Adsense

ரங் தே பஸந்தி


ஒரு திங்கள் கிழமை காலையில் என்னுடன் அலுவலகத்தில் பணிபுரியும் தோழன் ஒருவன், என்னிடம் இந்த திரைப்படத்தைப்பற்றிய முதல் விமர்சனத்தை இவ்வாறு பகிர்ந்து கொண்டான்.
"இன்றைய இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு இளைஞனின் மன நிலையையும், செய்ய விரும்புவதையும் இந்த படம் பிரதிபலிக்கிறது."
சில நாட்களுக்குப் பிறகு, என்னுடைய மேலதிகாரி ஒரு ப்ராஜக்ட் மீட்டிங் முடியும் போது சில கையாலாகாதவர்களைப் பற்றி குறைப்பட்டுக் கொண்டிருந்த போது சொன்னார்.
"ரங் தே பஸந்தி பார்த்தாயா கே சி. இன்றைய இந்தியாவிற்கு தேவையான படம். பார்க்கவில்லையென்றால் இந்த வீக் எண்ட் பார்த்து விடு".

இந்த உரையாடல்கள் நடந்த பல நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் இந்த படம் பார்த்தேன். இவர்கள் சிலாகித்த அளவிற்கு எதுவுமே இல்லை. இந்த படம் சென்னை உட்பட்ட பெரு நகரங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது மற்றுமொரு துரதிரஷ்டமான விஷயம்.

என்ன சொல்ல வருகிறார் இயக்குனர் ? ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கும், வியாபாரிகளும் முற்றுப்புள்ளி வைக்க துப்பாக்கி தூக்குங்கள் என்றா ? என்ன இழவு இது. A generation awakens... என்று tag line வேறு.

மிகவும் வேதனையாகவும், ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது இந்த திரைப்படம். அஹிம்சை என்ற சித்தாந்தம் மிகச் சிறந்த போராட்ட உத்தியாக நிருபக்கப்பட்ட ஒரு தேசத்தில், நிருபிக்கப்பட்ட ஒரு நூற்றாண்டு முடிவதற்குள், அந்த சித்தாந்ததின் மேல் நம்பிக்கை இழந்து விட்டதா இந்த சமுகம். இந்த திரைப்படம் வெற்றி பெற்றதும், இதற்கு கிடைக்கும் வரவேற்பும் இந்த கவலையையே தருகிறது. வன்முறையை வீரம் என்று பரைசாற்றத் துவங்கி விட்ட இந்த அவலக்கேட்டை எப்படி பொருத்துக் கொள்வது ? இந்த படத்தின் வெற்றி Result oriented impatient society-இன் பிரதிபலிப்பு. இதைத்தான் எதிர்பார்க்கிறதா இன்றைய இளைய தலைமுறை ?

அரசியல் ஊழலற்ற ஒரு சமுகத்தை நீங்கள் உதாரணம் காட்ட முடியுமா ? ஊழல் என்பது வெட்ட வெட்ட வளரும் விருட்சம். அது வளர வளர வெட்ட முடியுமே தவிர முற்றிலும் அழிக்க முடியாது. இந்த ஊழலை எப்படி எதிர்கொள்கிறது ஒரு சமுகம் என்பதில் தான் அந்த சமுகத்தின் வளம் நிர்ணயிக்கப்படுகிறது. ஜன நாயகத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும் இந்திய சமுகத்தில் வழங்கப்பட்டிருக்கும் உரிமையை பயன்படுத்திக் கொண்டு நாம் ஊழல் செய்யும் அரசியல் தலைவர்களை எதிர்க்க முடியும். அதற்கு வலிமையான எழுச்சி மிக்க மக்கள் இயக்கம் தோன்ற வேண்டும். ஜன நாயக கட்டுமானத்தின் அஸ்திவாரமான ஓட்டுரிமையை சரியாக பயன்படுத்திக் கொண்டு தம்மை ஆள்பவர்களை தாமே நிர்ணயிக்கக்கூடிய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத ஒரு சமுகத்திற்கு ஆயுதமேந்த என்ன உரிமை இருக்கிறது. உலகத்தில் இருக்கும் சிறந்த constitution-களின் சிறந்த அம்சங்களை ஒன்று சேர்ந்து அமைந்தது இந்திய constitution. இதில் தனிமனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளைக் கொண்டு போராட துணியாத ஒரு சமுகத்திற்கு துப்பாக்கி தூக்க உரிமை இல்லை.

இரண்டாம் தர சமுகத்தால் மட்டுமே இது போன்ற இரண்டாம் தர சிந்தனைகளை ஒத்துக்கொள்ள முடியும்.

ஜாதிகளின் பெயரால், மொழியின் பெயரால், இனத்தின் பெயரால் வன்முறையை கையிலெடுத்திருக்கும் இந்த சமுகத்திற்கு வன்முறை தான் தீர்வு என்ற இன்னொரு பிரச்சனையை அறிமுகப்படுத்துகிறதா இந்தப் படம் ? ஜன நாயகத்தில், மக்கள் இயக்கத்தில் நம்பிக்கையற்ற ஒரு சமுகத்தின் வளர்ச்சி எப்படியிருக்கும் என்று நினைத்தால் அச்சமாக இருக்கிறது. விதுர நீதியும், அர்த்த சாஸ்திரமும், யக்ஷ ப்ரஷணமும் தோன்றிய நாட்டில் அரசியல் நடத்தத் தெரியாத அரசியல்வாதிகள் இருப்பது கேவலம் என்றால், அதை எதிர்த்துப்போராடத் தெரியாது, வன்முறையை வழியாக கொள்வதும், அதை போதிப்பதும் மகா கேவலம்.

இளைஞர்களே, நீங்கள் செல்ல வேண்டியது எங்கு என தீர்மாணிக்கும் முன், எங்கிருந்து வந்தீர்கள் என்று திரும்பிப் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் வந்த வழியில் இருக்கிறது, நீங்கள் செல்ல வேண்டிய இடத்தின் பெயர்.

இந்த கதைக்கு சப்பக்கட்டு கட்ட பகத் சிங்கையும், ராஜ் குருவையும், சந்திரசேகர் ஆசாதையும் துணைக்கு வேறு கூப்பிடுகிறார் இயக்குனர். ஒரு அடக்குமுறை ஆட்சியில், உரிமைகள் அற்ற ஒரு ஆட்சியில், விடுதலைப் போரின் போது தீவிரவாத இயக்கத்தின் மீது நம்பிக்கை கொண்டு அந்த நம்பிக்கைக்காக் உயிரை விட்டவர்கள் அவர்கள். அவர்கள் வீரர்கள். இந்த கதையில் இருப்பவர்கள் கையாலாகாதவர்கள். இந்த கையாலாகாதவர்களை அந்த போராளிகளுடன் ஒப்புமை படுத்தி அத்தகைய ஒரு போரை, போராளிகளை அவமானப்படுத்தி இருக்கிறார், இயக்குனர். இதே போல சில வருடங்களுக்கு முன் தமிழில் ஒரு அவமதிப்பு நடந்தது - இந்தியன் என்ற பெயரில். விடுதலையின் மகோன்னதத்தை, அந்த பெரு நிலையை தன்னுடைய அடுத்த சந்ததிக்குப் பரப்ப தவறிய ஒரு சமுகத்தின் ஒரு பிரதிநிதி சமுகத்தை திருத்துகிறேன் என்று வன்முறையை கையிலெடுப்பதை நியாயப்படுத்தியது அந்த திரைப்படம். அதையும் பெரிய வெற்றி பெறச்செய்தது இந்த சமுகம்.

இயக்குனர் இரு வேறு காலங்களை ஒரு நுணியில் முடித்திருப்பதை நல்ல இயக்க உத்தி (புதிய இயக்க உத்தி என்றில்லை) என்று வேண்டுமானால் பாராட்டலாம். சில வசனங்கள் கூர்மையாக இருக்கின்றன. மற்றபடி எனக்கு குமட்டிக் கொண்டு வந்தது. இந்த படம் ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்படும். இந்த படத்திற்கு நேஷனல் அவார்டு, பிலிம் பேர் அவர்டு எல்லாம் கொடுப்பார்கள்.

இந்த நிறம் இந்தியாவிற்கு வேண்டாம் !


பிகு:
இந்த படத்தைப் பார்த்த உடன் எழுந்த ஆற்றாமையில் எழுதியது இது. அதனால் என் மொழி சற்று அதிகமாகவே கடுமையாக வெளிப்பட்டிருக்கக்கிறது. இதை பொதுவில் வைக்க வேண்டாம் என்று தோன்றிய எனக்கு, இன்றைக்கு இதை அப்படியே வலையேற்ற தொன்றியது.

2 Responses to “ரங் தே பஸந்தி”

Subash said...

இந்திப்படங்கள் பார்ப்பது மிகவும் குறைவு. பார்த்ததில் all time fav இந்த படம். அனா இப்படியொரு பார்வையில் நான் யோசிக்கவேயில்லை. நன்றாக சாட்டையடியாக சொல்லியிருக்கிறீர்கள்.

படத்திற்கு வர்த்தக ரீதியாக இலாபம் பெற இவ்வாறு வன்முறை தீர்வு வைக்கப்படுவதாக நினைக்கிறேன். இல்லாவிட்டால் அறிவுரை சொல்ற படம்னு யாரும் திரும்பிகூட பார்க்கமாட்டார்கள் என நினைக்கிறேன். இந்தியனும் அப்படியே.

ஆனா என்னமோ. இப்படி அராழரகம் பண்றவங்கள கோர்ட்டில் வைத்து சிறையனுப்புவதை பார்ப்பதைவிட வன்முறையால் அவங்க தலைய பிடிச்சு ஒரு ஆட்டு ஆட்டணும்போலத்தா இருக்கு. ஒரு வேளை இம்மாதிரி படங்கள் பார்த்து இப்படி யேசிக்கறேனோ என்னமோ?

ஆனா திரரப்படங்களால்தான் இப்படி தோன்றுகிறதென சொல்லவில்லை.
1.சின்ன வயசில் முதல்முதலாக பார்த்த படம் ரஜியின் ராஜா சின்ன ரோஜா.குழந்தைகள் படமென விளம்பரப்படுத்த வீட்ல கூட்டிப்போனாங்க. இப்ப அந்த படத்த பார்த்தா அது ஒரு பக்கா ஆக்சன் படம்.
2.அப்ப ஆரம்பத்துல அம்புலிமாமா கோகுலம்னு வாங்கி தருவார். ஆனா அதுக்கு பிறகு அண்ணா வாங்கி தந்ததெல்லாமே மாயாவியும் டெக்ஸ் வில்லரும்தான்.

இதேமாதிரி எத்தனைபேர் இருப்பாங்க? நீங்க சொல்றமாதிரி வன்முறையே வளின்னு சொல்ற படங்கள் வெற்றிபெற இதுதா காரணம்னு நினைக்கிறேன்.

நாங்க எங்கள் பிள்ளைகளை அம்மாதிரி பாதிப்பில்லாமல் வளர்க்கலாம். அப்பதான் சரியான சமுதாயம் கிடைக்கும். சமுதாயத்தில் மாற்றங்களை முழுவெற்றியாக கொண்டுவரவேண்டுமென்றால் அதை 1ம் ஆண்டு படிக்கும் பிள்ளையிடமிருந்துதான் ஆரம்பிக்கவேண்டும். ஏனெனில் நீங்க பதிவில் சொன்னதெல்ாமே உண்மைதான். கண்டிப்பாக இப்படியே போனால் எமக்கென இருக்கும் இடையாளத்தை இழந்துவிடுவோம். அதை ஒத்துக்கொள்ளும் அளவிற்கு நடைமுறையில் பண்ணுவதில்லை. அதாவது இப்படியான படங்களுக்கு ஆதரவளிப்பதை சொல்கிறேன். ஆனால் இப்ப இப்படியான படங்களிற்கு ஆதரவளித்தால் நாளை நம் பிள்ளைகள் இதை நிஜ வாழ்வில் பொன்டுவருவார்கள். உதா-மேலைத்தேய நாடுகளில் பாடசாலை மாணவர்கள் துப்பாக்கிவைத்திருப்பது. அந்தமாதிரி நம் பிள்ளைகள் ஆளாகாமலிருக்க நிச்சயமாக இப்போதே விழித்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவம் பிடித்திருக்கிறது. எல்லாவற்றையும் வாசிக்கவில்லை. திரைப்படம், அறிவியல்,புத்தக விமர்சனம். இந்த லேபிலிலுள்ளவற்றையே இன்று படித்திருக்கிறேன். தொடர்ந்தும் படக்கணும்.

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

கருத்துக்கு நன்றி சுபாஷ். போர்களால் அழிவு மட்டுமே ஏற்படுமே தவிர. ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் எங்குமே ஏற்படாது - ஏற்பட்டதுமில்லை. என்னைப் பொறுத்தவரை உலகத்திலேயே மிகவும் தீவிரமான போராட்ட உத்தி (அல்லது வன்முறையின் உச்சகட்ட வன்முறை) அஹிம்சை தான் :-)

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman