Adsense

செவன் சாமுராய் - சில குறிப்புகள்


எந்த ஒரு வார இறுதியைப் போல் தான் அதுவும் இருந்தது - ஒரு வாரத்தின் களைப்பை கண்களிலும் தலையிலும் அப்பியபடி தான் புலர்ந்தது அந்த சனிக்கிழமை. மிக நீண்ட நாட்களுக்கு முன்னரே முன் பதிவு செய்திருந்த செவன் சாமுராய் கையில் கிடைத்த போது தன் நிறத்தை அந்த சனிக்கிழமை மாற்றிக்கொண்டது - பச்சோந்தியைப் போல.
ஒரு பொத்தாம் பொதுவான கருத்தை சொல்ல வேண்டுமானால் செவன் சாமுராய் ஒரு சண்டைப் படம். ஒரு கிராமத்தை கொள்ளையர்கள் பிடியிலிருந்து ஏழு சாமுராய்கள் விடிவிப்பது தான் கதை. இதை எப்படி நகர்த்தியிருக்கிறார் என்பதில் தான் அகிரா இந்த படத்தை ஒரு படி மேலே தூக்கி நிறுத்தியுள்ளார்.
இந்த படம் சமுகப் போரினால் பாதிக்கப் பட்ட ஒரு பதினாறாம் நூற்றாண்டு ஜப்பானிய சமுகத்தின் பின்புலத்தில் நகர்கிறது. ஏழ்மையாலும், கொள்ளையர்களாலும் தாக்கப்பட்ட ஒரு விவசாய சமுகம் தங்களை காக்கும் பொருட்டு சாமுராய்களின் உதவியை நாடுகின்றனர். கர்விகளான சாமுராய்கள், மூன்று வேளை சாப்பட்டைத் தவிர எந்த ஒரு சன்மானமும் பெறாமல் இந்தப் பணியை செய்ய சம்மதிக்கவில்லை (நான் ஏழை தான் னால் பிச்சைக்காரன் இல்லை, என்கிறான் ஒரு சாமுராய்). விவசாயிகள் சாமுராய்களின் உதவியை எப்படி பெறுகின்றனர், எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்கின்றனர் என்பதாக நகர்கின்றது கதை.
அகிரா இந்தப் படத்தின் கதாபாத்திரங்களை உயிருடன் உலவ விட்டிருக்கிறார். இந்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் தன்னளவில் முழுமையடைந்ததாக இருக்கின்றது. தனது உச்சிக்குடுமியை அறுத்தெறியும் குருவில்லாத சாமுராயாக அறிமுகமாகின்றது கேம்பேய் (தகோஷி ஷிமோரா) என்னும் கதாபாத்திரம். சாமுராய்களுக்கு உச்சிக்குடுமி என்பது அவர்களின் கவுரவத்தின் சின்னம். ஒரு குழந்தையை ஒரு திருடனிடமிருந்து காப்பாற்ற துறவி கோலம் கொள்வதற்காக தனது கோலத்தை இழக்கும் ஒரு விவேகமான அடையாளங்கற்ற சாமுராயாக அறிமுகமாகின்றது கேம்பேய் கதாபாத்திரம். இந்த காட்சி அந்த சமயத்தில் சற்றே வித்தியாசமான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கக் கூடும் (ஒரு பிராமணன் அவன் பூணூலை அறுப்பது போன்ற காட்சி இது).
விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு உதவ சம்மதிக்கிறார் கேம்பேய்.
அவரின் கணக்குப் படி கிராமத்தை பாதுகாக்க ஏழு சாமுராய்கள் தேவை. கேம்பேய்-ஐ தவிர மீதமிருக்கும் று சாமுராய்களின் குணங்களையும் மிகவும் துல்லியமாக அகிரா பதிவு செய்கிறார்.
கேம்பேய் தனக்கு தேவையான சாமுராய்களின் ஐவர் கிடைத்தபின் மேலும் ஒரு சாமுராய்க்காக காத்திருக்க நேரமின்றி தனது பயணத்தை விவசாயிகளின் கிராமத்தை நோக்கி துவக்குகிறார். அப்போது அவர்களின் குழுவை பின் தொடர்கிறான் ஒரு கோமாளி சாமுராய். அவனை ஒரு சாமுராய்க்கான குண அடையாளங்களில்லாத காரணத்தால் அவனை குழுவில் ஏற்காமல் பயணத்தை தொடர்கின்றனர் கேம்பேய் குழுவினர். வலிய சேர்ந்த கிகுச்சியோ (தோஷிரோ மி·பூன் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் இது) ஒரு விவசாயியாக இருந்து சாமுராயாக தன்னை மாற்றிக்கொண்ட மனிதன். இதுவும் கதை நிகழும் காலத்தில் நிகழாத ஒன்று. சாமுராயாக பிறவாத ஒருவன் சாமுராயாக இறக்க முடியாது. மிகவும் சாதாரணமாக அறிமுகமாகி கதையின் ஓட்டத்தினூடே வளர்கின்றது இக்கதாபாத்திரம். வாழ்க்கையினால் அழுத்தப்பட்ட ஒரு சமுகத்தின் போராளியாக உருக் கொள்கின்றது இக்கதாபாத்திரம். அடக்குமுறைகளுக்கு அடிபணியாத, திக்கத்துக்கு எதிராக ஒரு முறையில்லாத எதிர்ப்பைக் காண்பிக்கும் பாத்திரம் இது. திரைப்படத்தின் மெல்லிய நகைச்சுவையும் இந்த பாத்திரத்தின் ஊடாகவே பதிவாகிறது.
சாமுராய்களின் வருகையினால், ஷினோ என்ற தனது மகளின் கூந்தலை வெட்டி அவளை ஒரு ணின் தோற்றம் கொள்ளச் செய்ய முயற்சி செய்கிறான் மான்சோ என்ற விவசாயி. மேலும் சாமுராய்களை வரவேற்கவும் அஞ்சி விவசாயிகள் தங்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். “நாங்கள் அவர்களை என்ன செய்து விடுவோம் என அவர்கள் அஞ்சுகின்றனர்” என்ற கேம்பேயின் கேள்விக்கு சாமுராய் உடையில் கிகுச்சியோ பேசும் நீள் வசன காட்சி பதிலாக அமைகின்றது. கதையின் போக்கிற்கு இது மிக முக்கியமான காட்சியென்பேன். இந்த காட்சிக்குப்பின் சாமுராய்களுக்கு விவசாயிகளின் மேல் அதிக பச்சாதாபம் மேலிடுகிறது. சாமுராய்கள் விவசாயிகளுடன் கொள்ளும் நல்லிணக்கம், ஒரு வேளை அகிராவின் தீராத சையாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. கிகுச்சியோ வாயிலாக அகிரா, விவசாயிகள் சாமுரரய் உறவு குறித்த தனது சொந்த கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் என்றும் ஒரு சாமுராயாக விவசாயிகளிடம் பொது மன்னிப்பு கேட்டிருக்கிறார் என்றும் உலக திரைப்பட ய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஷினோவிற்கும் சாமுராய்களில் ஒருவனான கட்சுஷிரொ-க்கும் இடையே மெல்லிய காதல் ஒன்று இருக்கின்றது. இன்னும் ஒரு நாளிற்கான யுத்தமே பாக்கி என்ற நிலை. மூன்று சாமுராய்களை இழந்த நிலையில் இருக்கின்றது கிராமம். அடர்ந்த சோகத்தில் அந்த கரிய இரவில் சாமுராய்களின் கல்லரையில் அமர்ந்திருக்கிறான் கிகுச்சியோ. போராளிகளை ஒருவர் பின் ஒருவராக இளைப்பாறிக் கொள்ள வேண்டிய செய்தி தாங்கி செல்லும் கட்சுஷிரோ ஷினோவைப் பார்க்கிறான். நிச்சயமற்ற வாழ்வின் மரணபயத்திலும் நிறைவேறாமல் போகக்கூடிய காதலிலுமிருக்கும் இரு உயிர்களை இரு உடல்களின் புணர்ச்சி அமைதி கொள்ளச்செய்கிறது. ஒரு விவசாயி ஒரு சாமுராயுடன் இணைதல் கூடாது என்ற கொள்கை கொண்ட மான்சோ தன் மகளை மூர்க்கமாக தாக்குகிறான். அவமானத்திலும் குற்ற உணர்ச்சியிலும் தலை கவிழ்ந்து நிற்கிறான் கட்சுஷிரோ. யாருக்கும் யாரும் சமாதானம் சொல்ல முடியாமல் நிற்கின்றனர். மழை வலுத்துப் பெய்யத் துவங்குகிறது. ஷினோ தரையில் விழுந்து கிடக்கிறாள் அழுதபடி.
மூன்று மணி நேரத்திற்கும் மேல் நகரும் இப்படம் முழுக்க முழுக்க ஒரு பதினாறாம் நூற்றாண்டு கிராமத்துப் பிண்ணனியில் அமைந்திருக்கிறது. இந்தப்படத்தின் வாயிலாக நமக்கு அறிமுகமாவது, ஒரு சமுகமும் அதன் பாதிப்புகளும் தான். சாமுராய்கள் பற்றிய வீரமான பிம்பத்தை தாண்டி சாமுராய்களை ஒவ்வொரு போரிலும் செத்துப் பிழைக்கும் சாமானியர்களாக, எளிமையானவர்களாக, மிகவும் விவேகமுள்ளவர்களாக பதிவு செய்துள்ளார் அகிரா. இன்றைய நிலையிலும் மிகச்சிறந்த சண்ட¨ப் படமாக இதைக் கருத முடியும். ஆனால் அகிரா இதை ஒரு சண்டைப் படமாக மட்டுமே எடுத்திருக்கிறாரா என்பதில் தான் இந்தப் படம் வித்தியாசப்படுகிறது.
அகிரா குரோசாவா (1910-1998)
1910-இல் ஒரு சாமுராய் குடும்பத்தில் எட்டாவது குழந்தையாகப் பிறந்தவர் அகிரா. 1936 இல் பி சி எல் ஸ்டுடியோவில் கஜிரோ யமமோடொ-விடம் சேர்ந்தார். தொடர்ந்து ஜூடோ சாகா (1942) என்ற படத்தின் வாயிலாக தன் திரைப்பட வாழ்க்கையையைத் துவங்கினார். இந்தப்படம் அகிராவிற்கு ஒரு அடையாளத்தைத் தந்தாலும், பெரும்பாலான விமர்சகர்களும், திரைப்பட ரசிகர்களும் அகிராவையும், ஜப்பானிய திரைப்படங்களையும் அடையாளப்படுத்திக்கொண்டது 1954-இல் வெளியான செவன் சாமுராய் மற்றும் ராஷோமான் வாயிலாகத் தான். இந்த இரு திரைப்படங்களையும் ஹாலிவுடில் மீண்டும் தயாரிக்கும் அளவிற்கு (ராஷொமொன் - தி அவுட்ரேஜ் - 1964; செவன் சாமுராய் - தி மாக்னி·பெசண்ட் செவன் - 1960), இவ்விரு திரைப்படங்களும் ஹாலிவுட்டை பாதித்திருக்கின்றன. உலகம் ஜப்பானிய திரைப்படங்களைக் குறித்த ஒரு கருத்தை தேற்றிக் கொண்டது இவரது திரைப்படங்கள் வாயிலாகத்தான் என்றாலும் மிகையல்ல. தோஷிரோ மி·பூன் மற்றும் தகோஷி ஷிமுரா இவரது பல படங்களில் நடித்துள்ளனர். ஒரு குழுவைப் போல இயங்கியுள்ளனர். அகிரா தனது சொந்த கதைகளை மற்றுமின்றி உலக இலக்கியங்களையும் தழுவியுள்ளார். எந்த ஒரு கலைஞனுக்கும் இருக்கும் வீழ்ச்சி நிலையைப்போல, அகிராவிற்கும் வீழ்ச்சி நிலை
1970-ல் துவங்கியது. ஒரு தற்கொலை முயற்சிக்குப்பின் இவர் மீண்டு(ம்) வந்தாலும் திரையுலகில் அதிக திக்கம் செலுத்த இயலாத ஒரு வயதான சிங்கமாகவே இருந்திருக்கிறார். தீவிர சினிமா ரசிகர்களுக்கு அகிரா ஒரு பெயர் மட்டுமல்ல.

One response to “செவன் சாமுராய் - சில குறிப்புகள்”

Kanags said...

Seven Samurai பற்றிய விமரிசனத்தை வேறொரு கோணத்தில் கானா பிரபா இங்கு எழுதியிருக்கிறார்.

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman