Adsense

30 வது புத்தக கண்காட்சி


இந்த முறை அதிகமாக புத்தகம் வாங்குவதில்லை என்ற முடிவோடு பாக்கெட்டில் 300 ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு தான் கண்காட்சிக்கே சென்றேன். கள்ளுக்கடையை பார்க்கும் குடிகாரனுக்கு கை நடுங்குவதைப் போல எனக்கு சில தலைப்புகள். அந்த தலைப்புகளில் எதைக் கொடுத்தாலும் காசு கொடுத்து வாங்கி விட்டு, பின்னர் படிக்கும் போது வருத்தப்படுவேன். அந்த தப்பு இந்த முறை நடக்கக் கூடாது என்பதற்காக கொஞ்சம் சுயகட்டுப்பாட்டுடன் நடக்க முயன்று வழக்கம் போல தோற்றுவிட்டேன். ஆனால் நான் வாங்கிய புத்தகங்களுக்காக இந்த முறை நிச்சயம் வருத்தப்பட மாட்டேன் என்பது எனக்கு தெரியும்.

சென்ற புத்தக கண்காட்சிக்கும் இந்த கண்காட்சிக்கும் என் கண்ணில் பட்ட சில வித்தியாசங்கள்
- இந்த முறை பல கடைகள் டபுள் ஸ்டாலாக இருக்கின்றன. நல்ல வெளிச்சம்.
- குழந்தைகள் புத்தகங்கள் விற்கும் கடைகள் அதிகமாக இருக்கின்றன. குழந்தைகள் எதிர்காலம் குறித்த பெற்றோரின் கவலையை சரியாக சந்தை படுத்திவிட்டனர் என புரிந்தது. இந்த எண்ணிக்கை அடுத்த கண்காட்சிக்கு அதிகமாகும்
- ஃபுட் கோர்ட் என ரகளையாக சாப்பாடு கடை வைத்திருக்கிறார்கள் – இட்லி தவிர வேறு எதற்கும் (பஜ்ஜி, போண்டா) சாம்பார் கிடையாது. இது குறித்து கிருபா ஷங்கர் ஏற்கனவே விவரமாக எழுதி விட்டார்.
- நிறைய கடைகளில் க்ரெடிட் கார்ட் வாங்குகின்றனர். கிரெடிட் கார்ட் ட்ரான்ஸாக்ஷனுக்காக மட்டுமே உயிர்மைக்கு அருகில் டேபிள் போட்டு இரண்டு பேர் உட்கார்ந்து இருந்தனர். ஒரு வேளை கார்டை தேய்த்து கமிஷன் தேத்துவார்களாயிருக்கும். நல்லா இருக்கே இந்த ஐடியா என்று தோன்றியது
- ஆங்கில புத்தகங்களும், மேலாண்மை புத்தகங்களும் அதிகம் கிடைக்கின்றது
- ஆன்மிக ஸ்டால்கள் அதிகமாகியிருக்கின்றன – எதிர்பார்த்தபடி பலவற்றில் கூட்டமில்லை
- சென்ற முறைப் பார்த்து இந்த முறை கண்ணில் படாத ஸ்டால் “கூத்துப்பட்டறை” ஸ்டால். தீம்தரிகிட பெயர் மாறி இருக்கிறது.
காயிதே மில்லத் காலேஜைக் காட்டிலும் விஸ்தாரமாக இருக்கிறது நுழைவாயில். நான் சென்ற போது சத்தியராஜ் ஜிம்மையும் கோவிலையும் எதோ ஒரு நுணியில் முடிச்சு போட்டு கைதட்டல் வாங்கிக் கொண்டிருந்தார். என்ன சொன்னார் என்று கேட்பதற்குள் கவுண்டரில் இருப்பவர் எனக்கு நுழைவு கூப்பனை தந்து விட்டதால் உள்ளே நுழைந்து விட்டேன். அதிக கூட்டம் இருந்தது. ஆனால் காயிதே மில்லத் போல என் காலை அடுத்தவர் கால் மேல் வைத்து நடக்க வேண்டிய அவசியம் இல்லாமல் தரையில் வைத்து நடக்கும் அளவிற்கு கூட்டம் இருந்தது. எந்த புத்தகமும் வாங்குவதில்லை என்ற சபதம் முதலில் உடைந்தது உயிர்மை பதிப்பகத்தில் தான். வழக்கம் போல் இரண்டு கவிதை தொகுதியை (மனுஷ்யபுத்திரனுடையது) வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன்.

அதிக நேரம் செலவிட்டது பவுன்டைன் ஹெட் ஸ்டாலில் தான். சில அலுவலுக்கு தேவையான புத்தகங்களும் மனதில் நினைத்துக் கொண்டு சென்ற மேலாண்மை புத்தக தலைப்புகளும் கிடைத்தன. என் சபதத்தை காற்றில் மாஞ்சா போட்ட நூல் கட்டி பறக்க விட்டேன். க்ரெடிட் கார்டு வங்கியதால் தப்பித்தேன். பல புத்தகங்களை ஆஃபிஸ் லைப்ரரிக்கு ரெகமண்ட் செய்து வாங்கிப் படித்துக் கொள்ளலாம் என்று குறித்துக் கொண்டேன் (விலை ஆயிரக்கணக்கில் – அதை வாங்கி இருந்தால் என் அப்பா வீட்டு வாசப்படி ஏத்த மாட்டார்). எனி இந்தியன் ஸ்டாலில் நுழைந்த இரண்டு நிமிடத்தில் ஜெயகாந்தன் வந்தார். எதோ ஒரு புத்தக வெளியீடு என்று நினைக்கிறேன். நிறைய புகைப்படம் எடுத்ததர்கள். கடை வாயிலை அடைத்து கூட்டம் நடந்ததால் கடைக்குள் நான் பத்து பதினைந்து நிமிடம் இருக்க வாய்ப்பு கிடைத்தது. பொறுமையாக டைட்டில்கள் எல்லாவற்றையும் மேய்ந்துவிட்டு எதையும் வாங்காமல் தாவி விட்டேன்.

ஆனந்த விகடன் இரண்டு இடங்களில் ஸ்டால்கள் போட்டு இருக்கின்றனர். மோட்டர் விகடன் சந்தா விற்பனை அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. நான் பார்த்த ஐந்து நிமிடத்தில் ஏறக்குறைய 10 பேர் சந்தா கட்டியிருப்பார்கள். வழக்கம் போல கவிதா பதிப்பகம் புத்தகங்களை அழகாக பிரித்து அடுக்கியிருந்தார்கள். காலச்சுவடு பதிப்பகம் டபுள் ஸ்டோராக பார்க்க அழகாக இருந்தது. பார்க்க அழகாக இருந்த இன்னொரு ஸ்டால் ப்ராடிஜி என்ற குழந்தைகளுக்கான புத்தகங்கள் விற்கும் கடை. குழந்தைகளை கவரும் விதத்தில் பலூன் கட்டி, ட்ராயிங் ஏரியா ஏற்பாடு செய்து பத்து புத்தகங்கள் மட்டும் வைத்திருந்தனர். 20 – 30 பக்கங்கள் மட்டுமே இருந்த புத்தகம் வழவழப்பான அட்டையில் வண்ணமயமாக பார்க்க அழகாக இருந்தது. விலை 35 ரூபாய். க்ருஷ்ணமூர்த்தி பவுண்டேஷனில் நான் வாங்கிய “Education and significance of life” விலை ரூபாய் 20 /-.

புத்தக கண்காட்சியில் ஏ கே செட்டியார் அரங்கம் என்று ஒன்று ஏற்பாடு செய்து குறும்படம் காட்டுகிறார்கள். வரவேற்க தக்க விஷயம். ட்ரீம்ஸ், சில்ரன் ஆஃப் ஹெவன், பதேர் பஞ்சலி எல்லாம் திரைப்படங்கள் என்றல்லவா நான் இதுவரை நினைத்திருந்தேன். குறும்படங்கள் என்று ஏன் வகைப்படுத்தினார்கள் ? ஒருவேளை பஞ்ச் டயலாக்கும் குத்துப் பாட்டும் இல்லாததால் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை போலும்.

கார் பார்க்கிங் மட்டும் காயிதே மில்லத்தில் பரவாயில்லையோ என்று தோன்றியது (இரண்டு நிமிட நடையை கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால்). மற்றபடி இந்த இடம் பல மடங்கு மேல். டாய்லெட் வசதி கிடையாது என்று சொல்கிறார்கள். நல்ல வேளை எனக்கு நான்கு மணி நேரம் மூச்சா வரவில்லை.

One response to “30 வது புத்தக கண்காட்சி”

ஹலோ ஹலோ மைக் டெஸ்டிங் 1 2 3

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman