Adsense

சிவாஜி - Cool


சிவாஜி குறித்து நிறைய பேசியாயிற்று - இணையத்திலும், மற்ற ஊடகங்களிலும். இதைப் பற்றி எழுதுவதற்கு புதிதாக எதுவுமில்லை என்ற நிலையிலிலேயே இந்த பதிவை எழுதுகிறேன். சிவாஜி என்ற சினிமாவைப் பற்றி எழுதுவதற்கு நான் அவ்வளவாக பிரியப்படவில்லை. ஆனால் இந்த சினிமாவால் ஏற்பட்டிருக்கும் அதிர்வுகள் குறித்து பேசலாம் என்று தோன்றுகிறது.

சிவாஜி என்னைப் பொறுத்தமட்டில் நிச்சயம் ஒரு முக்கியமான தமிழ் படம் - கலைப் படைப்பு என்ற கோணத்தில் அல்ல. இந்த திரைப்படம் ஒரு மிகச்சிறந்த case study. ஒரு புதிய தளத்தை இந்தப் படம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்றால் நிச்சயம் மிகையல்ல. வெளியான முதல் வாரத்திலேயே UK Top 10 -இல் இடம் பிடித்து தமிழ் சினிமாவுக்கு புதிய வர்த்தக தளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இதுவரை தமிழ் படங்கள் திரையிடப்படாத வட மாநிலங்களிலும் திரையிடப்பட்டிருகிறது. அதாவது, தமிழ் சினிமா தன் எல்லைகளை விரிவு படுத்திக் கொள்ள ஒரு அருமையான தளமும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தளங்களை எப்படி தமிழ் சினிமா பயன்படுத்திக் கொள்ளப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த படத்தில் பணியாற்றிய எந்த கலைஞனுக்கும் ஒரு விசிட்டிங் கார்டாக இந்த படம் பயன்படும். இதுவரை மேல் நாட்டில் இந்தியர்கள் என்றால் இந்தி பேசுபவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் ஒருவேளை தமிழும் பேசுவார்கள் என்று சொல்லக்கூடும். தமிழ் நாட்டில் இந்த படம் ரிலிஸாகும் போது இருந்த வேகமும் சூடும் இப்போதில்லை. இது எதிர் பார்த்ததே. Saturation Technique சரியாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. முதல் நான்கு நாட்களில் 2.7 லட்சம் பேர் இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறார்கள் (சென்னையில் மட்டும்). மக்களின் buying capacity அதிகரித்திருப்பதற்கு இன்னொரு உதாரணம். வட இந்தியாவை சமிபகாலங்களில் தமிழ் நாட்டின் பக்கம் இழுத்த மைல் கைல் படங்கள் என்று இரண்டு படங்களை சொல்வேன். ஒன்று ரோஜா இரண்டாவது சிவாஜி. ரோஜா - அந்த படத்தின் இசையால் ஒரு வலுவான வணிக சந்தையை வட இந்தியாவில் ஏற்படுத்திக் கொடுத்தது. சிவாஜி - அந்த சந்தையை வட இந்தியாவில் விரிவு படுத்தியதோடு கடல் கடந்தும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. நல்ல brand value உடைய ஒரு நடிகர், சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள் இவர்கள் ஒன்று சேர்ந்தால் எந்த விதமான result-ஐ எதிர்பார்க்கலாம் என்பதற்கான உதாரணம் சிவாஜி.


ஒரு பக்கம் இணையத்தில் இந்த திரைப்படம் பற்றி வரும் விமர்சனமும் எதிர் வினைகளும் நகைப்புக்குரியதாகவே இருக்கின்றது. இந்த படத்தை பார்த்து விட்டு குறைகளை பட்டியலிடுகிறார்கள். அப்படி பட்டியலிட்டவர்களை கெட்ட வார்த்தைகளின் வேவ்வேறு அளவுகளில் திட்டுகிறார்கள் (கட்டாயம் அப்படி கடுமையாக விமர்சித்தவரின் blog அல்லது web site- க்கு மக்கள் வரவு அதிகரித்து இருக்கும்). இந்த படம் ரஜினி படத்திற்கான இலக்கணங்களை சற்றும் மீறாமல் எடுக்கப்பட்டிருக்கிறது. ரஜினி படத்தில் இருக்கும் எல்லா யதார்த்த பிறழ்வுகளும் இந்த படத்திலும் இருக்கிறது. ரஜினியால் தாய் பாலை கக்க வைக்க முடியும், தரையில் கால் படாமல் ச்சும்மா பறந்து பறந்து அடிக்க முடியும், Grenede-ஐ கையால் கேட்ச் பிடித்து திரும்ப வீச முடியும், கண்ணால் பார்த்தே தீக்குச்சியை பற்ற வைக்க முடியும் ஏன் பார்வையாலேயே ஒரு ஆளை அந்தர் பல்டி அடிக்க வைக்கக்கூட முடியும். இதெல்லாம் தெரியாமல் இதெல்லாம் எதிர்பார்க்காமல் இந்த படத்திற்கு சென்றது போலவும், இப்படி பட்ட காட்சிகளால் தமிழ் சினிமாவின் நிலை தாழ்ந்து விட்டதாகவும் இணையத்தில் சிலர் அலட்டுவது ஆச்சரியமாக இருக்கிறதென்றால் அதற்கு எதிர்வினையாக எழும் கருத்துகளில் இருக்கும் கண்ணியமின்மை அருவருப்பாக இருக்கிறது. ரஜினியின் படத்தை முதல் நாள் முதல் காட்சியில் அரங்கு நிறைந்த ரசிகர்களுடன் பார்க்கும் அனுபவம் அலாதியானது. ஒரு ராக் பேண்ட்-இன் ரசிகர்களின் அதிர்வோடு ஓப்பிடக்கூடிய அதிர்வு அது. ஒரு ஓபரா காண்சர்டில் இருக்க வேண்டிய ஒழுங்கு நேர்த்தியை ரஜினியின் படங்களில் எதிர்பார்க்ககூடாது. மூன்று மணி நேரம் uncontrolled hysteria-வில் இருந்து விட்டு மீண்டு வருவதே அந்த மூன்று மணி நேரத்தையும் அதற்கான காசையும் செலவு செய்வதின் நோக்கமாக இருக்கக்கூடும். இது இன்று நேற்றல்ல ஏறக்குறைய மூப்பது ஆண்டுகளாக தொடரும் கதை.

எல்லா வணிக திரைப்படங்களிலும் இருக்கும் ஒரு பொதுவான அம்சம் ஹீரோயிசம். யதார்த்ததிற்கு சற்றும் பொருந்தாத, நிகழ் வாழ்வில் இருக்க முடியாத வலிமையுடனும், செயல் திறனுடம் இருக்கும் ஒரு ஆண் அல்லது பெண்ணை முன்னிலைப்படுத்தி சினிமாக்கள் உலகின் எல்லா வணிக திரைப்பட்ங்களிலும் - குறிப்பாக action திரைப்படங்களிலும் வந்து கொண்டுதானிருக்கின்றன. ஹாலிவுட் திரைப்படங்கள் சுற்றாத பூவையா தமிழ் திரைப்படங்கள் சுற்றப்போகின்றன. ஒரு சின்ன வித்தியாசம் அவர்கள் அந்தப்பூவை சுற்றுமுன் கொஞ்சம் டெக்னாலஜியென்றும், வாயில் நுழையாத ஒரு பேரையோ ஆதாரமாக்கி பூவை சுற்றுகிறார்கள். அதனால் நம்பகத்தன்மை அந்த படங்களில் கொஞ்சம் அதிகமாக இருப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுகின்றது. இது போல சுற்றுவதற்கென்றே தனிபட்ட பிரத்தியேகமான ஆட்கள் அங்கு இருக்கின்றனர். நன்கு கை தேர்ந்த ஆட்களைக் கொண்டு அவர்கள் காட்சியை அதகளப் படுத்தி விடுகிறார்கள். நம் ஆட்களுக்கு அப்படிபட்ட வசதிகள் அவ்வளவாக இல்லை. பாவம், மைலாப்பூரில் இருக்கும் ஒரு வயசானவரையே ஓய்வெடுக்க விடாமல் எல்லாரும் கஷ்டப்படுத்துகிறார்கள். அவரும் self destructive algorithm-ஐ தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டி இருக்கிறது.

இந்தியா தாண்டி தமிழ் படத்தை வர்த்தகம் செய்யவேண்டுமானால், இந்த கனவு தொழிற்சாலை அதிக லாபம் ஈட்டும் தொழிற்சாலையாக மாற வேண்டுமானால் ஆஸ்கருக்கு இணையாக ஒரு இந்தியாவில் வழங்கப்படும் ஒரு விருது மதிக்கப்பட வேண்டுமானால் அதிகமாக மக்களை சென்றடையக் கூடிய திரைப்படங்கள் தேவை. சிறந்த தொழில் நுட்பத்தையும் கதையையும் திறமையான நடிப்பையும் ஒன்று சேர்க்கக்கூடிய அந்த perfect mix தேவை. அந்த வகையில் தொழில் நுட்ப ரீதியாக சிவாஜிக்கு A+ கொடுக்கலாம் (பிரம்மாண்டமான செட், மேக்கப் - ரஜினியா இது). தமிழ் சினிமாவால் நிச்சயம் உலகத் தரம் வாய்ந்த block buster-ஸை கொடுக்க முடியும். அந்த காலம் வெகு தொலைவில் இல்லை. ஆனால் நல்ல சினிமா ? கஷ்டமான கேள்வி - குறைந்த பட்சம் பத்து ஆண்டுகளாவது பிடிக்கும் என்று தோன்றுகிறது. சிவாஜியை ஒரு திரைப்படம் என்ற கோணத்தில் என்னால் ஆராயக்கூட முடியவில்லை. திரைப்படத்திற்கு தேவையான வரைமுறைகளுடன் இதை அனுகுவது அவ்வளவு புத்திசாலித்தனமான காரியமாகவும் எனக்குத் தோன்றவில்லை. இந்த வாரம் கற்றதும் பெற்றதுமில் த்ரூபோ சொன்னதாக சொல்லப்பட்டிருக்கும் மேற்கோள் சிவாஜிக்கு சால பொருந்தும் - “ஒரு படம் வெற்றி பெற்றால் அதைப் பற்றி விவாதிக்காதே"

பிகு: நானும் சிவாஜி பார்த்தேன். ஆறு இடங்களில் விசில் அடித்தேன்.

One response to “சிவாஜி - Cool”

அழகா சொல்லியிருக்கீங்க.

அந்த ஹாலிவுட் பூச்சுற்றலைப்பற்றி நானும் அடிக்கடி நண்பர்களிடம் விவாதித்திருக்கிறேன். அதே கருத்து உங்களுடையதும்.

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman