Adsense

விசாகா ஹரி


இன்று சாயங்காலம் விசாகா ஹரியின் தியாகராஜ ராமாயணம் என்னும் உபன்யாசம் கேட்க கிடைத்தது (moserbaer க்கு நன்றி). விசாகா ஹரி பற்றி அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. தெரியாதவர்களுக்கு - விசாகா ஹரிகதா, கர்னாடக சங்கீத கச்சேரி மற்றும் உபன்யாசம் செய்கிறார். இவர் கிருஷ்ண ப்ரேமியின் மருமகள் மற்றும் லால்குடியின் சிஷ்யை. இவரின் சிறப்பு இவர் ஹரிகதையையும் உபன்யாசத்தையும் இசையுடன் சேர்த்து செய்கிறார்.
கேட்க சலிப்பு தட்டாமல், சுவாரஸ்யமாக அதே சமயம் ஞானத்திற்கு எந்த விதமாக குறைச்சலுமின்றி இருக்கிறது. ஒரே நேர்கோட்டில் பயணிப்பது போன்று இருக்கிறது. சம்பவங்களால் அலைகழிக்கப்படாமல் எடுத்துக் கொண்ட தலைப்பைத் தவிர அங்கும் இங்கும் நகராமல் முழு நிகழ்ச்சியையும் நடத்துகிறார். தெலுங்கு கீர்தனைகள், தமிழ் பாடல்கள் இரண்டையும் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி பயன்படுத்துகிறார். அசோகவனத்தில் சீதை ராமனை நினைத்து உருகும்போது “நீ தய ராதா”வையும் அனுமன் லங்கையில் “ராமசாமி தூதன் நானடா” என்று வீரமுழக்கமிடுவதாகவும் பாடி காட்டுகிறார்.

( Photo source: www.iacrfinc.com)


ஒன்பது கஜம் புடவையில் பிராமண மொழியில் இவர் செய்யும் ஹரிகதைகளுக்கும் உபன்யாசங்களுக்கும் பிராமணரல்லாத சமுகத்தில் எந்த விதமான வரவேற்பு இருக்கிறது என்பதை அறிய ஆவலாக இருக்கிறது. ஏனென்றால், இவர் பயன்படுத்தும் வார்த்தைகளில் அவ்வளவு சமஸ்கிருதம் கலந்திருக்கிறது. என் தாத்தா மட்டுமே அந்த அளவிலான வார்த்தைகளை பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்.

விசாகா நாம் பாதுகாக்க வேண்டியவர். நமது கலாசாரத்துக்கும், நகரமயமாக்கலால் அருகிவரும் உபன்யாச வழக்கங்களும் புத்துயிர் பெறுவதற்கும் விசாகா போன்றோரின் பங்கு இன்றியமையாதது.

No response to “விசாகா ஹரி”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman