Adsense

டிசச்கியாமிசே


விஷியின் வலது மணிக்கட்டில் கட்டியிருந்த மிக மெல்லிய பாலித்தின் போன்ற அந்த ஸ்டிக்கர் அவனது மூளைக்கு சிக்னல்கள் அனுப்பிக் கொண்டிருந்தது. உடலின் உஷ்ணத்தையும் மெல்ல உயர்த்தியது. விஷி தூக்கம் கலையலானான். கண் விழித்தபோது மிக மிக மங்கலான வெளிச்சம் அறையிலிருப்பதை உணர்ந்த அவன் ஒரே அலைவரிசையில் மூன்று முறை விரல் சொடுக்கினான். அவனது அறையிலிருந்த ஒலி சென்சார்கள் அனுப்பிய சிக்னலின் படி வீட்டின் தலைமை கம்ப்யூட்டர் அவனது படுக்கையின் மேலிருந்த சீலிங்கில் கடிகாரத்திலிருந்த நேரத்தை 4.20 என்று ப்ரொஜெகட் செய்தது. எழுந்திருப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் சோம்பேறித்தனமாக படுக்கையில் புரண்டான். இப்போது அவனது மூளை சுறுசுறுப்படையத் துவங்கி விட்டது. இனியும் படுக்கையில் இருப்பது வீண் எனக் கருதி எழுந்தான். உடலின் தசைகளை இருக்கும் கையடக்க மோட்டார் பொருத்திய பெல்டை கைகளிளும் தொடைகளிளும் அணிந்தவாறே பல் விலக்கும் சுயிங்கம்மை மெல்லத்துவங்கினான்.
இன்றோடு எல்லாம் முடிந்து விடும்.
மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலான போராட்டத்தைத் தான் முடித்து வைக்கப் போவது குறித்து ஒரு பக்கம் கர்வமிருந்தாலும், தோற்றால் ஏற்படப்போகும் அவமானத்தைப் பற்றிய பயம் அவனை அதிகமாக மிரட்டியது.
சுயிங்கம்மைத் துப்பியவாறே கையிலிருந்த அந்த ஸ்டிக்கரைப் பிய்த்து எறிந்தான். இன்று காலை 1.30க்கு உறங்குவதற்கு முன் அவனது திட்டத்தை திரும்ப ஒரு முறை சரி பார்த்து குளருபடி ஏதுமில்லாததை ஊர்ஜிதப்படுக்கொண்டது நினைவுக்கு வந்தது. அவனது வலது கை முட்டிக்கு கீழே இருந்த அந்த ஒற்றைப் பொத்தானை அழுத்தினான். அவன் கண் முன் விரிந்த அந்த ஹோலொகிராம் திரையில் அவனது அறையிலிருந்த மின்னணு சாதனங்களின் பட்டியில் இருந்தது. தனது எண்ண அலைகளால் வாட்டர் ஹீட்டரைத் தேர்ந்தெடுத்து குளிக்கும் நீரின் வெப்ப நிலையை ஒரு டிகிரி கூட்டினான்.
கிளம்பும் முன் ஒருமுறை சிட்னியிலிருக்கும் தலைமை ஸ்டிராடஜிஸ்ட் லீகோவை தொடர்பு கொண்டு பேசவேண்டும் என நினைவுப் படுத்திக் கொண்டான். கடைசி நிமிட ஆலோசனை ஏதும் கிடைக்கக் கூடும். தசைகளை இருக்கும் பெல்டைக் கழற்றி விட்டு உடலில் வழிந்த வியர்வையைத் துடைத்தவாறே குளிக்க எத்தனித்தான்.
உடலின் ஏற்பட்ட லேசான அதிர்வைக் கொண்டு லீகோ தன்னை அழைப்பதை உணர்ந்தான். இன்று காலை உறங்கச் செல்வதற்கு முன் தன்னை நெட்வொர்க்கிலிருந்து விடுவித்துக் கொள்ளாதது நினைவுக்கு வந்தது. அதனால் அவனது ட்ராண்ஸ்மீட்டர் அவனையும் அறியாமல் அவனது எண்ண அலைகளை லீகோவிற்கு அனுப்பிவிட்டது. தனது மகனுடன் நேரத்தை செலவிடப்போவதாகச் சொன்ன லீகோவை தொந்தரவு செய்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வுடன் எண்ண அலைகள் மோடிலிருந்த தன் நெட்வொர்க் தொடர்பை வாய்ஸ் மோடிற்கு மாற்றிக் கொண்டு வீட்டிலிருந்த தகவல் தொடர்பு அறைக்குச் சென்றான். தொடர்பு அறையில் ஆறடி மூன்று அங்குலத்தில் செக்கச்செவேலென நின்றிருந்தது லீகோவின் ஹோலொகிராம் பிம்பம்.
"என்ன விஷயம் விஷி. எதுக்கு என்னைப் பற்றி எதற்காக நினைத்தாய் ?"
"லீகோ...அது...ஒன்றுமில்லை. கடைசி நிமிட ஆலோசனை வேண்டும்." வழக்கத்திற்கு மாறாக தடுமாறினான்.
"கட்டாயம் செய்வோம். நீ முடிவு செய்து விட்டாயா ?" கரகரத்த குரலில் உணர்ச்சி ஏதுமில்லை.
"இனி மாற்றம் ஏதுமில்லை. லார்ட்ஸ் செல்லுகிறேன்."
"அலிம் என்ன செய்யப் போகிறான்"
"அவன் இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. அனேகமாய் கராச்சியிலிருந்து தான் விளையாடுவான். செயற்கைக் கோள் வழியாக அவனது வீரர்களின் உருவங்களை மைதானத்தில் ப்ரொஜெக்ட் செய்து விடுவான். நான் லார்ட்ஸிலிருக்கும் தொலை தொடர்பு அறையிலிருந்து எனது வீரர்களின் பிம்பங்களை ப்ரொஜெக்ட் செய்வேன்."
"சரி. அவன் எங்கிருந்து விளையாடுகிறான் என்பது பெரிய மாற்றத்தை எதுவும் ஆட்டத்தில் ஏற்படுத்தாது. அவனது பதினோரு மூளையையும் அவன் அறிவித்து விட்டானே. கவனித்தாயா ?"
"ஆமாம். ஆறு பேட்ஸ்மேன் ஐந்து பெளலர்கள். இதில் அவனது ஜாவேத் என்னும் பெளலரின் ப்ராஸசரோடு புதிய தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஸ்விங்கிங் கோப்ராஸசர் இணைக்கப்பட்டுள்ளது. அந்த பொளலரைப் பற்றிய தகவல் கோப்புகள் மட்டும் இதுவரை என்னிடமில்லை. புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஸ்விங்கிங் கோப்ராஸசர் எவ்வளவு ஆபத்தை விளைவிக்கும் என்பது குறித்து உங்களிடம் ஆலோசனைக் கேட்கவே நினைத்தேன்."
"இது போன்று நிகழ்வது சகஜம் தான். சென்ற உலக கோப்பையின் போது உனது துவக்க ஆட்டக்காரனின் லேட் கட்டிற்கு புதிய அல்காரிததைப் நீயும் கூட பயன்படுத்தினாய். நினைவிருக்கிறதா ? இது குறித்து பயப்படத் தேவையில்லை. ஆயினும் இன்று அந்த பெளலர் துருப்புச் சீட்டாக மாறக்கூடும். நீ உனது பாட்ஸ்மேனை தேர்வு செய்து பட்டியலிடும் முன் என்னை ஒருமுறை கலந்தாலோசனை செய்."
"நான் முடிவு செய்து விட்டேன். ஏழு பேட்ஸ்மேன் நான்கு பெளலர்களுடன் களமிறங்கப் போகிறேன். எனது பேட்ஸ்மேன்களில் மூவர் பந்து வீச வல்லவர்கள்."
"இது எனக்குச் சரியாக தோன்றவில்லை. ஐந்து ஓவர் கொண்ட மேட்ச்சில் உனது நான்கு பெளலர்கள் நான்கு நல்ல ஓவர்கள் வீசிவிடுவார்கள். மீதமிருக்கும் அந்த ஒரு ஓவர் தான் உன் நாட்டின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் என்பதை நினைவில் கொள். அதாவது 80 % வெற்றி வாய்ப்போடு தான் நீ களமிறங்குகிறாய். இன்றைக்கு நீ ஆடவேண்டிய ஆட்டத்தில் இத்தனைப் பெரிய ரிஸ்க் சரியில்லை. உன் முடிவில் மாற்றாமேதுமில்லையென்றால், நீ சுழல்பந்து வீசும் பேட்ஸ்மேனை தேர்வு செய். இன்றைய தட்பவெட்பம், காற்று வீசும் முறை, காற்றிலிலுள்ள ஈரப்பதம், விக்கெட் நிலை, ஜனங்களின் கூட்டம் போன்ற எல்லா காரணிகளும் ஏற்கனவே அறிவிக்கப் பட்டதால், இடது கை பந்து வீச்சாளர் தேவை, மணிக்கு 87 கி மி வேகத்தில் வீச வேண்டும். உன் அணியில் இவ்வகை பௌளிங் இஞ்சின்கள் இரண்டு உள்ளன."
"சரி அப்படியே செய்கிறேன்."
"வேறு எதாவது ?"
"இப்போது எதுமில்லை. தேவைப்பட்டால் ஜெட்டிலிருந்து அழைக்கிறேன்"
"சரி. சந்திப்போம்."
ப்ளிங்...மறைந்தது லீகோவின் பிம்பம்.
முதல் வேலையாகத் தன்னை நெட்வொர்க்கிலிருந்து விடுவித்துக் கொண்டான்.
ஜெட்டிலேறி சென்னையிலிருந்து லண்டனுக்கு 15 நிமிட பயணத்தில் போய் சேர்ந்தபோது காற்றில் அதிகமாக உஷ்ணமிருப்பதை உணர்ந்தான். லார்ட்ஸில் இருக்கும் தனது அறைக்குச் சென்று தான் நெட்வொர்க்கிலில்லை என்பதை உறுதி செய்து கொண்டான். அண்டத்தில் தணிமையை உணர்ந்தான்.
இந்தியாவின் மிகமுக்கிய குடிமகன்கள் ஒன்று கூடியிருக்கும் அறையில் தலைமை பயிற்சியாளர் ஆவேசமானார்.
"என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான். எதற்காக தொடர்பைத் துண்டித்தான். அவன் நம்முடன் பேசவேண்டிய அவசியமில்லையா ?"
"என்ன ஒரு முட்டாள்தனம் ? இதைப் பொருத்துக் கொள்ளமுடியாது." கிரிக்கெட் போர்டின் தலைவர் தனது வழக்கமான டெசிபெல் அளவை உயர்த்திக் கத்தினார்.
"வேறு வழியில்லை. டாஸ் ஜெயித்து விட்டான் பாருங்கள். பேட்டிங் செய்வதாய் அறிவிக்கிறான். ஐந்தாவது பெளலர் இல்லாத அணியில் டாஸ் ஜெய்த்து பேட்டிங் செய்வது அதி முட்டாள்தனம். நாம் கேஷ்மீரை இழந்து விட்டோம்." அழாத குறையாக கத்தினார் ஜனாதிபதி, சிமுலேட் செய்யப்பட்ட தொழில்நுட்ப விளையாட்டு அரங்கில் தெரியும் அவன் பிம்பத்தைப் பார்த்தபடி.
"நாட்டின் நன்மைக்கு எதிராக முடிவு எடுத்ததற்காக இந்தப் போட்டியின் முடிவில், இவனை தலைமை நீதி மன்றம் தண்டிக்கும்", ஆக்ரோஷமாக கத்தினார் பிரதமர்.
"இவனை நம்பி கேஷ்மீரை ஒப்படைத்தது முட்டாள்தனம். ராணுவம் நொடியில் மீட்டிருக்கும் கேஷ்மீரை. அதற்கான திட்டம் உங்களிடம் எப்போதோ சமர்பித்தேன்." என்றார் ராணுவ ஜெனரல்.
வெறுமை நிரம்பியக் கண்களேடு அவரைத் திரும்பிப் பார்த்த ஜனாதிபதி தலையில் கைவைத்தபடி அமர்ந்தார்.
ஆட்டம் துவங்கியது.
அணிக்கு ஐந்து ஓவர்கள் மட்டுமே கொண்ட அந்த ஆட்டத்தை மிகவும் ஆவேசமாக ஆடத்துவங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் வேகமாக ஓட்டத்தைக் குவித்தனர். அலிம் எதிர்பார்க்காதபடி பெளலர் ஜாவேதை இந்திய பேட்ஸ்மேன்கள் அதிக சிரமமின்றி எதிர்கொண்டனர். விஷி தனது ஓவ்வொரு ஆட்டக்காரனின் மூளையயும் சரியாக பயன்படுத்தினான். ஒவ்வொரு பேட்ஸ்மேனும் ஆட வேண்டிய ஷாட்களை கவனமாகத் தேர்ந்தெடுத்தான். வெற்றி பெற கணிசமான அளவு ஓட்டத்தைக் குவித்திருந்த போதிலும் அது கட்டாயம் வெற்றியைத் தரும் என்று சொல்வதிற்கில்லை.
சளைக்காமல் பேட்டிங் செய்த அலீம் விரைவாக ஓட்டங்களைக் குவித்தான். ஆட்டத்தில் எப்போதுமே சமநிலை இருந்தது. இறுதியான கட்டத்தை அடைந்தது ஆட்டம். கடைசி ஒரு ஓவர் மட்டுமே மிஞ்சி இருந்தது. வெற்றியின் பாதையை ஆறு ஓட்டங்களும் ஒரு விக்கெட்டும் மறித்தன. விஷி இதுவரை அதிகமாக பந்து வீசியிராத தனது வலது கை வேகப்பந்து வீச்சாளரை உபயோகித்தான்.
"இனி கடவுளே நினைத்தாலும், கேஷ்மீரை நமதாக்க முடியாது. சுழல்பந்துக்கு சாதகமான ஒரு விக்கெட்டில் முக்கியமான ஓவரை வீச அதிகம் சோதனை செய்யப்படாத பெளலிங் இஞ்சினை உபயோகிக்கிறானே. என்னால் இனி இந்த மேட்சைப் பார்க்க முடியாது." ஜனாதிபதி அறையை விட்டு எழுந்துச் சென்றார்.
96 வினாடிகளில் ராணுவ ஜெனரல் ஜனாதிபதியைப் பார்க்க சென்றார்.
"வாழ்த்துகள் ஜனாதிபதி. கேஷ்மீரை இந்தியா வென்று விட்டது. !"

விஷி தன்னை வாய்ஸ் மோடில் நெட்வொர்கில் இணைத்துக் கொண்டான். லீகோவை அழைத்தான்.
"டிசச்கியாமிசே", என்றது ப்ளிங் என்ற ஓசையுடன் தோன்றிய லீகோவின் உருவம்
"வால்அம்தாபா", சிரித்தான் விஷி
"வாழ்த்துகள். சாதித்து விட்டாய் நண்பா. உனக்கு உன் நாடு கடன் பட்டிருக்கிறது"
"நன்றி. எல்லாம் உன்னால் தான்"
"நான் என்ன செய்துவிட்டேன்"
"நீ எதுவும் செய்யவில்லை. ஆனால் உன் உருவம் செய்தது. இன்று காலை ஏற்பட்ட ஆக்ஸிடெண்டல் கனெக்ஷனில் நீ என்னுடன் பேசினாய். அது உனக்கே தெரியாது என்பது எனக்குத் தெரியும்"
"..."
"நெட்வொர்க்கை ஈவ்ஸ்டிராப் செய்து உன்னை இம்பர்சனேட் செய்தது யார் என்று அறியேன். ஆனால் நான் விவரித்த திட்டத்தை ஆர்வத்துடன் கேட்ட அந்த உருவம் நம் கை குலுக்கல் வார்த்தையை மறந்து விட்டது".
"டிசச்கியாமிசே ??"
"ஆமாம்"
சத்தமாக சிரித்தனர். அவர்கள் சிரிப்பில் அதிர்ந்தது இந்தியா.

No response to “டிசச்கியாமிசே”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman