Adsense


இன்னும் நூறு வருடங்கள் கழித்து படிக்கும் ஒரு சமுதாயத்திற்கு சதாம் ஹுசேன் ஒரு சரித்திர நாயகனோ என்ற சந்தேகம் கட்டாயம் வரும். ஏறக்குறைய வாழும் காலத்தில் வில்லனாக தோற்றமளித்த எல்லாருமே காலப்போக்கில் ஒரு வீரனுக்கான அடையாளத்தை/ தோற்றத்தை பெற்று விடுகின்றனர். நானே என் பள்ளிப் பருவத்தில் ஹிட்லரை மகத்தான செயல் வீரன் என்று கருதி இருக்கிறேன். ஹிட்லர் மீதான ஆர்வத்தில் தான் ஹிட்லரின் சுயசரிதையை கல்லூரி நாட்களில் படிக்கத் துவங்கினேன். ஆனால் இந்த செயல்பாடுகள் எல்லாம் தனி மனித மனதின் விகாரங்களே என்று தெளிய சில காலம் பிடித்தது.

இந்த நிலை ஏற்படக் காரணம் சதாம் ஹுசேன் போன்ற, ஹிட்லர் போன்ற, இடி அமின் போன்ற சர்வாதிகாரிகளுக்கு, குறிப்பாக மனித நேயத்திற்கு எதிராக செயல் பட்ட சர்வாதிகாரிகளுக்கு இந்த சமுகம் மன்னிப்பு என்ற தண்டனையை வழங்காமல் மரணம் என்ற மன்னிப்பை/ விடுதலையை வழங்கியது தான். மனித நேயத்திற்கு எதிராக செயல் படும் இவர்களின் மரணத்தால் அவர்கள் கடைசி மூச்சு வரை தாங்கி வாழும் தத்துவங்கள் தோற்கடிக்கப்படுவதில்லை மாறாக வலுப்பெறுகின்றன. ஒரு வலுப்பெற்ற தத்துவத்தால் ஸ்தபிக்கப்பட்ட சித்தாந்தத்தால் மீண்டும் மீண்டும் செயல் வீரர்கள் தோற்றுவிக்கப்படுகின்றனர். இந்த சமுகம் தொடர்ச்சியாக கருவிகளை எதிர்த்தே தனது போரை மேற்கொள்கின்றது அந்த கருவியை தோற்றுவிக்கும் மூலத்தை நோக்கியன்று.

சதாமை அழித்ததின் மூலம் ஈராக்கில் சமுக மறுமலர்ச்சிக்கு வித்திட்டுவிட்டதாக மார்த்தட்டிக்கொள்ளும் அமெரிக்காவின் செயல் வடிகட்டிய அயோக்கியத்தனம். நியூக்ளியர் ஆயுதங்கள் வைத்திருப்பதாக குற்றம் கூறி ஒரு நாட்டின் மீது போரை நடத்தி, அதில் வெல்ல முடியாத ஒரு அணியை வென்று அந்த நாட்டில் அமைதியை தோற்றுவிக்கும் முயற்சி எனக் கூறி அங்கு கொட்டமடித்து விட்டு அந்த நாட்டின் முன்னாள் அதிபரை அந்த நாட்டின் நீதி மன்றத்தின் வாயிலாகவே தண்டனை பெறச் செய்து அதையும் நிறைவேற்றும் சக்தி இன்றைய உலகில் அமெரிக்காவிற்கே உண்டு. அமெரிக்காவின் இந்த செயல் சர்வாதிகரத்திற்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை. இந்த செயலின் மூலம் சரித்திரத்தின் பக்கங்களில் அழிக்க முடியாத மையினால் தனது களங்கத்தை மீண்டும் ஒரு முறை தானே பதிவு செய்து கொண்டு விட்டது அமெரிக்கா. இதன் மூலம் உலக அமைதிக்கு பங்கம் விளைவித்ததோடு அல்லாமல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீராத பகையையும் சம்பாதித்துக் கொண்டு விட்டது. இந்த செயலை “துரதிருஷ்ட” வசமானது என்று இந்தியா வருணித்திருப்பதே அதிகபட்ச வீரம்.

அமெரிக்காவின் இந்த செயல் மனித நேயத்திற்கு எதிராக செயல்பட்ட சதாம் ஹுசேன் போன்ற சர்வதிகாரிகளின் கொடுமைகளிலிருந்து எந்த விதத்திலும் மேம்பட்டதல்ல. முற்றிலும் ஈராக்கிற்கு குறிப்பாக சதாமிற்கு எதிரான தனது சொந்த வெறுப்பினால் ஜார்ஜ் புஷ் இரண்டு நாடுகளுக்கு (அமெரிக்கா மற்றும் ஈராக்) அநிதியையும், அமெரிக்கவிற்கு ஜால்ரா அடிக்கும் இங்கிலாந்து போன்ற நாடுகளின் பேரையும் கெடுத்து விட்டார்.
சமுக நீதிக்கான போர், பயங்கர வாதத்திற்கெதிரான எதிரான போர் என்ற விதவிதமான போர்வைகளில் உலகம் முழுவதும் வன்முறை கட்டவிழ்ந்து கிடக்கின்றது; விடுதலைப் புலிகள் – இலங்கை ராணுவத்திற்கெதிரான போர், 2006-இல் நிகழ்ந்த இரண்டாம் லெபனான் போர், இஸ்ரேலுக்கும் பாலஸ்தினத்திற்கும் இடையிலான சிக்கல், காஷ்மீர் பிரச்சனை என வன்முறை அனேக ரூபங்களில் உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவிற்கு எதிரான குரல் (anti Americanism- என்னும் இயக்கம்) சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பரவலாக அதிகரிக்கத் துவங்கியிருக்கிறது. தென் கொரியா, ஜப்பான், சில இஸ்லாமிய நாடுகள், வெணிசுலா, க்யூபா போன்ற நாடுகளிளும் இந்த குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே தான் இருக்கின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கா இரண்டு போர்களை மேற்கொண்டுள்ளது. கொரியா நியூக்ளியர் ஆயுதங்களை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் உலகம் தழுவிய தீவிரவாதம் தொய்வின்றி அதிகமாகிக் கொண்டிருக்கிறது. எங்கு சென்று கொண்டிருக்கிறோம் நாம் ? மூன்றாம் உலகப்போரை நோக்கியா ?
 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman