Adsense

ராமநாதனின் இரவு


ராமநாதனின் தூக்கம் கலையும் போது முழங்கால் வலி அதிகமாக இருந்தது. அடி வயிறு கனத்திருந்ததால் ஏற்பட்ட உந்துதல் மலம் கழிக்கவா இல்லை சிறுநீர் கழிக்கவா என அவருக்கு அந்த தூக்க கலக்கத்தில் நிச்சயமாக தெரியவில்லை. இப்போதெல்லாம் அவரையும் அறியாமல் சில சமயங்களில் தூக்கத்தில் வேஷ்டியிலேயே மலம் கழித்து விடுவதால் மருமகள் முன்னிலையில் அரவிந்தனிடம் அடிக்கடி திட்டு வாங்க நேரிடுவது அவருக்கு வெட்கத்தையே ஏற்படுத்துகிறது. இடது கையால் பின் இடுப்பின் கீழே தடவிப் பார்த்தார். ஈரம் ஏதுமில்லாதது அவருக்கு மிகுந்த ஆசுவாசத்தை ஏற்படுத்தியது.
நேரம் தோராயமாக ஒரு மணி இருக்கலாம் என்று நினைத்தார். சுற்றிலும் இருட்டாக இருந்தது. முற்றத்தில் மட்டும் மங்கலான வெளிச்சம் இருந்தது. இருட்டில் ஒரு முறை முட்டியில் இடித்துக் கொண்டதிலிருந்து அரவிந்தன் செய்த ஏற்பாடு இது. அறைக்குள் வந்த அந்த மங்கலான வெளிச்சத்தில் சுவரைத் துழாவி விளக்கைப் போடலாம் என கட்டிலிருந்து எழுந்தரித்தார். பழையதாக போயிருந்த அந்த கோட்ரேஜ் கட்டில் க்றீச் என ஓசை எழுப்பியது.
விளக்கைப் போட்ட போது சுவர் கடிகாரம் 2:30 என காட்டியது. இப்போதெல்லாம் இப்படி அர்த்த ராத்திரியில் தூக்கம் கலைந்து விடுகிறது. விடிகாலை அவரையும் அறியாமல் அசரும் வரை தூக்கம் வருவதில்லை.
பெட் பேன் வசதி இல்லாததாலும், தன் மலத்தை தன் மகனோ மருமகளோ அள்ளுவது கெளரவக் குறைச்சல் என்று நினைத்ததாலும் அவரே டாய்லெட் வரை சென்று வரலாம் என நினைத்தார். மெல்ல குனிந்து மூத்திர பக்கெட்டை எடுத்தார். இரவு நேரங்களில் மூத்திரத்திற்காக டாய்லெட் வரை செல்லும் சோர்வை தவிர்க்க செய்யப்பட்ட ஏற்பாடு. அந்த மூத்திர பக்கெட்டில் இரவு தூங்குவதற்கு முன் பெய்த சிறுநீர் மஞ்சள் நிறத்தில் தேங்கி இருந்தது. தினமும் காலை வேலைக்காரி பினாயில் போட்டு அறையை கழுவினாலும் இந்த மூத்திர பக்கெட்டினால் இந்த அறையில் எப்போதும் மூத்திர வாடை வீசிக்கொண்டிருக்கும். அறைக்கு புதிதாக வருபவர்களின் நாசியை நெருக்கும். அவருக்கும் இந்த வீட்டிலிருப்பவர்களுக்கும் அந்த நாற்றம் பழகி விட்டிருந்தது.
அந்த மூத்திரத்தை டாய்லெட்டில் கொட்டிவிட்டு மலம் கழித்துவிட்டு வரும் போது அதிக தாகம் ஏற்பட்டது. மருமகளை எழுப்பினால் வெந்நீரில் ஹார்லிக்ஸ் போட்டுத் தருவாள். ஆனால் இந்த அர்த்த ராத்திரியில் அவளை எழுப்புவது அவ்வளவு உசிதமாக படவில்லை. அவளுக்கும் விளையாட்டாக அறுபத்தைந்து வயதாகி விட்டது. அவளை கவனிக்கவே சமயத்தில் ஆள் தேவைப்படுகிறது. அறையில் இருந்த ப்ளாஸ்கில் இரவு போட்ட ஹார்லிக்ஸில் மிதமிருப்பதைக் குடித்து விட்டு அதற்குமேல் கொஞ்சம் தண்ணீர் குடித்தால் தாகம் மட்டுப்படும் என நினைத்த போது ராஜத்தின் நினைவு அவரை அனிச்சையாக தாக்கியது அவருக்கே ஆச்சரியமாக இருந்தது.
அவள் இறந்து ஏறக்குறைய அம்பது வருடங்கள் ஆகியிருக்கும் என நினைத்தார். ஒரு வேளை அதற்கு மேலும் கூட ஆகியிருக்கலாம். அவள் இறந்த பின் அவளைப் பற்றிய நினைவு வந்தது மிக சில நாட்களே. அவள் இருந்த வரை வீட்டில் தரித்திரமே தாண்டவமாடியது. சமிப காலமாக அவளது முகம் லேசாக நினைவிலிருந்து தப்பிக்கத் துவங்கி விட்டது. அவள் இரு மூக்கிலும் மூக்குத்தி அணிந்திருந்தாளா இல்லை ஒரு முக்கில் மட்டும் தானா என்பது போன்ற சந்தேகங்கள் அவருக்கு அடிக்கடி ஏற்படும். ஆனால் அவள் இறக்கும் வரை தன்னை மீறி ஒரு வார்த்தை பேசி அறியாதவர். பதிமூன்று வயதில் தன்னை திருமணம் செய்து கொண்டு வந்ததிலிருந்து கிஞ்சித்தும் சுகப்படாமல், கஷ்டம் மட்டுமே அனுபவித்து விட்டு இறந்து போன ஆத்மா என்று அவள் மேல் அவருக்கு பச்சாதாபம் உண்டு. ஏழாவது முறை கர்பம் தரித்திருந்த போது ஒரு நாள் தான் இரண்டு மூன்று முறை கூவி அழைத்தும் வராமல் பக்கத்து வீட்டின் ரேடியோவிலிருந்து வந்த உலகே மாயம் பாட்டை கேட்டு ரஸித்துக் கொண்டிருந்ததில் வெகுண்டு அவளை உதைத்ததில் கர்பம் கலைந்து சில நாட்கள் படுக்கையில் கிடந்து பின் இறந்தே போய்விட்டாள். விடிந்தால் அவளுக்கு திவசம். அரவிந்தன் எந்த நாட்டிலிருந்தாலும் இந்த ஒரு தினத்தில் மட்டும் மறக்காமல் சென்னைக்கு வந்து விடுவான் கர்மாவை செய்ய. தன்னுடைய மகன்களில் ராஜத்தின் மரணத்திற்கு தன்னுடைய கையாலாகதத் தனம் தான் என குற்றம் சாட்டும் ஒரே மகன் அவன் தான். சரி வர முகம் கொடுத்து இன்று வரை பேசுவது இல்லை. கோபத்தை வெளிக்காட்டாமல் தன்னிடம் தேவைப்படும் போது மட்டும் அளந்து ஒரு சில வார்த்தைகள் பேசி விட்டு எட்ட இருந்து விடுவது வழக்கம். ஆனால் தன்னுடைய தள்ளாத காலத்தில் எந்த குறையும் இல்லாது அரவிந்தன் தன்னைப் பார்த்துக் கொள்வதில் அவருக்கு அதித நிம்மதி.
படுக்கையின் கீழ் முந்தைய தினத்தின் பேப்பர் கிடந்தது. தூக்கம் வராததால் அந்த பேப்பரை கையிலெடுத்துக் கொண்டார். தலைப்புச் செய்திகளிலும், முக்கியச்செய்திகளிலும் அவர் ஆர்வத்தை இழந்து பல வருடங்கள் ஆகியிருந்தது. ஆபிச்சுவரி பக்கத்தை எடுத்து பார்க்கலானார். இறந்தவர்களில் எத்தனைப் பேர் பிராமணராக இருப்பார்கள் என்று அவரால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை. அவர் காலத்து ஆசாமிகளில் ஸ்வாமி நாதன் மட்டுமே சில காலம் முன்பு வரை உயிருடன் இருந்தார். அதன் பின் அவர் குறித்த எந்த தகவலுமில்லை. இன்றும் ஆபிச்சுவரியில் ஸ்வாமி நாதன் என்ற பெயர் இல்லை. ஒரு வேளை ஆபிச்சுவரி கொடுக்கும் வழக்கம் இல்லையோ என சந்தேகித்தார். ஆறு வயது சிறுமியின் இறப்புச் செய்தி ஒன்று இரண்டு மூன்று பக்கங்களில் புகைப்படத்துடன் வேவ்வேறு ஆசாமிகளால் வெளியிடப்பட்டிருந்தது. அன்று வந்த ஆபிச்சுவரியில் யாரும் தொன்னூற்றி ஒன்பதைத்தாண்டி இல்லாதது அவருக்கு மிகுந்த அசெளகரியத்தைத் தந்தது. மீண்டும் அந்த சிறுமியின் படத்தப் பார்த்தார். அந்த புகைப்படத்தை கை விரலால் வருடினார். தனது வயதான காலம் வரை வாழாமல் மூப்பின் எந்த கஷ்ட்டத்தையும் பார்க்காமல் இறக்க நேர்ந்தது ஒரு வேளை பாக்கியமோ என்று நினைத்தார். அவருக்கு விடை நிச்சயமாகத் தெரியவில்லை. பெருமூச்சு விட்டார்.
அந்தப் பெண்ணின் முகம் தனது கொள்ளுப்பேத்தியின் முகத்தைப் போன்று இருப்பதாக ஒரு பாவனை தோன்றியது. தனது வம்சத்தில் இருப்பவர்கள் யாரும் தன் காதுக்கெட்டியபடி எந்த பாதகமும் விளைந்து விடவில்லை என்பது அவருக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்தது. மகன் வழியில் நான்காவது தலைமுறையைப் பார்த்துவிட்டதால் சொர்கவாசல் கிடைத்து விடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எந்த விதமான கஷ்டமுமின்றி அனையாச மரணம் நேர்ந்து விட்டால் சந்தோஷம். ராமானுஜம் போல ஆஸ்பத்திரியில் கிடக்க நேருமோ என்ற பயம் அவரின் மனக்கிலேசத்தை அதிகப்படுத்தியது. சுந்தர காண்டத்தை மீண்டும் படிக்கலாம் என்று தோன்றியது. எத்தனையோ முறை படித்தாகிவிட்டது. ஆனாலும் சில பதங்களுக்கு இன்னும் புதிய பொருள் கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது. அர்த்தம் தெரியாதவனும் ராமாயணம் படிக்க படிக்க அர்த்தத்தை தானாக தெரிந்துக் கொள்வான் என்பது எவ்வளவு உண்மை. இன்னும் அதிகம் ஒன்று அல்லது இரண்டு வருடம் உயிரோடு இருக்கலாம். அதற்குள் விதுர நீதிக்கு பாஷ்யம் எழுதுவதை முடித்து விட வேண்டும். சான்ஸ்கிரிட் காலேஜ் சீனிவாசனிடம் சொன்னால் யாராவது ஒரு வித்யார்த்தியை அனுப்பி வைப்பான். கொஞ்சம் விஷயம் தெரிந்தவனாக இருந்தால், அவனிடம் அந்த வேளையை ஒப்படைத்து விட்டு நிம்மதியாக இருக்கலாம். இல்லாவிடில் இது வரை எழுதியதை சீனிவாசனிடம் கொடுத்து விடலாம். அவன் அதை முடித்து விடுவான். ஆனால் தன்னளவிற்கு அவனால் எழுத முடியாது என்பதால் அந்த எண்ணத்திலிருந்து விடுபட்டார். இதுவரை எழுதிய புத்தகங்களுக்கு ராயல்டி வருவது நின்று போனது என்றிலிருந்து என்று தெரியவில்லை. எவ்வளவு பணம் வரவேண்டும் என்ற கணக்கும் வைத்துக் கொள்ளவில்லை. அதற்கான தேவையுமில்லை. காசு பணம் குறைவின்றி வழிகிறது. சமயத்தில் அவருக்கு தன்னிடமிருக்கும் காசை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உயில் எழுதலாமா என்று தோன்றிவிட்டு அந்த பணம் யாருக்கு தேவைப்படும் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் அந்த எண்ணத்தையும் விலக்கினார். எண்ணங்களிலிருந்து விடுபட்டு மீண்டும் சுந்தர காண்டத்தை தொடர்ந்தார். பத்து நிமிடங்களுக்கு மேல் புத்தகத்தின் மேல் கவனம் ஓடாது தூங்கி போனார்.
விடியற்காலையில் அரவிந்தன் எவ்வளவு எழுப்பியும் அவர் எழுந்திருக்கவில்லை.

----------

இந்த சிறுகதை எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது. எந்த விதமான ஜோடனைகளும் உரையாடல்களும் நவின சிறுகதை உத்திகளும் அற்ற அகவயப்பட்ட இந்த நடையை சோதனை செய்து பார்க்க பல நாட்கள் ஆசைப்பட்டிருக்கிறேன். இந்த சிறுகதை அந்த நடையில் அமைந்தது எனக்கு மகிழ்ச்சி.

No response to “ராமநாதனின் இரவு”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman