Adsense

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்


தமிழகத்தில் ஆட்சி மாறிவிட்டது. தமிழக அரசியலின் தலையெழுத்தை மூன்று வார காலம் மாற்றி விட்டது. இந்த தேர்தலில் அதிகம் இருந்தது குழப்பம் தான். அந்த குழப்பம் தான் கடைசி நேரத்து மாற்றத்திற்கு வித்திட்டிருக்கிறது. முதன் முறையாக இந்த தேர்தலில் 49 ஓ போட்ட எனக்கு இந்த தேர்தலின் முடிவு பிடித்திருக்கிறது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடையாது. திராவிட கட்சிகளுக்கு மாற்று தோன்றுவதற்கான சூழலுக்கு வித்திடபட்டிருக்கிறது. இதுவே பெரிய விஷயம். ஆளுங்கட்சி சற்றே அதிகமாக கவனமாக இருக்க வேண்டும். உப்புக்குச் சப்பாணியாக இல்லாமல் கனிசமான இடத்துடன் சட்டசபைக்கு வந்திருக்கும் எதிர்கட்சி இருக்கிறது, கேள்வி கேட்க. கேள்வி கேட்பார்களா என்பது அடுத்த பிரச்சனை. இந்த தேர்தல் முடிவில் எனக்கிருந்த ஒரே ஆச்சரியம் - லோக்பரித்ரன். விஜயகாந்த்-திற்கு அலை அடிப்பது நான் எதிர் பார்த்தது தான்.

லோக் பரித்ரனைப் பற்றி எனக்கு சில கருத்துகள் இருக்கின்றன.
மைலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட பெசண்ட் நகரில் இவர்கள் பிரச்சாரம் செய்த மாதிரியே தெரியவில்லை. இதே போல் தான் மந்தவெளி, கலாக்ஷேத்ரா காலனிகளிலும் (அங்குள்ள நன்பர்கள் சொல்லி கேள்வி). இருந்தாலும் ஓட்டு போட்டிருக்கிறார்கள். அங்குள்ள மக்கள் பெரும்பாலும் படித்த, மத்திய தர/ உயர் மட்ட மக்கள்களாக இருப்பதால் அவர்களுக்கு இவர்களைப் பற்றிய பரிச்சயம் இருக்கின்றது. பிழைத்தார்கள்.
IIT கட்சி என்னும் அடையாளம் இவர்களுக்கு நல்ல Branding. முக்கியமாக சென்னை போல IIT - craze இருக்கும் பெரு நகரங்களில். இவர்கள் உண்மையிலேயே ஆட்சியைப் பிடிப்பதில் தீவிரமாக இருப்பார்களானால், இவர்களின் இடம் சென்னை அல்ல. நகரங்களும், கிராமங்களும் தான். பிஸ்ஸாவும் கோக்கும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக கொண்டவர்களால், இவர்களை எளிதில் ஏற்றுக் கொள்ள முடியும். லோக்பரித்ரனின் அணுகுமுறையை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராக இருப்பார்கள். ஆனால் தமிழகம் என்பது இவர்கள் மட்டுமே அன்று. இந்த கூட்டம் தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் சில விழுக்காடுகளே. லோக் பரித்ரன் கிராமங்களில் போட்டியிட்டிருப்பார்களேயானால், இவர்களின் உண்மையான செல்வாக்கு தெரிந்திருக்கும். என்னைப் பொருத்த மட்டில், இவர்கள் இன்னும் பலப்பரிட்சையில் இறங்க வில்லை.
கிராமங்களில் தான் உண்மையான தமிழகமும், அதன் பிரச்சனைகளும் இருக்கின்றன. அதை லோக்பரித்ரன் உண்மையாகவே புரிந்து கொண்டிருக்கிறதா என்பதில் எனக்கு சந்தேகம் இன்னும் இருக்கின்றது. கிராம மக்களைப் பொருத்த வரையில் படித்தவர்கள் வேறு சாதி. அந்த பிம்பத்தை உடைத்து அவர்களுள் ஒருவராக லோக் பரித்ரனை ஏற்றுக் கொள்ள வைப்பது நிச்சயம் சவாலான விஷயம்.
என்ன செய்தாலும் இவர்களால் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு ஆட்சியைப் பற்றி கனவு காண முடியாது. இவர்கள் பத்தாவது ஆண்டில் வலிமையான எதிர்கட்சியாக உருவாக முடிந்தால் அதுவே என்னைப் பொருத்த வரையில் மிகப்பெரிய சாதனை.

அடுத்த தேர்தலுக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் இருக்கின்றன (அப்படி வைத்துக் கொள்வோம்). முதல் கட்டமாக இவர்கள் உருவாக்க வெண்டியதெல்லாம் Solid task force மட்டுமே. நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இவர்கள் கொள்கைகளை எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு முன் தமிழகத்தின் பிரச்சனைகளை முற்றிலுமாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழக மக்களுக்குத் தேவை நிருபணங்கள். அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையிலேயே தமிழக மக்கள் அரசியல் கட்சிகளை ஏற்றுக் கொள்கிறார்கள். திராவிட கட்சிகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் படித்தாலே இந்த போக்கை உணர முடியும். குறிப்பாக திமுக. எந்த தேர்தலிலும் மாறாத Vote bank எந்த கட்சிக்கும் மிக குறைவு. அந்த வாக்கு வங்கியை உருவாக்குவதும் தக்கவைத்துக் கொள்வதும் அவ்வளவு எளிதல்ல. அந்த வாக்கு வங்கியை உருவாக்குதல் அடுத்த கட்டம். இன்று அதிமுகவிற்கு கிடைப்பவையில் கணிசமான அளவு MGR உருவக்கிவிட்டுச் சென்ற வாக்கு வங்கி என்றால் மிகையல்ல. அவருக்குப் பின் ஜெயலலிதா செய்வதெல்லாம் அதை கட்டிக்காக்கச் செய்யும் முயற்சியே. அவரால் பெரிய வாக்கு வங்கியை உருவாக்க முடியவில்லை. இது பொய்யென்றால், இந்த தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக விஜயகாந்த் உருவாகியிருக்க முடியாது. திராவிட கட்சிகளைப் பொருத்தவரையில் ஒவ்வொரு பத்து வருஷத்திலும் அதன் வாக்கு வங்கி குறைந்து கொண்டே வருகின்றது. லோக்பரித்ரன் முதலில் உள்ளாட்சி மற்றும் நகராட்சி தேர்தல்களில் தங்கள் representation-ஐ காட்ட வேண்டும். படித்த கிராமத்து இளைஞர்களை ஒன்று சேர்க்க வேண்டும். அவர்கள் வாயிலாக இளைய வாக்காளர்களின் ஆதரவை அவர்கள் பெற வேண்டும். இந்த இளைய வாக்காளர்களளை லோக்பரித்ரனின் வாக்கு வங்கியாக உருவாக்க வேண்டும். இந்த வங்கி தான் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவர்களிடமும், மாற்று ஆட்சி செய்யக்கூடிய எந்த கட்சியிடமும் மக்கள் எதிர்பார்ப்பது, வெளிப்படையான ஆட்சி. மக்கள் குரலை பிரதிபலிக்கும் முடிவுகள். ஊழல்கற்ற நிர்வாகம். இவற்றைத்தன் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக கொண்டு அந்த கொள்கையின் படி ஆட்சி செய்ய துணிந்தவர்கள் அரசியலில் இருப்பது நல்லது. இவற்றை திராவிட கட்சிகளிடம் இனிமேல் தமிழகம் எதிர்பார்க்க முடியாது. ஜெயலலிதாவும் கருணாநிதியும் முதலில் ஆரோக்கியமாக ஒரு கருத்தில் நாட்டு நலனில் ஒரு விவாதிக்கட்டும். இவ்வளவு ஏன் எதிர்கட்சி தலைவராக சட்ட சபைக்கு வரட்டும். "The lesser evil" is chosen always. இந்த நிலை மாற வேண்டும்.

இந்த கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருக்கும் போது என் எண்ணத்தில் வந்தது Secret Ballot (ராயே மக்ஃபி) என்னும் இராணிய திரைப்படம். முழுக்க முழுக்க ஜனநாயகத்தைப் பற்றிய அங்கதமே இந்த surrealistic திரைப்படம். ஜாலியாக, அதே சமயம் அங்கங்கே ஆழமான கேள்வியையும் முன் வைக்கும் படம். இரண்டே கதாபாத்திரங்கள். அவர்களிடையே கழியும் 8 மணி நேரம் தான் மொத்தப்படமே. தொழில் முறை நடிகர்கள் யாரும் கிடையாது. உணர்ச்சிகளின் அடிப்படையில் எந்த உரையாடலும், நிகழ்வும் கிடையாது. இதில் ஒரு கதாபாத்திரம் "Personification of Democratic Idealism". இந்த கதாபாத்திரம் ஒரு தேர்தல் ஏஜண்ட். ஓட்டளிப்பதால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என திடமாக நம்பும், அதன் படி எல்லோரையும் ஒட்டளிக்கத் தூண்டும் ஒரு idealistic கதாபாத்திரம். வாக்கு சேகரிப்பதற்காக கல்லையும் புரட்டுகிறாள். கல்லறையிலும் காத்து நிற்கிறாள். கதையின் சுருக்கம் இது தான்.

இராணில் நடக்கும் ஏதோ ஒரு தேர்தலுக்காக ஒதுக்குப் புறமாக இருக்கும் ஏதோ ஒரு தீவுக்கு செல்கிறாள் எதோ ஒரு இளம் பெண். நான் சொல்லி இருக்கும் "ஏதோ"- விற்கெல்லாம் பெயர் சொல்ல இயக்குனர் விரும்பவில்லை. சினிமாவிற்கு தேவையான இடம், காலம் என்ற இரண்டு basic parameters-ஐயும் இயக்குனர் கண்டு கொள்ளவில்லை. ஏனென்றால் படம் பேசுவது மனிதர்களைப் பற்றி அல்ல.

அந்த ஏதோ ஒர் தீவிற்கு தேர்தல் நாளன்று பாரஷூட்டில் வந்து விழுகிறது ஒரு வாக்குப்பெட்டி. ஒரு படகில் வந்து இறங்குகிறாள் தேர்தல் ஏஜண்ட். இந்த தேர்தல் ஏஜண்டிற்கு உதவ வேண்டியது அந்த தீவிலிருக்கும் ராணுவவீரனின் பணி. மனிதர்களே அற்ற அல்லது மிகவும் சொற்பமான மனிதர்களே வாழும் அந்த தீவில் ராணுவ வண்டியில் சென்று, மனிதர்களைத் தேடிப் பிடித்து அவர்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டியது அந்தப் பெண்ணின் வேலை. அந்த வாக்குப் பதிவு மாலை ஐந்து மணிக்கு முடிந்தவுடன் அவள் திரும்ப வேண்டும். வழியில் அவள் சந்திக்கும் மனிதர்கள், சம்பவங்களின் கோர்வையே இந்தப் படம்.

12 வயது பெண் வாக்கு அளிக்க முடியாது என்று ஏஜண்ட் மறுக்கும் போது "12 வயது பெண் திருமணம் செய்து கொள்ளளாம், வாக்களிக்கக்கூடாதா ?" என்று எதிர்கேள்வி கேட்கிறாள் ஒரு பெண். "இது தான் நடைமுறை சட்டம். நாம் சட்டத்தைப் பின்பற்றியாக வேண்டும்" என்று பதில் சொல்கிறாள் ஏஜண்ட். வாக்குகளை சேகரித்து முடித்தவுடன் அவசரமாக திரும்பும் போது, வாகனத்தை ஒரு இடத்தில் நிறுத்தி விடுகிறான். காரணம் கேட்கும் போது, ஆள் அரவமற்ற வனாந்திரத்தில் நிற்கும் ஒரு traffic signal-இல் சிவப்பு விளக்கு ஒளிர்வதைக்காட்டுகிறான். அந்த சிவப்பு விளக்கை மீறலாம் என ஏஜண்ட் எவ்வளவோ சொன்னாலும், ராணுவ வீரன் "தான் ஒரு ராணுவ வீரனாக இருந்து கொண்டு சட்டத்தை மீற முடியாது" என்று முரண்டு பிடிக்கிறான்.

"மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும். உண் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு வராதே" என சண்டையிடும் ஏஜண்ட், "துப்பாக்கியாலும் சில காரியங்கள் நடக்கின்றன" எனறு வேறு ஒரு சந்தர்பத்தில் சொல்கிறாள்.

"தமக்கு பரிச்சயமில்லாதவர்கள் தேர்தலில் நிற்கிறார்களே. இவர்களுக்கெப்படி வாக்களிப்பது ?" என முரண்டு பிடிக்கும் குழுவும், பல பெண்களின் சார்பாக அவர்களின் அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு வந்து வாக்களிக்க விரும்பும் ஆணும், தானாக தனக்கும், தன் குடும்பத்திற்கு வேண்டியதை செய்து கொள்ளும் கிழவியும், "யாருக்கும் வாக்களிக்க முடியாது" என்று கடவுளுக்கு வாக்களிக்கும் "Solar energy plant" ஆசாமியும் மனிதர்கள் அல்லர்.

இந்த படம் நிச்சயம் ஒரு நல்ல அனுபவம். சந்தர்பம் கிடைத்தால் பாருங்கள். அதே சமயம் நகைச்சுவையாகவும் இருக்கும். (விழுந்து விழுந்து சிரிக்கும் அளவிற்கெல்லாம் இருக்காது) இது ஒரு சர்ரியலிச திரைப்படம் என்பதையும் மனதில் கொள்ளவும். நிஜத்திற்கு அருகில் இருக்கும் கதாபாத்திரங்களாலும், வேற்று நாட்டுப் படமென்பதாலும் இது தான் இராணின் தேர்தல் முறையா என்று குழம்பி விட வாய்ப்புகள் இருப்பதாலேயே இந்த எச்சரிக்கை.

No response to “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman