Adsense

29ஆம் புத்தகக் கண்காட்சி


இந்த ஆண்டின் புத்தகக் கண்காட்சிக்கு நான் சென்றது நேற்றைக்கு. நேற்று, எல்லோருக்கும்
விடுமுறையாக இல்லாத காரணத்தினால் அவ்வளவாக கூட்டமில்லை. அதனால் நெருக்கடியின்றி நடக்க முடிந்தது. கடந்த வருடங்களைப் போன்றில்லாமல் மிகச்சில புத்தகங்களே வாங்கினேன். நான் மிகவும் எதிர்பார்க்கும் கண்காட்சிகளுள் இதுவும் ஒன்று. இரண்டு காரணங்கள்
1) நிறைய புத்தகங்களை ஒரே இடத்தில் வாங்கும் சௌகரியம்
2) 10 % கழிவு. இங்கு வாங்குவதால் 200 ரூபாய் வரை வருடத்தில் சேமிப்பேன்.

சென்ற வருடத்தைப் போலவே இந்த வருடமும் அதிகமாக கடைகள் இருந்தன. சென்ற வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் குழந்தைகளுக்கான புத்தகம் அதிகம் விற்பனைக்கு இருப்பதாக தோன்றுகிறது. கார் பார்க்கிங்கிற்கு நிறைய இடம் இருக்கிறது, வசதியாக. கூட்டமிருப்பதாக தோன்றுவது, தமிழிலக்கிய பதிப்பாளர்களின் கடைகளிலும், ஹிக்கின்போத்தம்ஸ் போன்ற ஆங்கில நாவல்களும் கிடைக்கும் கடைகளிலும் தான். உயிர்மை ஸ்டாலில் நேற்று சுஜாதா வருவதாக நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தானோ என்னவோ நேற்றைக்கு, உயிர்மை அரங்கம் முழுவதும் சுஜாதாவின் புத்தகங்களால் நிரம்பியிருந்தது ! ஜெயந்தி சங்கரின் ஏழாம் சுவை இந்த ஸ்டாலில் பார்த்தேன். (இந்த புத்தகம் இன்னும் வெளியாகவில்லை என நினைத்திருந்தேன்) இணையத்திலும், உயிர்மை இதழிலும் வெளியான உலக கலாச்சாரங்கள் பற்றிய கட்டுரைகள் இந்த புத்தகத்தில் இருந்தன.

தீம் தரிகிடவில் வழக்கம் போல ஓட்டு போடச் சொன்னார்கள். கிழக்கு பதிப்பகம் உட்பட சில ஸ்டால்களில் “computerised billing” இருக்கிறது. அல்லையன்ஸ் தேவனின் பழைய புத்தகங்களை மறுபதிப்பு செய்திருக்கின்றனர். “கூத்துப்பட்டறை” விற்பனைக்கு வைத்திருந்த போஸ்டர்கள் creative-ஆக இருந்தன, ஆனால் எதையும் வாங்கவில்லை.

சுஜாதாவின் “சிறந்த” பட்டியலில் இடம் பெற்ற புத்தகம் இது என “அபத்தங்களின் சிம்பொனி”ஐ விளம்பரப்படுத்துகிறார்கள். திலகவதியின் புத்தகங்களுக்கு அதிக விளம்பரம் இருக்கின்றது. கிழக்கு பதிப்பகம் விளம்பரத்திற்கு அதிகமாக செலவழித்திருப்பது தெரிகின்றது.

பாலாவின் மெர்க்குரிப்பூக்களுக்காக அலைந்து விட்டு கிடைக்காததால் வாங்காமல் திரும்பி விட்டேன். என் அம்மா படிப்பாள் என்று நினைத்து “தாயுமானவன்” வாங்கினேன்.
தியொசாபிகல் சொசைட்டியில் “Free masonry”-ஐப் பற்றிய புத்தகம் சற்றே சபலத்தைக் கிளப்பியது. ஆனால் அதையும் வாங்கவில்லை. Amarthaya Sen-ன் “The argumentative Indian” வாங்குவது என கண்காட்சிக்கு செல்லும் முன்பே முடிவு செய்து கொண்டுச் சென்றேன். நான் வாங்காமல் வந்த இன்னொரு புத்தகம் இது. பெயர் மறந்து போன அந்த ஸ்டாலில் இருந்த ஒரே ஒரு காப்பியும் “defective”-ஆக இருந்ததால் வாங்கவில்லை. ஈஇந்த ஸ்டாலில் ஆங்கில நாவல்களை குவித்திருந்தனர். வரும் குட்டி பசங்கள் ஹாரி பாட்டரை விசாரித்தபடியே இருந்தனர். 6 சிக்மா பற்றிய புத்தகங்களும், மேலாண்மை பற்றிய புத்தகங்களும் வேறு எந்த ஸ்டாலைக் காட்டிலும் அதிமாக இருந்தது.

வழக்கத்திற்கு மாறாக இம்முறை நான் கவிதை தொகுதி அவ்வளவாக வாங்கவில்லை. “கை மறதியாக வைத்த நாள்” என்ற யுவனின் கவிதைத் தொகுதியையும், “நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள்” என்ற மொழிபெயர்ப்பு கவிதை தொகுப்பையும் மட்டுமே வாங்கினேன். இணையத்தில் அறிமுகமான பெயர்களுக்கு முகத்தைப் பொருத்திக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்போடு நான் தேடியது இரண்டு ஸ்டால்களை (விருட்சம் மற்றும் கிழக்கு பதிப்பகம்). கிழக்கு பதிப்பகத்தில் கிருபா ஷங்கரைப் பார்த்து “Hi” சொன்னேன். மிகவும் சின்னப் பையன் போன்ற தோன்றம் கொண்டுள்ளார் அவர். அவர் பக்கத்திலே உட்கார்ந்திருந்த அந்த கொழு கொழு மனிதர் தான் பத்ரி சேஷாத்ரி போலும். அவரிடம் ஒரு “Hi” சொல்லியிருக்கலாம் என “புலி நகக் கொன்றை” வாங்கும் போது தோன்றியது. விருட்சம் ஸ்டாலில் ஹரன் பிரசன்னாவைப் பார்க்க முடியவில்லை. நான் சென்ற போது அவர் ஸ்டாலுக்கு வந்திருக்கவில்லை.

சில கேள்விகள்
- கூட்டமாக இருக்கும் சமயங்களில் திருட்டு நடக்கிறதா? (அனேகமாக எல்லா கடைகளிலும் பை கொடுக்கிறார்கள். கடை முழுவதும் சுற்றி வர சுதந்திரமும் இருக்கிறது. சுடுவதற்கு எக்கச்சக்க வாய்ப்புகள் இருக்கின்றனவே)
- சில பதிப்பகங்களின் புத்தகங்கள் மற்ற ஸ்டால்களிலும் கிடைக்கின்றனவே, இது எந்த விதமான ஒப்பந்தம் (குறிப்பாக “நிலமெல்லாம் ரத்தம்”, பாலகுமாரனின் நாவல்கள் நிறைய ஸ்டால்களில் காணக்கிடைக்கிறது.)
- புத்தகத்திற்கான சந்தை (பேப்பர், மற்றும் மின்புத்தகங்கள்) அதிகரித்துக் கொண்டே வருவதாக தோன்றுகிறது. ஆனால் அதை ஈடு செய்யும் வகையில் தரமான படைப்பாளிகள் உருவாகின்றார்களா? அல்லது ஒரு விதமான தேக்க நிலை இன்னும் சில வருடங்களில் தோன்ற சாத்தியமுள்ளதா ?

அழகாக (வசதியாக) புத்தகங்களை அடுக்கியிருந்ததாகத் தோன்றிய ஸ்டால் - சந்தியா பதிப்பகம்
ப்ரொஷனலாக புத்தகம் விற்பதாக தோன்றிய ஸ்டால் - கிழக்கு பதிப்பகம், சின்மையா மிஷன்
கூட்டத்தின் பெரும்பகுதியினர் - பொழுது போக்க வந்த கல்லூரி யுவதிகளும், அவர்கள் பொருட்டு வந்த இளைஞர்களும்.

வாங்கிய புத்தகங்கள்
- தண்ணீர் (அசோகமித்திரன், நாவல்)
- கரைந்த நிழல்கள் (அசோகமித்திரன், நாவல்)
- நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் (ஜெயமோகன், மொழிபெயர்ப்பு கவிதைகள்)
- புலிநகக் கொன்றை - (பி. ஏ. கிருஷ்ணன், நாவல்)
- Jesus lived in India (Holger Kersten, Non-fiction)
- பாரதி நினைவுகள் (யதுகிரி அம்மாள், Non-fiction)
- தபால்காரன் (க. நா. சு, மொழிபெயர்ப்பு நாவல்)
- தாயுமானவன் (பாலகுமாரன், நாவல்)
- நானே எனக்கொரு போதிமமூம் (பாலகுமாரன், சிறுகதைகள் மற்றும் குறுநாவல்)
- கைமறதியாய் வைத்த நாள் (எம். யு வன், கவிதை)
- Buddhist stories (F.L. Woodward)
- பரமார்த்த குரு கதைகள் (பஞ்சுமாமா, குழந்தைகள் கதைகள்)
- தெனாலி ராமன் கதைகள் (பஞ்சுமாமா, குழந்தைகள் கதைகள்)

One response to “29ஆம் புத்தகக் கண்காட்சி”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman