Adsense

விளம்பரம் வாங்கலையோ விளம்பரம்


மு-கு:
இது சனிக்கிழமை எழுதியது. திடீரென என் கணிப்பொறி தமிழ் விரோதியாகிவிட்டதால், அதை சரி செய்து இன்று வெளியிடுகிறேன்.
_________________________________


இன்று காலை சென்னை வானிலையைப் போலவே என் மன நிலையும் இருந்தது, அதாவது மந்தமாக. எதையும் படிக்கவோ ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவோ மனமில்லாமல் படுக்கையிலேயே புரண்டு கொண்டிருந்தேன். என் அப்பா வாங்கி வந்த நாளிதழ்களை மேய்ந்து விட்டு பொழுது போகாமல் இலவசமாக வந்த "Sulekha classifieds"-ஐயும் மேய்ந்தேன்.
இது போல விளம்பர நாளேடுகளை வாசிப்பது ஒரு சுவாரசியமான பொழுது போக்கும் கூட. மாறி வரும் சமுகத்தின் மன நிலையை பிரதிபலிப்பாகவே நான் இந்நாளேடுகளைப் பார்க்கிறேன். ஒரு காலத்தில் உற்பத்தியாகும் பொருட்களை மட்டுமே விளம்பரம் செய்து வந்த காலம் போய், இப்போது சேவைகளையும் விளம்பரப்படுத்தும் காலம் ஏற்பட்டிருக்கிறது. விளம்பரமின்றி எந்த ஒரு தொழிலையும் நடத்துவது இன்றைய சூழலில் இயலாத காரியம். எதற்காக விளம்பரம் செய்ய வேண்டும் என்று யோசித்ததில் தோன்றிய காரணங்கள் இவை.
1) உடனடி பலன் குறித்த தேவை
2) அதிகரிக்கும் போட்டி சூழல்
3) வாடிக்கையாளர்களின் அறியாமை அல்லது சிக்கலான தொழில் நுட்பத்தை சாமானியனுக்கு விற்க வேண்டிய கட்டாயம்

சேவை தொழிற்சாலையின் வளர்ச்சியை எந்த ஒரு விளம்பர நாளேடும் பிரதிபலிக்கத் தவறுவதில்லை. இன்றைய மேய்ச்சலில் சிக்கிய சில சுவாரசியமான விளம்பரங்கள்
1) ஒயிட் அண்ட் ஒயிட் நீல்கண்ட சித்தரின் அருள்வாக்கிற்கான விளம்பரம்.
2) ஆதம்பாக்கம் ரவி சாஸ்திரிகளின் ஹோமம் செய்து வைப்பதற்கான விளம்பரம்.
3) பழைய ஜரிகை, பட்டுப் புடவைகளை வாங்கிக் கொள்ளும் அன்சரின் விளம்பரம்.


இந்த போக்கில் போனால், இன்னும் ஐந்து வருடத்திற்குள் தமிழ் கூறும் நல்லுலகம் படிக்க வேண்டி வரும் விளம்பரங்கள் சில

குழந்தை இல்லையா ?
பரிட்சையில் தோல்வியா ?
திருமணம் தள்ளிப் போகிறதா ?
இன்றே விஜயம் செய்யுங்கள்...
SO & SO திருகோயில்
பத்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள பல நூறு ஆண்டு பழமை வாய்ந்தது
தரிசண நேரம் : 6 AM - 10 AM, 5 PM - 9 PM.
பக்த கோடிகளின் வசதிக்கேற்ப ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட கர்ப்பகிரகம் அமைந்த ஒரே கோயில்.

__________

திருமணம் ஆனவர்கள், ஆகாதவர்கள், ஆகியும் ஆகாதவர்கள், ஆகாமலே ஆனவர்கள் அனைவரின் தேவைக்கும் நட்புக்கரம் நீட்டும் ஒரே அமைப்பு. ஆண்/ பெண் இரு பாலர்களின் அன்பு சார்ந்த தேவைகளுக்கு இன்றே பதிவு செய்வீர் SO & SO Club. ஆயுள் சந்தா ______ /- மட்டுமே. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, ______
தொலைபேசி, ________
மின்னஞ்சல் முகவர், __________
வலைதளம், _______
இன்றே முந்துங்கள். !!
____________

பேப்பர் வாங்குவது, படிப்பது, பின்பு பேப்பர்காரனுக்குப் போடுவது என எத்தனை வேலைகள். அப்பப்பா தொல்லை. உங்களின் வசதிக்காக எங்கள் நாளிதழை இணைய நாளிதழாக மாற்றியுள்ளோம். எங்கள் நாளிதழை நீங்கள் வாசிக்க செலவு மாததிற்கு ரூ _ /- மட்டுமே. ஆதலால் இன்றே சொடுக்குங்கள் www._____.com.
காகித கழிவுகளைத் தவிர்ப்பீர்! மரங்களை காப்பற்றுவீர்!

சும்மாவா சொன்னார்கள் Idle mind is devil's workshop என்று.

No response to “விளம்பரம் வாங்கலையோ விளம்பரம்”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman