Adsense

இரு திரைப்படங்கள்


தனி மனிதன், தனக்குள்ளே வாழ நேரும் தருணங்கள் மிகவும் அதிகம். அந்தத் தருணங்களே மனிதனின் முழு ஆளுமையை தீர்மாணிக்கின்றன என்பதில் எனக்கு ஆழமான நம்பிக்கை உண்டு. தன் ஆற்றலை தானே தோண்டி எடுக்கும் நேரமே ஒரு மனிதனின் வாழ்வின் உன்னதமான தருணம். தனது நம்பிக்கையை, சித்தாந்தத்தை சமுகத்தில் பரிசோதனை செய்து பார்க்கவும், தனது சித்தாந்தத்தை தன் வாழ்க்கை முறையாகவும் மாற்றிக் கொள்வதற்கு அசாத்தியமான தன்னம்பிக்கையும், துணிச்சலும் தேவைப்படுகிறது. அத்தன்மையிலான மனிதனை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்ள நேரிடுகிறது ? எப்போதாவது தனது திறமைகள் குறித்தோ, தன் எண்ணங்கள் குறித்தோ சிறிதும் சந்தேகமற்ற ஒரு மனிதனை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா ? அவ்வகையிலான மனிதனை சமுகத்தில் எந்த தயக்கமோ அச்சமோமின்றி நம்மால் ஏற்க முடிகிறதா ? அத்தன்மையை எப்போதாவது நமது ஆளுமையின் ஒரு பகுதியாகவாவது நாம் உணர்ந்திருக்கிறோமா ?

அந்த அளவிற்கு இல்லாவிடினும், இந்த நிமிடத்தை நான் நினைத்தபடிதான் வாழ்கிறேன்; என்னுடைய இந்த நிமிடம் என்னுடைய கையில் பத்திரமாக இருக்கிறது என்று எவ்வளவு முறை நாம் உணர்ந்திருக்கிறோம். நம்முடைய செயலினால் விளையும் ஆத்ம திருப்தியே வாழ்வின் நோக்கமாக கொண்டு நம்மால் எத்தனை முறை வாழ முடிந்திருக்கிறது ? அவ்வாறு வாழ நேர்ந்த தருணங்களில், நீங்கள் செய்யும் செயல்களில் மிளிரும் உன்னதத்தை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? அச்செயல்களால் உங்கள் ஆளுமையில் கூடும் கம்பீரத்தில்
நீங்கள் கர்விகளாகியிருக்கிறீர்களா ?

ஒரு திரைப்படம் இந்த சிந்தனையையே தருகிறது. அகிரா குரோசாவின் இகுருவைப் பற்றித் தான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஒரு நாவலைப்போல நகர்கிறது இந்தப் படம். தகோஷி ஷிமோரா ஏற்றிருக்கும் வாட்டன்பே கதாபாத்திரத்தைச் சுற்றியே நகர்கிறது கதை. வயிற்றுபுற்று நோயால் சாகும் தருவாயில் இருக்கும் ஒரு மனிதன் தன் இறுதி நாட்களை எப்படி கழிக்கிறான் என்பதே கதை. பல ஆண்டுகளாக இலக்கின்றி தான் பிணைக்கப்பட்ட சங்கிலியுடன் வாழும் ஒரு மனிதனுக்கு தன் கடைசி நாட்கள் தீர்மாணிக்கப்பட்ட சமயத்தில் கட்டுகளைத் தாண்டி வாழ வேட்கை தோன்றுகிறது. வாழ்க்கையின் தினசரி போராட்டங்கள் ஒரு திமிங்கிலத்தைப் போல ஒரு மனிதனை முழுமையாக விழுங்கி விடுகிறது. தன்னை மீட்டெடுக்கும் போராட்டத்தை மேற்கொள்ள எவ்வளவு தூரம் துணிகிறான் என்பது ஒரு நடைமுறை பிரச்சனை. அப்போராட்டங்களைத் தாண்டிய சுயவாழ்வு எவ்வளவு பேருக்கு வாய்த்து விடுகிறது ? அதைப் போலவே இந்த கதையின் நாயகனுக்கும் வாழ்க்கைக்கு தன்னை இழந்து விட்ட சோகம் நேர்கிறது. தான் இறக்கும் தருவாயில் தன்னை மீட்டெடுக்கும் துணிச்சல் கொண்டவனாய் வாழ்க்கையை அணுகுகிறான். தன்னால் சாதிக்கக் கூடிய ஒரு விஷயத்தை தான் இறக்கும் முன் சாதித்து விடத் துடிக்கும் அவன், அதற்காக அவனது ஆற்றலின், சிந்தனையின் உச்சத்தை அடைகிறான். அவனது செயலின் பலனை அடையும் ஒரு சமுகம் அவனது மரணத்திற்கு உண்மையாக அழுகிறது.

மிகவும் எளிமையான திரைப்படம். அகிரா தான் சொல்ல வந்த விஷயத்தை மிகவும் நேரிடையாக தனது கதாபாத்திரங்கள் வாயிலாக சொல்கிறார். திரைப்படத்தின் ஆதாரமாக தகோஷி ஷிமொராவின் நடிப்பு இருக்கிறது. உடல் மொழியின் மூலம் கதாபாத்திரத்தின் மன நிலையை பிரதிபலிக்கிறார். இவரை பார்க்க பார்க்க எனக்கு பிரமிப்பே மேலிடிகிறது. இவரது கண்கள் மிகவும் வலிமையானவை. காட்சியை பார்வையால் மட்டுமே நகர்த்தும் சக்தி வாய்ந்தவை அவை. தனது வாழ்வில் எப்படி மகிழ்ச்சியை மீட்டெடுப்பதென்றறியாத நாயகன் அதற்கான யோசனையை ஒரு உணவகத்தில் தன்னுடன் பணியாற்றும் ஒரு பெண்ணிடம் கேட்கிறான். அந்த கேள்வியை, நாயகன் பற்றிய ஒரு புரிதலும் இல்லாத அந்த பெண்ணிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காத நிலையில் திடிரென யோசனை தோன்றியவனாய், அதற்கான வழியை நான் கண்டுபிடித்து விட்டேன் என பிரகாசமாகிறான். தூரத்தில் ஒரு குழு அவர்களின் நன்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்து பாடி பிறந்த நாள் கொண்டாடுகின்றனர். இது போன்ற சின்ன சின்ன கவிதைகளை எழுதி இருக்கிறார் அகிரா என்ற செல்லுலாய்ட் கவிஞன். வாட்டன்பேயின் சாதனையை அவனது மரணத்திற்கு பின்னர் அவன் இரங்கல் கூட்டத்தில் கூடும் நன்பர்களின் உரையாடல் வழியாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார் அகிரா. ஒவ்வொரு மனிதனும் வாட்டன்பே பற்றி கொண்ட எண்ணமும் அது மெல்லமாக மரியாதையாக மாறும் மாற்றத்தையும் கதாபாத்திரங்களோடு சேர்ந்து நம்மாலும் உணர முடிகிறது. ஒரு ஊஞ்சலில் ஒரு விதமான சாதித்த மகிழ்ச்சியுடன் நாயகன் ஆடும் காட்சி சினிமாவின் "most emphatic moment" என்று தோன்றுகிறது.

தன் இருப்பை தனக்கே நிருபித்துக் கொள்ள வேண்டிய தேவை ஒரு மனிதனின் வாழ்வில் மிகவும் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது. இந்தத் தேவையைத் தான் அகிரா தன் படைப்பில் பிரதிபலிக்கிறார். இவரது படைப்பில் மனிதன் மீது மனிதம் மீதும் கொண்ட ஆழ்ந்த அன்பு தெளிவாவதைப் போல, இந்திய இயக்குனர்களில் சத்தியஜித் ரேயின் படைப்புகளைச் சொல்லலாம். குறிப்பாக "Apu trilogy". அகிராவின் வார்த்தைகளில் சத்தியஜித் ரே பற்றிய ஒற்றை வரி அறிமுகம்.
" Not to have seen the cinema of Ray means existing in the world without seeing the sun or the moon."

என்னால் இந்த அளவிற்கு ஆழ்ந்து சொல்ல முடியாவிடினும், நான்கு தமிழ் சினிமா பார்க்க நீங்கள் செலவழிக்கும் காசை சேர்த்து வைத்து ரேயின் ஒரு படத்தைப் பார்க்கலாம். தற்காலிக தமிழ் சினிமா மீது குற்றம் கூறும் எண்ணமில்லை. உண்மையான சினிமா தமிழில் எடுக்கப்பட இன்னும் சிறிது கால தாமதம் ஏற்படும். தமிழ் சினிமா இயக்கம் வாழ்வோடும், மனிதத்தோடும் நெருங்க, காலத்தில் இன்னும் கொஞ்சம் பயணிக்க வேண்டும்.

"Apu trilogy"-இல் முதன்மையானது பதேர் பஞ்சலி (பஞ்சலியா பாஞ்சலியா என்பதை பெங்காலி அறிந்த நன்பர்களின் திருத்தத்திற்கு விட்டு விடுகிறேன்). இகுரு ஒரு நாவல் என்றால், இப்படம் ஒரு கவிதை. மிகவும் அழகியல் கொண்ட கவிதை. வாழ்க்கையை அதன் சுமைகளுடனும் சோகத்தோடும் நேசிக்கும் ஒரு கவிஞன் எழுதியது. மிகவும் அதிகம் பேரால் ஏற்கனவே அதிகம் முறை பேசப்பட்டதால், கதையோ, இதன் கருவோ தீவிர சினிமா ரசிகர்களுக்குப் பரிச்சியம் ஆகியிருக்கக்கூடும்.

மிகவும் நேரிடையான கரு. எந்த விதமான பிரச்சனையையோ அதற்கான தீர்வையோ, சமுகத்தின் சீர்கேடுகள் பற்றிய விழிப்புணர்வையோ, தனிமனித மனக்குழப்பங்களையோ கையாளவில்லை இந்தப் படம். ஏழ்மையில் வாழும் ஒரு பெங்காலி புரோகிதர் குடும்பம். மகனும், மகளும் கொண்ட அக்குடும்பத்தின் ஏழைத் தலைவன் பொருள் தேடும் போராட்டத்தில் குடும்பத்தைப் பிரிந்து செல்ல நேர்ந்த சமயத்தில், மழையில் நனைந்ததால் ஏற்பட்ட ஜுரத்தில் மகள் இறக்கிறாள். திரும்பி வரும் குடும்பத்தலைவன், கிராமத்தை விட்டே வாரணாசி நோக்கி குடும்பத்துடன் செல்கிறான்.

இதில் மிகவும் அழகாக அக்கா தம்பி பந்தத்தையும், சிறுவர்களின் உலகத்தையும், அக்காலத்து கலாசாரத்தையும் ரே படம் பிடித்துக் காட்டுகிறார். துர்காவும், அப்புவும் ரயில் பார்க்க செல்லும் காட்சி வரை ஒரு தெளிந்த நதி போல செல்லும் படம், துர்காவின் மரண காட்சியில் ஒரு சுழலில் சிக்கிய படகைப்போல மனதை தத்தளிக்க விடுகிறது. குழந்தைகள் அவர்கள் போக்கில் நகர்கிறார்கள், ஏழைத் தாயின் அன்றாட போராட்டங்களையும் பணக்கஷ்டத்தையும் அறியாதவர்களாய். அட்டையில் கிரீடம் செய்து அணிந்து கொள்கிறார்கள், இனிப்பு விற்பனை பின் தொடர்கிறார்கள், ரயில் பார்க்க பல தூரங்களைக் கடந்து செல்கின்றனர், மழையில் ஆடுகின்றனர்.

ரே எதையும் உரத்துச் சொல்வதில்லை. இது அவரது பாணியாகக் கூட இருக்கலாம். (ரே ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தினால் நன்று). இந்தத் திரைப்படத்தில் கூட துர்காவின் மரணம், இந்தர் டாகுரனின் அத்வான மரணம், ஹரிஹரன் மற்றும் சர்பஜெயாவின் புத்திரி சோகம், ஏழ்மை, சிறுவர்களின் உலகம் என எதையும் உரத்துச் சொல்லவேயில்லை. அவர்கள் கூடவே அவர்கள் வாழ்க்கையோடு பயணம் செய்ய செய்கிறார், அவ்வளவே.

மிகச்சிலப் படங்களே ஒரு ரசிகனை திரைப்படத்திற்குள் நிற்க வைத்து பின் வெளியே தள்ளும் சக்தி வாய்ந்தவை. பதேர் பஞ்சலி அந்த வகை. என்னால் நியோ ரியலிச திரைபடங்களுக்கும், ரேயின் திரைப்படத்திற்கும் ஊடே ஒரு மெல்லிய இழை ஒன்று ஊடுருவதைப் பார்க்க முடிகிறது. நேரிடையாக சாமானிய வாழ்வைப் பற்றி பேசுகின்றன இவையிரண்டும். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சிதார் இசைமேதை பண்டிட் ரவிஷங்கர். முற்றிலும் இந்திய இசை வாத்தியங்களே பயன்படுத்தப்பட்டிருக்கிறன.

ரேயின் திரைப்படங்கள் இந்தியாவின் திரைப்படங்களுக்கு ஒரு அடையாளம். ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நல்ல திரைப்படங்கள் தோன்றினாலும், ரே-விற்கு பின் இவ்வளவு அழுத்தமாக பதிவை விட்டுச் செல்லும் படைப்பாளிகள் இல்லையோ என தோன்றுகிறது.


பிகு:
"Apu trilogy"-இல் முன்றாவதாக எடுக்கப் பட்ட அபுர் சன்சார் தான் ஷர்மிளா தாகுரின் முதல் படம்
இகுரு-வை ஹாலிவுட்டில் மீண்டும் எடுக்கப் போவதாக சில காலம் முன்பு ஒரு பேச்சு இருந்தது. டாம் ஹேங்க்ஸ் தான் ஹீரோ என்று கூட கேள்வி. என்ன ஆயிற்று அது ?

No response to “இரு திரைப்படங்கள்”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman