Adsense

உலக திரைப்படங்கள் - ட்ரீம்ஸ்


நான் இங்கும் வேறு சில இடங்களிலும் நான் பார்த்த உலக திரைப்படங்களைப் பற்றிய எனது பார்வையை பதிவு செய்து கொண்டு இருக்கிறேன். அவ்வகையில் என்னை பாதித்த, மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யக் கூடிய வகையிலான சில திரைப்படங்களைப் பற்றிய பதிவுகளை நான் முன் வைக்க விரும்புகிறேன்.நான் அவ்வபோது பார்க்கும் படங்களைப்பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொள்வேன். நான் ஒன்று மட்டும் உறுதியாக செய்ய மாட்டேன். இந்த படத்தின் கதையை காட்சி காட்சியாக விவரிக்கும் பதிவாக என் பதிவுகள் இருக்காது. என் முயற்சி இத் திரைப்படங்களை நீங்கள் அணுக பயன்படும் ஒரு முன்னுரையாகவே இருக்குமன்றி படத்தைப் பற்றிய விமர்சனமாகவோ அல்லது விவரிப்பாகவோ இருக்காது.
இந்த உலகில் ஒரு பொதுவான நம்பிக்கை உண்டு. ஒவ்வொரு படைப்பாளியும் தீவிர உணர்வு நிலையில் மட்டுமே தனது மிகச்சிறந்த படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறான் என்பதே அது. அந்த உணர்வு நிலை தோல்வியினாலோ, கவலையினாலோ, பயத்தினாலோ அல்லது அதீத மகிழ்ச்சியினிலோ ஏற்படிவது உண்டு. உலகில் மனதை ரணப்படுத்தும் கவிதைகளை நாம் ஈழத்தில் பார்க்க முடியும். பாப்லோ நெருடாவின் சில கவிதை வரிகளில் வலி தெரியும். தனது மனதுற்குள்ளேயே போராடிக் கொண்டிருக்கும் எந்த மனிதனின் வார்த்தையுமே ஆயிரம் சவுக்கடிகளின் வலியை தர வல்லவை தானே. அதே போல தனது கவலைகளில் மூழ்கி கிடக்கும் ஒரு கலைஞனின் புலம்பலாக எனக்கு இப்படம் தோன்றுகிறது.

அகிராவைப் பொருத்தவரை அவரது கவலைகளை நேரிடையாக சினிமாவாக செய்யக் கூடியவர். இரண்டாம் உலகப் போரினால் பாதிக்கப்பட்ட ஜப்பானை சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ அவர் தனது கொடிய கனவுகளாக போரின் கேட்டை முன் வைத்துள்ளார். அது மட்டுமின்றி இயற்கையிலிருந்து எவ்வளவு தொலைவு வந்து விட்டது மனிதம் என்பதையும் தனது கனவாக பதிவு செய்கிறார். இந்த திரைப்படத்தை பொருத்த வரை எனக்கு ஒரு நவின கவிதைப் பாணிக்கு ஓளி வடிவம் தந்தது போன்று தோன்றுகிறது. படம் முழுவதும் குறியீடுகள் விரவியிருக்கின்றன. குகையிலிருந்து வெளிப்படும் இறந்த போர்வீரன், ஒற்றை கொம்பு மனிதன், பனிமலையில் முன்னேறும் மனிதன் – இவர்களை அந்த பாத்திரமாக மட்டும் நாம் எதிர் கொள்ள முடியாது. தனது கனவுகள் என ஆறு வித்தியாசமான காட்சிகளையும் – கனவினைப் போலவே ஒன்றுக் கொன்று தொடர்பற்ற காட்சிகளையும், வித்தியாசமான காட்சியமைப்பும் கதாபாத்திரங்களும் கொண்ட காட்சிகளையும் நம்முன் நிறுத்துகிறார் அகிரா.

இந்த படத்தின் வாயிலாக அவர் திரைப்படத்தின் புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தினார் என நான் சொல்வது மிகையானதல்ல. தொடர்ச்சியான கதையோ, காட்சியோ, கதாபாத்திரமோ அற்ற திரைப்படம் இது. ஆறு குறுங்கதைகளைக் கொண்டது. அல்லது ஆறு சம்பவங்களைப் பற்றிய விவரிப்பு என்றும் சொல்லலாம். அந்த சம்பவங்கள் எல்லாம் கனவுகள். அந்த கனவுகள் நம்மிடையே ஏற்படுத்தும் பாதிப்பு மிகவும் அசெளகரியமாக இருக்கின்றன. போரின் விளைவுகள், இயற்கையோடு பிணக்குற்று வாழும் வாழ்க்கைமுறை ஆகியவை நம்முன் விவரிக்கப்படும் போது சற்றே அவமானமாக இருக்கின்றது. குற்ற உணர்வும் மேலோங்குகிறது. தும்பைப் பூ எப்படி இருக்கும் என்று கேட்கும் ஒரு நகர குழந்தையிடம் தும்பைப்பூவை நாம் விவரிக்க கஷ்டப்படுகிறோம் என்ற புரிதலுக்கு நாம் நம்மையும் அறியாமல் தள்ளப்படுகிறோம். இரவு என்பது இருட்டாக இருப்பது தானே என்ற கேள்வியும் மின் விளக்குகள் நட்சத்திரத்தின் ஒளியை மறைத்து விடுவதால் நாங்கள் உபயோகிப்பதில்லை என்று கூறும் கிழவனின் வரியும் பெரு மூச்சு விடச்செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாத கையாலாகதத் தனத்தை நினைவு படுத்துகிறது.

கலிங்கத்துப் போரின் போது அதன் விளைவைப் பார்த்து கலங்கிய அசோகன் அதன் பின் வாளையே தொடவில்லை. ரத்த வாடையை நேசிக்கவில்லை. ஆனால் அவனது அந்த மாற்றம் இறந்தவர்களை என்ன செய்து விட முடியும். இறந்தவர்களைன் குடும்பங்களை என்ன செய்து விட முடியும். இந்த சிந்தனையைத் தான் தருகிறான் குகையிலிருந்து வெளிப்படும் போரில் இறந்து போன வீரன். என்னால் இதை போரின் பின்விளைவு என்ற ஒற்றைக் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்க முடியவில்லை. வன்முறையை (வார்த்தைகளாளும், செயலாலும்) கையாள நேரும் எல்லா பலவீனமான சம்பவங்களுக்கும் வெட்கப்பட வேண்டிய நிர்பந்தம் நம் எல்லோருக்கும் இருப்பதாகவே தோன்றுகிறது. அந்த சம்பவங்களை காலம் நம் முன் மீண்டும் உயிர்ப்பித்து தராமல் இருப்பதால் நாம் அனைவரும் அவமானத்திலிருந்து தப்பிக்கிறோம் அவ்வளவே. இவ்வகையில் தான் அமைந்திருக்கின்றன ஒவ்வொரு கனவும் – பன்முகச்சிந்தனையை தோற்றுவிக்கும் மிகவும் சிறந்த துணுக்காக.
நியூக்ளியர் ஆயுதங்களாலும், அதி நவின ஆயுதங்களாலும் தங்கள் பலங்களை நிலை நிறுத்திக் கொள்ள நாடுகள் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் போரின் கெடு விளைவுகளைப் பற்றிப் பேசுவதென்பது எவ்வகையில் எதிர் கொள்ளப்படும் என்பது ஒரு பெரும் கேள்வி. போர் வேண்டாம் என்று பெரும்பாலான மக்கள் விரும்பினாலும் தற்காப்பு முயற்சியாக போரை மேற்கொள்ளுதல் இன்றைய சூழலில் தவிர்க்க இயலாத செயலாக ஏறக்குறைய எல்லா தேசங்களுக்கும் ஆகிவிட்டன. ஆனாலும் அதன் கேட்டை மிகவும் ஆணித்தரமாக பூச்சுகளும் ஜோடனைகளும் மிகுத்து தருகிறார் அகிரா. அவரது இகுருவை மிகச்சிறந்த படமாக மதிக்கும் எனக்கு இந்த திரைப்படம் இகிரு அளவிற்கு சிறந்த படமாக தோற்றத்தைத் தருகிறது.

பிகு – மார்ட்டின் சார்ஸி இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவரின் Last temptation of Jesus Christ –ஐ அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது என நம்புகிறேன்.

No response to “உலக திரைப்படங்கள் - ட்ரீம்ஸ்”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman