Adsense

சல்மாவின் கவிதைகள்


பல நாட்களுக்கு முன் எழுதிய பதிவு இது. இதை இன்று மீண்டும் படித்தபோது இதை வலைப்பதிவில் ஏற்றலாம் என்று தோன்றியது !

-------------------------

ஒரு கவிஞரின் கவிதைகள் குறித்து எழுத என்ன தேவை ? அவரின் கவிதைகள் குறித்த குற்றசாட்டுகளோ, பாராட்டுக்களோ என்றால் இந்த மடலை நீங்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். இம்மடல் இது போன்ற எந்த ஒரு தீர்மாணத்தையும் முன் வைக்கப்போவதில்லை.
பெண் கவிதாயினிகளின் படைப்புலகத்தை அறியும் ஆவல் மேலெழுந்தவுடன் அதற்கான முயற்சியை சல்மாவிடமிருந்து அதுவும் அவரின் முதல் கவிதைத் தொகுதி "ஒரு மாலையும் இன்னொரு மாலையும்"-இல் இருந்து தொடங்க விழைந்தேன்.
நூலும் நேரமும், கிடைத்த இந்த வார இறுதி எனக்கு ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தைத் தந்தது.

எழுத்தாளனுக்கும், வாசகனுக்குமிடையிலான பந்தம் மிகவும் வித்தியாசமானது. வார்த்தைகள், வரிகளாலான அருபமான கயிற்றால் பிண்ணப்பட்டிருக்கிறது அது. எழுத்தாளனின் இடையைச் சுற்றி கட்டப்பட்ட இக்கயிற்றின் நுணி எப்போதும் வாசகனிடமே இருக்கிறது. அதை அவன் பற்றுதலும் விடுதலுமாக மாறி மாறி கொள்ளும் வினையினால் இப்பந்தம் நிலையின்மைத் தன்மையைக் கொள்கிறது. வாசகனின் வெளியை விரிவுபடுத்தும் பணியை எழுத்தாளனின் வார்த்தைகள் தொடர்ந்து செய்யும் போது வாசகன் இந்த கயிற்றை அதிக இறுக்கத்தோடு பற்றுகிறான். அக்கயிறு அவனை இட்டுச்செல்லும் திசையெங்கும் அவன் நகர்கிறான். தன்னம்பிக்கை, ஆத்மவிசாரம், எழுச்சி கொள்ளச்செய்யும் எழுத்தாளனை வாசகன் ஒரு படி உயர்த்தி குருவெனக் கொள்கிறான். எழுச்சி என்று நான் குறிப்பிட்டது மிகவும் பொதுவான சொல் பிரயோகம். உள்ளத்து உத்வேகம், இலக்கிய எழுச்சி என எப்படி வேண்டுமானாலும் நீங்கள் பொருள் கொள்ளலாம். நிலை உயர்வைக் குறிக்க நான் கையாண்ட சொல்லது. இவ்வகையிலல்லாது சாமானியனின் வாழ்க்கையை அதற்கான ரசாபாசங்களுடன் பதிவு செய்யும் எழுத்தாளனுடன் வாசகன் சினேக பாவம் கொள்கிறான். அட, நம்மைப்போலவே சுக துக்கங்களை கொண்ட சாமானியன் இருக்கிறானே என்பது போன்ற ஒரு நட்புணர்வு அது. Its kind of identifying self outside one self. இவ்வகையிலான எழுத்துக்கள் சிறிய சமாதானத்தையோ, சிறிய மனமகிழ்ச்சியையோ, உண்மையின் தரிசனத்தையோ, தற்காலிகமான குற்ற உணர்வையோ, மதுரமான நினைவுகளையோ வாசகனுக்கு அளிப்பதால் பெரும்பாலும் வாஞ்சையுடன் நினைவில் கொள்ளப்படுகின்றன. இவ்வகை எழுத்தாளனுடன் வாசகன் கொள்ளும் பந்தம் நான் மேற்சொன்ன நிலையின்மைத் தன்மையைக் கொண்டது. அவ்வகையில், எந்த ஒரு நல்ல எழுத்தும் ஏதேனும் ஒரு விதத்தில் புதிய அனுபவத்தையே வாய்க்க வேண்டும் என்ற என் நம்பிக்கை இத்தொகுதி படித்து முடிக்கும் போது மீண்டும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சிறிய வித்தியாசம், அனுபவங்களில் பட்டியலில் சல்மா வகையான எழுத்துக்கள் என்ற புதிய அனுபவம் சேர்ந்துள்ளது.

சல்மா தனது வாசகனை ஒரு எச்சரிக்கையோடு தான் தொகுதியில் நுழைய விடுகிறார். அவர் வார்த்தைகளிலேயே பார்ப்போம்.
"தனக்குள்ளே வசிக்க நேர்ந்து விட்ட நீண்ட தனிமையும், எனது மொழியும் கூடி இங்கே கவிதைகளாக உருவாகியிருக்கின்றன. நவீன கவிதை, சொற்களின் வழியே எழுந்து சொல்லுக்கு எதிராகவே போராடி மெளனத்தை அடைவதாக இருக்கிறது. வாசகன் கவிதையின் இடைவெளியில் அந்த மௌனத்தைப் பூர்த்திசெய்து அனுபவம் கொள்ளும் போது கவிதை வெற்றி பெறுகிறது. என்னில் உறைந்திருக்கும் சில உணர்வுகளை இந்த வரிகளின் வழியே உங்களுக்குள் நகர்த்த முயன்றிருக்கிறேன். இக்கவிதைகளை மொத்தமாக வாசிக்கும் போது இவை எழுதப்பட்ட ஒவ்வொரு தருணமும் அதன் சாயலோடு என்னை இன்னொரு முறை கடக்கிறது. அது சஞ்சலமூட்டுவதாக இருப்பினும் இவற்றாஇ என் தனிமைக்கெதிரான எதிர்வினைககளாகவே கருதி ஆசுவாசம் கொள்கிறேன். எனது பெரும்பாலான கவிதைகளின் பாடுபொருளாகத் தனிமை மட்டுமே இருப்பதும், குறிப்பிட்ட சில புள்ளிகளைச் சுற்றியே கவிதைகள் உருவாகியிருப்பதும் அலுப்பூட்டுவதாக இருக்கலாம். அதைப் பற்றி எனக்கு வருத்தமில்லை. திரும்ப திரும்ப சொல்வதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் சங்கடத்திலிருந்தே இக்கவிதைகளை நீங்கள் அடையக் கூடும். ஒரு வேளை இவை தனிப்பட்ட ஒருவரின் தன்னுணர்வாக மட்டுமே அர்த்தம் பெறுமெனில் அதை எனது மொழியின் போதாமையாகவே புரிந்து கொள்வேன்."

இந்த வார்த்தைகளில் பொய்யெதுமில்லை. புறக்கணிப்பு, தனிமை, துன்பம், பற்றில்லாத வாழ்க்கை-தாம்பத்தியம், இயலாமை, ஏமாற்றம் போன்று தலையணையில் முகம் பதித்து நாம் அழும் எல்லா உணர்விற்கும் சல்மா கவிதை வடிவம் தந்திருக்கிறார். பெரும்பாலும் நெருக்கமாணவர்களிடம் மட்டுமே அல்லது யாவரிடத்திலுமே பகிர்ந்து கொள்ளப்படாமலே போய்விடும் தனிமனித உணர்வுகளைப் பாசாங்கின்றி எழுத்து வடிவமாக்கி தொகுதியெங்கும் திரிய விட்டிருக்கிறார். உணர்வு வயப்பட்டவர்களால் மட்டுமே சாத்தியப்படும் விஷயம்.

சல்மாவின் கவிதைகள் தீவிரமானவை. சஞ்சலம் தரும் விஷயங்களை மட்டுமே பெரும்பாலும் கருவாகக் கொண்ட இவரின் கவிதை வரிகள் அதிக வீரியத்துடன் அதன் பணியைச் செய்வதாகக் கருதுகிறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்றைக்கில்லையெனில்
நாளை
நாளையில்லையெனில்
இன்னுமொரு நாள்
இப்படித்தான் தெரியும்
வாழ்வை
நினைவு தெரிந்த நாளிலிருந்து
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஏமாற்றத்தின் வலியை முகத்திலடித்து விட்டுச் செல்கின்றன இவ்வரிகள். இவரின் புறக்கணிப்பு என்ற கவிதையும் இவ்வகையிலே இருக்கிறது. ஆனால் பொத்தாம் பொதுவாக சொல்வதென்றால் அக்கவிதை ஒரு "exaggerated reality" என்றே கருதுகிறேன்.
___________________________
புறக்கணிப்பு
=========
கூடு தேடிச் செல்லும்
பறவைக்கூட்டம்
பொருட்படுத்துவதேயில்லை
எனது வீட்டுத் தோட்டத்தின்
ஒற்றை மரத்தினை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழில் பல்வகைப்பட்ட பாடுபொருள்கள் கொண்ட கவிதை தொகுதிகளையே வாசித்துப் பழகிய எனக்கு இத்தொகுதி கொஞ்சம் "overdose" தான். பல்வேறு காரணங்களால் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட வலிகளையும் வேதனைகளையும் முன்னிருத்தி அமைந்த கவிதைகள் சில என்னை ஆழ்ந்த மௌனத்திலாட்படுத்தின ( விலகிப் போகும் வாழ்க்கை, தடயங்கள் அழிக்கப்பட்ட பிறகு, ஒப்பந்தம், இரண்டாம் ஜாமத்துக் கதை). கசந்துபோன வாழ்வின் ஒவ்வொரு கணமும், தீச்சுடராக மாறி அதன் ஜ்வாலைக்குள் மனிதனை இழுக்கும் முயற்சியில் விட்டுச்செல்கின்றன காலத்தால் ஆறாத வடுக்களை. சல்மாவின் கவிதை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடுவென்றே கருதுகிறேன்.
___________________________
தடயங்கள் அழிக்கப்பட்ட பிறகு
========================
...
...
...
எண்ணற்ற ஜடப்பொருட்களுடனும்
ஒரு மனிதனோடும்
தொடரவியலா வாழ்க்கை
தொடர்கிறது அதே அறையில்.
(நெடுங்கவிதையான இதில் தாக்கத்தை ஏற்படுத்திய கடைசி வரி)
___________________________
கழிவிரக்கத்தையும் சுய பச்சாதாபத்தையும் முன்னிருத்திய கவிதைகள் அடங்கிய இந்த சிறிய புத்தகத்தை என்னால் ஒரே மூச்சில் படிக்க முடியவில்லை, கசக்கும் மருந்தை ஒரே மடக்கில் குடிக்க முடியாததைப் பேலவே. வாழ்வின் மீது அவ நம்பிக்கையும், சர்வ நிச்சயமாக அழுத்தமான கரியை பூசவேண்டிய மனப்போக்குடனுமே எழுதப்பட்டிருப்பதாக எனக்குப்ப் படுகிறது.
___________________________
இராப்பகலாய்
சலசலக்கிறது அரச மரம்

அதன் மொழியில்
பாடிக்கொண்டிருக்கிறது
அதனுடைய பாடலை

மறந்த காதகளை
பிரிந்த நண்பர்களை
கழித்த இனிய நாட்களைத்
தூண்டும் பாடல்கள்

இப்பாடல்கள்
என்னையும் ஒரு பறவையாய்
தன்னிடம் ஓடிவர செய்யும்
ஒரு தந்திரமாக இருக்கலாம்

காற்றால்
பறவையால்
பாடல்களால் நிறைந்த
இம்மரம் அறியுமா
என் சிறகின்மையை
___________________________
எழுத்துக்கள் மூலமே அறிமுகமாகும் எழுத்தாளன் தன் குறித்த முதல் பிம்பத்தை வாசகனிடம் ஏற்படுத்துவது அவ்வெழுத்துக்களால் தான். அவ்வகையில், மிகவும் அனுதாபத்திற்குறிய ஒரு பிம்பமே சல்மா மேல் எழுகிறது. அனுதாபமே அவர் குறிக்கோள் என்றால் அதில் ஒரு வகையில் வெற்றி பெற்றிருக்கிறார். உச்சகட்ட உணர்வு நிலையில் எழுதப்பட்ட இவரின் எழுத்துகள் கூர்மையான இறுதிவரியைக் கொண்டிருக்கின்றன. இவ்வரிகள் கவிதையின் போக்கிற்கு அழுத்தத்தை சேர்க்கின்றன. பல நாள் பூட்டி வைத்த ஆற்றாமையின் வெளிப்பாடாகவே இருக்கின்றது இத்தொகுதி.
___________________________
நம் உறவைப் பற்றிச் சில குறிப்புகள்
============================
...
...
...
பெரும்பாலும்
தனக்குள்ளாவே வசிக்க
நேரும் நானும் என் மொழியும்
சற்று
கடுமையாகவே வெளிப்படக்கூடும்
என்றைக்கேனும்
___________________________
பெண்களின் கவிதையுலகின் முதல் தரிசனம் எனக்கு சற்றே மிரட்சியூட்டுவதாகவே கிடைத்துள்ளது. சல்மா தவிர மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, க்ருஷாங்கினி, சுகிர்தராணி என அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசித்திருக்கிறேன். இவர்களின் தொகுதி எதுவும் வாசித்ததில்லை. ஒன்றில்லாவிடில் அடுத்ததில் ஏக்கம், துக்கம் போன்ற உணர்வுகள் அடி நாதமாகயிருக்கக் காண்கிறேன். ஒரு வேளை அதிக கவிதைகள் அறிமுகமாகையில் இந்த எண்ணம் மாறக்கூடும்.

புத்தகத்தை மூடும்போது ஞாயிற்றுக் கிழமைக்கான சூரியன் அஸ்தமனமாகியிருந்தது. பெசண்ட் நகர் கடற்கரையில் தனிமையில் நடக்கும் போது இரவு படுக்கும்முன் RK Narayan-இன் "Swami and friends" மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டுமென சொல்லிக்கொண்டேன்.

No response to “சல்மாவின் கவிதைகள்”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman