Adsense

பை சைக்கிள் தீவ்ஸ் (அ) தி பைசைக்கிள் தீ·ப் - சில குறிப்புகள்


தீராமல் ஓடும் நதி ஒன்று தனது பயணத்தை நிற்காமல் தொடர்கிறது. அந்த நதியின் போக்கினால் பயன்படுகின்றது ஒரு சமுகமும் அதைச் சார்ந்த உயிரினங்களும். காலத்தினால் தூர்ந்து போகும் அந்த ஜீவ நதியின் வறட்சியினால் சிதையும் வாழ்க்கை முறையால் உருமாறுவது வாழ்வியல் மட்டுமல்ல ஒரு சமுகத்தின் அமைப்பும் கூட. அந்த நதி மீண்டும் தன் பெரும் போக்கிற்கு திரும்பினாலும் மாறிய வாழ்வியலை மனித சமுகத்தால் மீட்டுக் கொள்ள முடியாது. எண்ணிலடங்கா புற காரணிகளால் எப்போதும் மாற்றத்திற்கு உண்டாகி பின் மீண்டும் தன் இழந்த வளமையை எய்த இயலாமலும் இப்பூமியை ஆண்டுக் கொண்டிருக்கின்றது மனித சமுகம். அறிவியல், தொழில் நுட்பம் என எவ்வளவோ மேம்பட்டாலும் உணர்வு நிலையில் மனித சமுகம் நாளுக்கு நாள் சோரம் போய்க் கொண்டு தான் இருக்கின்றது. தன்னைக் குறித்த சிந்தனைகள் தாண்டி சமுகம் பற்றிய சிந்தனைகளை இலகுவாக புறக்கணிக்க முடிகிறது மனிதனால். இவ்வகையான சூழலில் வாழ்க்கை மேலும் கடினமாகிறது. “Survival of the fittest” என்பதை இன்றைய சமுக அமைப்பில் நம்மில் பலரால் எந்த விதமான விவாதத்திற்கும் ஆட்படுத்தாமல் ஏற்க முடிகிறது. அவ்விதமான சமுக அமைப்பில் ஒரு மிகச்சாதரண மனிதனால் இவ்வாழ்க்கையை அவ்வளவு சுலபமாக எதிர் கொள்ள முடியாது. சமுகத்தில் இருக்கும் சமமின்மையினால் இந்த சூழல் அவனுக்கு அதிக சிக்கலானதாகவும் கடக்க இயலாத பெருவெளியாகவும் மாறி விடுகிறது.

விட்டோரியா டி சிகா இயக்கி இருக்கும் ஒரு இத்தாலிய திரைப்படம் இந்த உணர்வையே மனதில் நிறைக்கிறது. ஒரு சாமானியனின் வாழ்க்கையை நோக்கி சமுத்தின் பார்வையை திசை திருப்பும் ஒரு படமே “தி பைசைக்கிள் தீ·ப்”. ரோம் நகரில் வேலை இல்லாத் திண்டாட்டம் மிகுந்திருக்கும் சூழலை பின்புலமாகக் கொண்டு அமைந்திருக்கிறது இந்த திரைப்படம். அந்தோனியோ ரிச்சி வேலையில்லாத தந்தை. ஏழ்மை, வாழ்க்கையை ஒரு நகர்த்தயியலாத ஒரு பாரமாக அவன் காலைக் கட்டி விடுகிறது. இந்தச் சங்கிலியை அறுக்கும் கோடாலியாக அவனுக்குக் கிடைக்கிறது, போஸ்டர் ஒட்டும் வேலை. சைக்கிள் இருந்தால் மட்டுமே வேலை கிடைக்கும் என்ற நிலை. தன் வீட்டில் இருக்கும் போர்வைகளையும், பெட்ஷீட்களையும் விற்று ஒரு சைக்கிள் வாங்குகிறான்.

நம்பிக்கையுடன் பிறக்கின்றது ஒரு காலை. சந்தோஷத்தை அள்ளித் தரும் தேவதையாக அந்த சைக்கிள் மாறுகிறது. முதல் நாள் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருக்கும் போது அந்த சைக்கிளை அவன் கண் எதிரிலேயே ஒருவன் திருடிக் கொண்டுச் செல்கிறான். உடைந்த நீர்க்குமிழியுடன் ரோம் நகர் முழுவதும் தொலைந்த வாழ்க்கையை தேடுகின்றனர் தந்தையும் மகனும். ஒரு கட்டத்தில் திருடனைப் பார்த்தும் அவனை பிடித்தும், போலிசால் சாட்சிகள் இல்லாத காரணத்தால் அவனை கைது செய்ய முடியவில்லை. சைக்கிளை மீட்க எடுக்கும் எந்த விதமான முயற்சியும் பலனில்லாமல் போக இறுதியில் வாழ்க்கை அவனை சைக்கிளைத் திருடத் தூண்டுகிறது. மகனின் எதிரிலேயே திருடனாக பிடிபட்டு, அடியும் அவமானமும் பட்டு போலிசில் ஒப்படைக்கப்படாமல் விடுவிக்கப் படுகிறான். அழுதபடி தந்தையும் மகனும் எதிர் நோக்கியிருக்கும் வாழ்கைக்கு திரும்புவதுடன் முடிகிறது இப்படம்.

தோல்வி மனிதனை எந்த அளவிற்கு desperate-ஆக வாழ்க்கையை விரட்டச் செய்யும் என்பதைச் சொல்ல டி சிகா சில காட்சிகளை புணைத்துள்ளார். ரிச்சி, தான் அவ நம்பிக்கைப்பட்ட குறி சொல்லும் பெண்ணிடம் சென்று சைக்கிள் குறித்து குறி கேட்கிறான். படத்தின் இறுதியில் திருடவும் துணிகிறான். விரக்தியில் குழந்தையை கை நீட்டி அடிக்கிறான். திடிரென்று இந்த நிமிடத்தை நான் கொண்டாடுவேன் என்று சொல்லி மகனுடன் ஹோட்டலுக்குச் சென்று நன்றாக சாப்பிடுகிறான். தன்னைத் தோற்கடித்ஹ்ட வாழ்க்கையின் முகத்தின் மீது அழுத்தமாக கறி பூசும் முயற்சி அது. சாப்பிடும் வேளையில் தான் இழந்த வாழ்க்கையை எண்ணிக் கரைகிறான். நாளுக்கு நாள் நமக்கு அல்லது நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஏற்படும் அனுபவம் தான். வாழ்க்கைக்கும் அவனுக்கும் இடையே நிற்கும் அழுத்தமான சுவரை தகர்க்க இயலாமல் தவிக்கும் ஒரு குடும்பத் தலைவனின் வாழ்க்கை இது. இன்றளவும் இந்தியர்களின் வாழ்க்கை முறையுடன் 100 % பொருந்தும் ஒரு சமுகத்தை நம் கண் முன் நிறுத்துகிறார் டி சிகா.

இந்தத் திரைப்படத்தின் வாயிலாக டி சிகா பதிவு செய்வது அக்காலத்திய ஒரு சாமானிய இத்தாலியனின் நடைமுறை சவால்களையும் கஷ்டங்களையும். அதித கற்பனைகளும் கனவுகளுமற்ற இத்திரைப்படம் வெளியான சமயத்தில் இத்தாலியில் 25 % வேலையில்லாத் திண்டாட்டம் நிலவியது. அவ்வேலையில்லா திண்டாட்டமே திரைப்படத்தின் மூல நரம்பாக செல்கிறது. மிக முக்கியமான அம்சமென நான் கருதுவது இத்திரைப்படத்தின் வாயிலாக டி சிகா பதிவு செய்த சாதாரண இத்தாலிய வாழ்கை முறை, சமுகத்தில் ஆன்மிகத்தின் பங்களிப்பு (சர்ச் மற்றும் குறி சொல்லும் பெண் சம்பந்தப்பட்ட காட்சிகள்), தீவிர நிலையில் இயங்கும் மனதின் போக்கு (ஹோட்டலில் ப்ரூனோவுடன் சாப்பிடும் போது ரிச்சி பேசும் வசனம் மற்றும் படம் முழுவதும் அலைபாயும் அவன் மனம்) மற்றும் வாழ்கையின் நிச்சயமின்மையின் மத்தியில் வெறுமையுடன் கனவுகளுக்காகப் போராட வேண்டிய கசப்பான உண்மை. இவற்றை எந்த விதமான ஜோடனைகளும் இல்லாமல் பதிவு செய்திருக்கிறார் டி சிகா.


நியோ ரியலிசம் - சில குறிப்புகள்:
இது ஒரு நியோ ரியலிச திரைப்படம். நியோ ரியலிசம் என்பது கடந்த நூற்றாண்டில் இத்தாலியில் தோன்றிய ஒரு சினிமா இயக்கம். ·பாஸிசத்திற்கு எதிரான ஒரு குரல். இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் இத்தாலியர்களுக்கு யதார்த்தவாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படங்களின் தேவை இருந்தது. அப்போதைய திரைப்படங்கள் பெரும்பாலும் வாழ்க்கையை மீறியதாக கற்பனை உலகின் பிரதிநிதிகளாகவே இருந்தன. நியோ ரியலிச திரைப்படங்கள் பெரும்பாலும் தொழில்முறை கலைஞர்கள் அல்லாதோர்களையே பயன்படுத்தின. மிகவும் எளிமையான நடைமுறை வாழ்க்கையின் உணர்ச்சிகளையே வெளிக் கொணர முயற்சி செய்தன. தோரணையான செட்களோ, ஆடைகளோ, வசனங்களோ இல்லாமல் மிக இயல்பான வாழ்வையே பதிவு செய்தன. ஒரு விதமான விவரணப் பட சாயலை கொண்டிருக்கும் இத்திரைப்படங்கள் வணிக திரைப்படங்களுக்கும் விவரண திரைப்படங்களுக்கும் இடையில் என்பது பொருத்தமாக இருக்கும். சினிமாத்தனம் இல்லாத சினிமாவே இவ்வகை திரைப்படங்களின் நோக்கம். 1950களில் இறந்ததாகக் கருதப்படும் இவ்வியக்கம் பிரதிபலித்ததெல்லாம் இத்தாலியர்களின் கலப்படமில்லாத வாழ்வியலை.
ரொபர்டோ ரோசெல்லினி துவக்கியதாகக் கருதப்படும் இவ்வியக்கத்தின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர், டி சிகா. சமுகத்தின் அவலத்தையும் அதன் உண்மை நிலையையும் நேரிடையாக பதிவு செய்யும் எவ்விதமான ஊடகமும் எதிர் கொள்ள நேரிடும் விமர்சனங்களை இந்த இயக்கமும் இத்திரைப்படமும் எதிர்கொண்டது. இவை எந்த விதமான சமுக சீர்கேட்டிற்கும் பதிலாக அமைந்து விடவில்லை. மாறாக சமுக மாற்றங்களை பதிவு செய்யும் களமாகவே இந்தத் திரைப்படங்கள் செயல் பட்டன. இத்தாலிய திரைப்படங்கள் என்றளவில் மட்டுமின்றி உலக திரைப்படங்களின் வரலாற்றிலும் மிக முக்கியமான இடம் பெற்றது நியோ ரியலிசமும் / தி பைசைக்கிள் தீப்-உம்.
இன்றைக்கு நம் தமிழ் சினிமா நிற்பதும் நம்மைப் பற்றிய பாசாங்கற்ற ஒரு கருத்தைப் பதிவு செய்ய வேண்டிய ஒரு கட்டாய நிலையில் தான்.

No response to “பை சைக்கிள் தீவ்ஸ் (அ) தி பைசைக்கிள் தீ·ப் - சில குறிப்புகள்”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman