Adsense

சமிபத்தைய வாசிப்பு


iசமிபத்தைய வாசிப்புகளில் எனக்கு நிறைவான வாசக அனுபவமே கிடைத்ததில் மகிழ்ச்சி. புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களில் கிடைத்த வாசிப்ப்பு அனுபவத்தை முன்னிருத்துவதே இப்பதிவின் நோக்கம்.

கவிதைகள் எனக்கு முக்கியமானவை. I believe poetry is the most artistic form of communication and Art is the most intellectual capability of Human beings. கவிதைகள் பற்றிய கட்டுரைகள் மற்றும் ஆய்வு கட்டுரைகளின் வாசிப்பு - கவிதைகளை, அவைப்பற்றிய புரிதலை அதிகப்படுத்துகிறது. இதைத் தவிர கவிதைகளை இயற்றுதல் என்பது கவிதைகளைப் பற்றிய புரிதலை மிகவும் அதிகப்படுத்தும். It is kind of hands on training. நான் இணையம்/ வார இதழ்கள் மற்றும் மாத இதழ்களில் எழுதப்படும் பெரும்பாலன கவிதைகளை வாசித்து விடுகிறேன். சில கவிதைகள் மிகவும் அற்புதமான வெளியை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றன. சில கவிதையின் வரிகள் ஒரு புதிய கவிதையை நான் எழுத தூண்டுகோளாக இருந்திருக்கின்றன. நான் இவ்வாறு ஆளப்பட்டு எழுதத்துவங்கிய பல சமயங்களில் தோன்றிய கரு பல்வேறு கிளைகளாய் உருவெடுத்து, வேறேதோவாக கவிதைகள் முடிந்ததுண்டு.

~~@~~
நான் எழுதத் துவங்கியபோது
இந்த கவிதையில்லை
வார்த்தையாகி
வரியாகி
கவிதையின் கிளையாகி
பின்னர் கவிதையாகவே
பரிமாணித்து விட்டது.
சிரமமின்றி தன்னை
உறுவாக்கிக் கொள்ளும்
இக்கவிதைகளின் வெளியில்
அலைகழிக்கப்படும்
சிறு பொறியென
மாறிப்போகின்றது என் இருப்பு
~~@~~

இவ்வகை வாசிப்பு எனக்கு கவிதைகளை மேலும் நெருக்கமாக அணுக உதவுகின்றன. இவ்வகையான அனுபவம் பெரும்பாலான கவிஞர்களுக்கும், கவிதை ரசிகர்களுக்கும் வாய்ப்பது தான். ஆனால் கவிதையை ஒரு நெடுவழிப்பாதையென கொண்டால், அதில் குறிப்பிடத்தக்க தூரம் பயணித்தபின்னும் (பயணித்திருக்கிறோம் என்று எனக்கு தோன்றிய பின்னும்), ஒரு அத்வானத்தில் நிற்பது போன்றோ ஒரு இருட்டுச் சாலையில் பாதை தெரியாமல் துழாவுவது போன்றோ ஒரு பிரமை அடிக்கடி ஏற்படும். மீண்டும் துவங்கிய இடத்திற்கு வந்தது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டு, பல நாட்கள் கவிதைகள் பற்றிய கட்டுரைகளை வாசித்து ஒரு புரிதலை தேற்றிக் கொள்ள முயன்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் புதிகாக ஏதேனும் கற்றுக் கொண்டது போன்றே உணர்கிறேன்.

யுவன்-இன் கவிதை தொகுப்பான "கை மறதியாய் வைத்த நாள்" என்ற கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் முதல் வாக்கியமாக இவ்வனுபவத்தை கூறுகிறார். அவர் வார்த்தைகளில் பார்ப்போம்
"கவிதை எழுத எழுத கவிதை பற்றிய புரியாமை அதிகரித்து வருவதாகவே உணர்கிறேன். பிறர் எழுதிய நல்ல கவிதையைப் படித்துணர்ந்த மாத்திரத்தில் மிகவும் அழுத்தமாக எனக்குள் உருவாகும் தாழ்வுணர்ச்சியையும் எதுவும் செய்ய இயலவில்லை".

இந்த தொகுப்பில், கவிதைகள் அளவிற்கு நான் இவர் முன்னுரையை முக்கியமாக நினைக்கிறேன். ஒரு கவிஞன் தன்னுடைய கவிதைகள் குறித்த தன் பார்வையை, அக்கவிதைகளுடனான தன் வெளியை பகிர்ந்து கொள்ளுதல் என்ற முறையில் இந்த முன்னுரை முக்கியமானதாகிறது.

கவிதைகள் பற்றிய புரிதல்கள் மாற மாற அவற்றைப் பற்றிய கருத்துகளும் மாறவே செய்கின்றன. பல சமயங்களில் "தமிழின் தலை சிறந்த நவின கவிஞர்கள்" என்று பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட சிலரின் சில கவிதைகள் உண்மையிலேயே கவிதைகள் தானா என்ற சந்தேகம் எனக்கு தோன்றியதுண்டு. தனக்குத் தானே பேசிக்கொள்ளும் பேச்சாக பல கவிதைகள் தோன்றியதுண்டு. அல்லது ஒரே வடிவத்தில், சாயலில் இரு வேறு கவிஞர்கள் எழுதியிப்பதைப் பார்க்கும் போது ஒரே பாணி கவிஞர்களோ என்று கூட யோசித்திருக்கிறேன்.
இது கவிதையின் தந்திரம் என நினைக்கிறேன். அது ஒரு வடிவிலி என்றே தோன்றுகிறது. அல்லது அதிகமாக வடிவமாற்றங்களுக்கு உள்ளாகும் கலை வடிவமென்று தோன்றுகிறது. தன்னை எப்போதும் ஸ்திரமாக ஒரு ஸ்தூல வடிவில் கொள்வதில்லை. கவிஞனுக்கும் வாசகனுக்கும் இடையில் மாறிக்கொண்டே இருக்கின்றது. ஒவ்வொரு கவிதையும் அதன் ஒவ்வொரு எழுத்திலிருந்தும் ஓராயிரம் கவிதையை பிறக்கச் செய்கிறது, வெவ்வெறு காலங்களில், வடிவங்களில், மொழிகளில். அதைப் பிரசவிக்க மட்டுமே ஒரு கவிஞன் தேவைப்படுகிறான்.
கடலெங்கும் நீர்த்துளி எனும் போது, எந்த நீர்த்துளி எந்த கடலைச் சார்ந்தது ? ஒரு துளி தானே இருப்பைக் கொள்கிறதா என்ன ? ஒரு துளி உண்மையிலேயே ஒரு துளி மட்டுமேயா என்ன ? ஒரு கோப்பைக்குள் அடைக்கப்பட்ட நைல் நதியின் நீர்த்துளி நைல் நதியினுடையது தானா ? இது தான் தன் எல்லை என நிர்ணயித்துக்கொள்ளாமல் கடலின் நீர்த்துளி, கடலின் வெளியெங்கும் பரவுவதைப் போல, கவிதையில் அடைக்கப்பட்ட வார்த்தைகள் அந்த கவிதையுடையதாக, ஒரு கவிஞனுடையதாக மட்டும் இருக்கக்கூடிய சாத்தியங்கள் இல்லை. எந்த ஒரு எழுத்தும் ஒரு கவிதையே.

~~@~~
கவிதைகளாய் தோன்றி வந்த
காலம் முடிந்து
வரி வரியாய் வந்த
காலமும் போய்
வார்த்தைகள் வந்து கொண்டிருந்தன.
இப்போதெல்லாம் வெறும்
எழுத்துகள் தாம்.
அ, ஆ, இ, ஈ, உ.
~~@~~

கவிதையை கட்டுடைத்துப் பார்ப்ப்தென்பது, ஒவ்வொருவராலும் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு கோணத்தில் சாத்தியப்படும். எந்த கோணம் சரியான கோணம் ? எந்த விமர்சனம் சரியான விமர்சனம் ? அவரவர்க்கு விருப்பமான வடிவிலுள்ள பாத்திரத்தில், அவரவர்க்கு விருப்பமான அளவுகளில் குடித்துக் கொண்டிருக்க வேண்டியது தான் கவிதையை.

சரி, மீண்டும் இந்த கவிதை தொகுதிக்கு வருவோம். இந்த கவிதை பிடித்திருக்கிறதா பாருங்கள்.

நான் தோன்று முன்பே புறப்பட்டு
என்னோடு நகர்ந்து
எனக்கு அப்பால் செல்லும் நதி
தன் ஞாபகங்களுள் விரைகிறது.
கரையில் தாறுமாறாய்க் குவிந்து கிடக்கிறது
இன்றின்மேல் இன்று படிந்து
மேலும் மேலும் மென்மேலும் படிந்து
உருவான குப்பைக் குவியல்.
கை சோர்ந்த பின்னும்
ஏதும் கிடைக்கப் பெறாத யாசகனெனத்
துழாவும் போது அபூர்வமாய்க் கிடைத்தது
ஒரு கண்ணாடித் துண்டு.
உருவம் சிதைந்தும் இயல்பு சிதையாத
கண்ணாடித் துண்டு எதிரொளிக்கிறது
சில நேரம் உன்னை
எப்போதும் என்னை
தவறாமல் ஆகாயத்தை
சாய்கோணமொன்றில்
தன்போக்கில் நகரும் நதியை.

இதே போல இன்னொரு கவிதை தொகுதி பற்றியும் பேசுவோம். "அபத்தங்களின் சிம்பொனி" எனக்கு கரிகாலன் என்ற கவிஞரை அறிமுகப்படுத்தியது. இதை சென்ற வருடத்தின் சிறந்த கவிதைத் தொகுப்பென சுஜாதா விகடனில் பரிந்துரை செய்திருந்தார். இவரது கவிதைகளில் தோன்றும் நக்கலும், குழந்தைகளின் உலகமும் இவரது அடையாளங்களாக எனக்குத் தோன்றின. இவரின் கவிதைகள் மிகவும் எளிமையாக இருக்கின்றன. நேரிடையாக, புரிந்து கொள்ள அதிக சிக்கலற்றவையாய். இரண்டு கவிதைகளைப் பார்ப்போம்.

யதார்த்தம்
-------------
ரதியின் கண்டிப்பால்
காண்டம் வாங்கும்
மன்மதனை

6 D பேருந்தில்
பிள்ளைக்குட்டிகளோடு
இடம் கிடைக்காமல்
நின்றபடி பயணிக்கும்
ராமனை

என்.சி.சி. பயிற்சியில்
குறிதவறிச் சுட்டதற்காக
மைதானத்தை 12 முறைச்
சுற்றிவரும்
அர்ஜுனனை

சூதாட்டப் பித்தனை
விவாகரத்து செய்ய
வக்கீல் நோட்டிசு அனுப்பியிருக்கும்
பாஞ்சாலியை

அடகு வைக்க
கேட்பவனுக்குக் கொடுக்க
நகையின்றியிருக்கும்
கண்ணகியை

நெரிசல் மிகுந்த
வாரச்சந்தையொன்றில்
இடித்து விட்டு
வருத்தம் தெரிவித்தபடி
நகர்ந்து கொண்டிருக்கிறோம்
நம்மில் யாரேனுமொருவர்.

~~@~~

தெய்வப்பிறவிகள்
--------------------
தெருக்கூட்டும் R க்கு
ரெட்டை பெண்டாட்டிகள்
எதேச்சையாக அதிலொருத்திக்கு
S பெயர் அமைந்திருந்தது
கையாலும் வாயலும்
இன்பத்தைக் கொடுப்பவனுக்கு
K பெயரை பெற்றோர்கள்
வைத்தது ஆச்சர்யம்
கடைசியாய் கள்ளக் காதலனோடு
சேர்ந்து கணவனின் கழுத்தை அறுத்த
N ஐ செய்திதாளில் படித்ததும்
அதிர்ச்சியாய்தானிருந்தது
கடவுளின் பெயரை வைத்துக் கொண்டு
வேசைத் தொழில் செய்பவனை
எழுதப் பயந்து துப்பறியும் நிருபர்
வைத்துக் கொண்ட பெயர் X
RSKN பெயர்களைச் சொல்லலாம்
கடவுளர்களை அவமதித்தேனென்று
பிறப்புறுப்பில் எண்ணெய் ஊற்றிக்
கொளுத்த காத்திருக்கிறது ஒரு கூட்டம்

~~@~~

No response to “சமிபத்தைய வாசிப்பு”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman