கட்டிக்கொண்டே இருந்தது – The seventh Seal படத்தைப் பார்த்த சில தினங்களுக்கு.

இந்த கட்டுரையின் முதல் வரியில் சொன்னதை மரணம் சொல்கிறது – இங்மர் பெர்க்மெனின் “The seventh seal” என்ற படத்தில். இந்த ஸ்வீடிஷ் திரைப்படத்தைப் பற்றி சிலாகிக்க நிறைய விஷயங்கள் இருப்பதாகவே தோன்றுகிறது. பிளேக் சூழ்ந்திருந்த ஒரு காலத்தில் சிலுவைப் போர் முடித்த ஒரு தளபதியும் அவனது கூட்டாளியும் தாய் நாட்டுக்கு திரும்புகின்றனர். அந்த சமயத்தில் மரணத்தை சந்திக்கிறான் தளபதி. அவனை ஏற்றுக்கொள்ள வந்த மரணத்திடம் சதுரங்கம் ஆடி வென்றால் மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லையேல் விட்டுவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சதுரங்கம் ஆடுகிறான். இறுதியில் மரணத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறான். மிகவும் நேரிடையாக இருப்பதாக தோன்றுகிற ஒரு களம் – கதை என்று சொல்ல முடியவில்லை, ஏனென்றால் இயக்குனர் சொல்ல நினைத்தது ஒரு கதையை இல்லை. இயக்குனர் சொல்ல நினைத்தது ஒரு உண்மையை அதை சாந்த சில தத்துவங்களை.


Photo Source: chess.about.com


மரணத்தின் வாயிலில் இருக்கும் ஒரு போர்வீரன் மரணத்தை எதிர்த்து ஏன் போரிடவில்லை – ஏன் சதுரங்கம் விளையாட அழைக்கிறான் ? இயல்பான போர்வீரன் ஏன் ஆயுதத்தை தூக்கவில்லை. இரண்டு விஷயங்கள் தோன்றுகின்றன. வன்முறையால் அடக்குமுறையை கொண்டு வருவதை வழக்கமாகக் கொண்ட ஒரு காலகட்டத்தில் (பிளேக் பரவக் காரணமாக இருந்த சூனியக்காரி என்று சொல்லி ஒரு இளம் பெண்ணை உயிருடன் எரிப்பதாக காட்சி அமைத்துள்ளார் இயக்குனர்) வன்முறைக்கு எதிரான குரலாக போர்வீரனை பிரகடணப் படுத்த நினைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. மற்றொரு கோணத்தில் மரணத்தை எதிர்த்துப் போரிட ஆன்மபலத்தாலே முடியும் என்பதாலும் இருக்கலாம் – மரணம் தளபதியிடம் வந்து “நான் உன்னை ஏற்க வந்திருக்கிறேன் – நீ தயாரா” என்று கேட்கும் போது “என் உடல் தயார் – நான் தயாரில்லை” என்று சொல்கிறான். உடலையும் மனதையும் இந்த இடத்தில் இருவேறு கூறாக வேறுபடுத்தி இருப்பதால் சதுரங்க ஆட்டம் எனக்கு மிகவும் பொருத்தமாக தோன்றியது. ஆனால் உலக திரைப்பட ஆராய்ச்சியாளர்கள் சதுரங்க ஆட்டத்தை தேர்ந்தெடுத்தது மரணத்தை தள்ளிப்போடும் ஒரு உத்தி என்பதாலே என்கிறனர். இருப்பினும் எனக்குத் தோன்றிய கோணம் எனக்கு இந்த படத்தை அணுக மிகவும் சவுகரியகமாக இருந்தது.

மரணம் கண்ணில் தெரியும் காலத்தில் வாழ்வில் உண்மையை தேடி, அதன் அர்த்ததை தேடி, கடவுளைத் தேடி செல்கிறான் தளபதி. இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்கள் எதுவும் அந்தந்த கதாபாத்திரங்கள் மட்டுமேயன்று. அவையனைத்தும் குறியீடுகள். சிறிய காட்சி – இந்த படத்தில் தெரு நாடக நடிகர்களாக வரும் ஒரு தம்பதிக்கு ஒர் அழகிய ஆண்குழந்தை இருக்கிறது. அந்த குடும்பம் தளபதி செல்லும் அதே நகருக்கு வருகிறது. ஒரு மாலை அந்த குடும்பத்தை சந்திக்கும் அந்த தளபதி அந்த குடும்பத்தின் சூழலில் இளைப்பாறுகிறான் – அந்த இளைப்பறுதலில் பெரும் பேரமைதியில் சொல்கிறான். அவை குறியீடுகள் என்பதை நிறுவ இந்த காட்சி பயன்படும். அந்த தம்பதி கிறுத்துவ சமய நம்பிக்கைப்படி புனித தம்பதியினர், அந்த குழந்தை யேசு, அந்த தளபதி வாழ்கையில் உண்மையைத் தேடும் மரணத்தை நோக்கி பயணப்பட்டிருக்கும் ஒரு சாமானியன். அவனுக்கு கடவுளின் அருகாமையில் இளைப்பாறுதல் கிடைக்கிறது. இந்த பார்வை ஒரு ஆன்மிகவாதியின் பார்வையிலிருந்து சரியானதாகவே படுகிறது. நாத்திக பார்வையில் ? சக மனிதன் மீது அன்பு கொண்ட மனிதர்கள் மத்தியில் இருத்தலே பேரமைதியைக் கொடுக்கும் என்று வேண்டுமானால் சொல்லலாம். விவாதத்திற்குரிய தலைப்பு.

கடவுள் இருக்கிறாரா இல்லையா. வாழ்வின் நிரந்தரமான உண்மை எது போன்ற சிக்கலான பல கேள்விகளை இந்த படம் முன்வைக்கிறது. “எனக்கு உண்மையை தாருங்கள் – உங்கள் கற்பனையோ நம்பிக்கையோ வேண்டாம்.” – என்கிறான் இந்த தளபதி. அற்புதமான வரிகள்.

ஒரு சினிமா வடிவம் என்று பார்த்தால், உரையாடலிலும், நடிப்பிலும் நாடகத்தன்மை அதிகம் இருக்கின்றது. மிகவும் அற்புதமான உரையாடல்கள் இந்த படத்தில் இருக்கின்றன – Bergman-இன் பிற படங்களைப் போலவே. (Wild Strawberries என்று ஒரு படம் உண்டு. நான் மிகவும் ரசித்த ஒரு படம். அந்த படத்தின் உரையாடல்கள் மற்றும் தரத்தைக் காட்டிலும் இது நன்றாக இருப்பதாக தோன்றுகிறது). இந்த தன்மையை 1960 களுக்கு முன்பு வந்த பல படங்களில் பார்க்கலாம். யதார்த்த குறைவுகளும் glorified mediocrity (கொச்சையாக சொன்னால் exaggeration) –உம் அதிகமாக இருப்பதைக் காண முடியும். இதன் நாடகத்தன்மையைப் பார்த்துவிட்டு இந்த படத்தை புறம் தள்ள நினைப்பவர்களுக்கு ஒரு சோல் – கனியிருக்க காய் கவர்ந்தற்று. இந்த தளபதியாக நடித்திருப்பவர் மேக்ஸ் சிடோ (Max von Sydow) – Bergman-இன் ஆஸ்தான நடிகர். அகிராவுக்கு தொஷிரோ மிஃபூன் எப்படியோ அப்படி. ஒரு காலத்தில் bergman இவரை மனதில் வைத்தே கதாபாத்திரங்களைப் படைக்கிறார் என்று கூட ஒரு நம்பிக்கை இருந்தது. Bergman-இன் படங்களில் இருக்கும் ஒரே சிக்கல் – அவர் படங்கள் மற்ற படங்களைப் போல நேரிடையாக இருப்பதில்லை. முன் தயாரிப்பில்லாமல் அவர் திரைப்படங்களை அணுக முடியவில்லை.
வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். ஒரு வேளை உங்களுக்குப் பிடிக்கலாம்.

One response to “The seventh seal”

Aditya said...

I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman