Adsense

மௌனியின் கதைகள் - சில குறிப்புகள


மௌனியின் கதைகள் அறிமுகமான தினத்திலிருந்து (14, ஜனவரி, 2005) இப்பதிவை எழுத வேண்டுமென்ற ஆவல் இருந்தது. வேளைப்பளு காரணமாக இத்திட்டத்தை ஒத்திப்போட வேண்டியிருந்த்தது. முதல் முயற்சியாக மௌனினியின் கதைகள் குறித்த என் பார்வையையும், "நினைவுச்சுழல்" பற்றிய குறிப்புகளையும் பதிவு செய்து இருக்கிறேன். சமயம் கிடைக்கும் போது (அடுத்த வார இறுதியில் நேரம் கிடைக்கும் என நினைக்கிறேன்) என்னை மிகவும் பாதித்த மேலும் இரண்டு சிறுகதைகளைப் பற்றிய பதிவை இடுகிறேன்.

மௌனியின் கதைகள் குறித்த என் பார்வை
---------------------------------------------------------
எண்ணங்களால் பீடிக்கப்பட்ட சாமானிய மனிதன் இயங்கும் வெளி மிகவும் சிறியது. ஆனால் அந்த எண்ணங்கள் அவனை இட்டுச் செல்லும் வெளியோ எல்லையற்றது. தனிமையையும் ஆர்ப்பரிக்கும் மனதின் உளைச்சல்களையும், எண்ணங்களால் நகர்த்தப்படும் நாட்களையும் மௌனி தன் கதைகள் ஊடாக பிரதிபலிக்கிறார். அவரது கதைகள் வழியாகவே அறிமுகமாகும் எழுத்தாளர் மௌனி ஒரு "introvert personality"-ஆக இருப்பாரோ என்று கூட நினைக்கத்தோன்றுகிறது. கண்ணை மூடிக் கொண்டு தன் எண்ணங்களை உற்று நோக்கியபின் அவற்றை அப்படியே வார்த்தைகளாக வார்த்துவிட்டாரோ என்று தோன்றுமளவிற்கு எண்ணங்களை கவனமாக பின் தொடர்கின்றன இவர் வார்த்தைகள்.
மௌனியின் மொழி அலாதியானது, அவரின் கதைக்கான கருவைப்போலவே. அவரின் கதை மாந்தர்கள் பெரும் பாலும் அகவயப்பட்டவர்களவே இருக்கின்றனர். அல்லது அவர்களுக்கு சம்பவங்கள் குறித்த விசாரம் அதிகமாக இருக்கின்றது. அந்த விசாரமே பல கதைகளின் மூலமாகவும், கதை முழுதுமாக ஆக்கிரமிக்கும் உணர்வாகவும் இருக்கின்றது. இவ்வுணர்வுகளை தன் விவரணைகளால் சொல்கிறார் மௌனி.
நவின சிறுகதைகளோ அல்லது தற்காலிக கதைகள் மட்டுமோ அறிமுகமாகியிருக்கும் ஒரு வாசகனுக்கு மௌனியின் மொழி சற்று அன்னியப்படவே செய்யும். இவரது வார்த்தைகளின் உபயோகமும் அவ்வகையிலானதாகவே இருக்கிறது. பிராமண சமுகத்தில் பயன்படுத்தப்படும் சமஸ்கிருத மூலம் கொண்ட சொற்கள் அதிகம் காணக்கிடைக்கின்றன. (பாரதியார் மொழி பெயர்த்திருக்கும் தாகூரின் சிறுகதைகளிளும் நான் இப்போக்கை கவனித்திருக்கிறேன்) ஆனால் இவ்வார்த்தைகள் வாசகனை கதையிலிருந்து விலக்குமளவிற்கு இல்லை. பல்வேறு கதைகளங்களையோ பலதரப்பட்ட கதாபாத்திரங்களையோ இவர் தன் கதைகள் எதிலும் முயற்சி செய்து பார்க்கவில்லை. இவரது சிறுகதை தொகுதியின் வாயிலாக எனக்கு மௌனியின் கதைகள் அறிமுகமானதால், முதல் இரண்டு கதைகளுக்குப் பிறகு இவரது கதைகளை வாசிப்பதற்கான மனநிலையும் இவரது கதைகளிலிருந்து எத்தகைய வாசிப்பனுபவம் கிடைக்குமென்ற எதிர்பார்ப்பும் தீர்க்கமாக அமைந்துவிட்டது. மௌனி தனது அபரிமிதமான எழுத்துத் திறமையை ஒரு சிறிய வெளிக்குள் அடைத்து, அந்த வெளியிலேயே முழுமையாக நிலைத்து விட்டாரோ என நினைக்கத் தோன்றுகிறது. இருப்பினும், இவரது ஒவ்வொரு சிறுகதையின் முடிவும் சிந்தனைகளின் சங்கிலியின் முதல் கண்ணியை கைகளில் திணிக்கின்றது.
இவரது சிறுகதைகள் பெரும்பாலும் ஒரு தொடர்கதையின் நடுவிலிருக்கும் ஒரு அத்தியாயத்தின் தோற்றத்தையே தருகிறது. பெரிய சூழ் நிலை மாற்றங்களோ, எதிர்பாராத முடிவோ திருப்பமோ நாடகத்தனமான முடிவோ இருப்பதில்லை. இவரது கதைகள் விட்டுச்செல்லும் உணர்வை வர்ணிக்க ஆங்கில வார்த்தையான "Melancholy"-ஐத் தான் பயன்படுத்தவேண்டும். இவரது கதைமாந்தர்களும் எந்த ஒரு நாடகத்தன்மையோ, நாயகத்தன்மையோ கொள்ளாமல், சராசரி உணர்வுகளுடன், எல்லா சாமானியனுக்கும் உண்டான மனக் கிலேசங்களுடன் தான் இருக்கின்றனர். இவ்வகைத்தன்மை ஏறக்குறைய எல்லா கதைகளிலுமே காணப்படுவதால், ஒருவேளை மௌனியும் தன் வாழ் நாளை மனச்சுமைகளுடனே கழித்திருப்பாரோ என நினைக்கத்தோன்றுகிறது.

நினைவுச் சுழல் - சிறுகதை பற்றிய குறிப்புகள்
--------------------------------------------------------------
மனிதன் எதனால் செய்யப்பட்டவன் என்ற கேள்வி எழுப்பப்படுமாயின், ரத்தம், சதை, எலும்பு எனாமல் நினைவுகளால் என்ற பதில் மனிதனையும் அவன் வாழ்வையும் உணர்வு ரீதியாக அனுகுபவரிடமிருந்து கிடைக்கும். இன்று உயிரோடு நடமாடிக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு மனிதனும் நேற்றைய எச்சங்களே. அவனின் ஒவ்வொரு செயலும், பெரும்பாலும் இறந்த காலத்தின் வினைகளின் எதிர் வினைகளே. இறந்த காலத்தை ஒரு பெரிய கல்லாக தன் காலில் கட்டிக்கொண்டு நகர முடியாமல் நகர்ந்து கொண்டிருப்பவனுக்குத் தெரியும், நினைவுகளின் சுமை. அவனால் அந்த வலியையோ பாரமான கல்லையோ புறந்தள்ளிவிட்டு வாழ்தலோ அல்லது நிகழ்காலத்தின் எந்த ஒரு செயலையும் இறந்த காலத்தின் ஒரு நிகழ்வோடு பொருத்திப் பார்க்காமல் இருத்தலோ இயலாது. அவ்வகையல்லாதவனுக்கும் அதிக தாக்கம் தர வல்ல ஒரு நிகழ்வு தட்டி எழுப்பி விடும் மனதின் ரகசிய அறைகளின் புதைக்கப் பட்டிருக்கும் நினைவுகளின் தூக்கத்தை. நினைவுகளால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்ட மனிதனின் நாட்கள், ஒரு புற்றிலிருந்து புறப்படும் ஈசலின் வரிசை போல பொலபொலவென புறப்பட்டு வரும் எண்ணிக்கையில்லாத எண்ணங்களால் நகர்த்தப்படுபவை. அந்நினைவுகளின் தாக்கமே அவன் வாழ்வு, அவன் ஆளுமை.
மௌனியின் நினைவுச்சுழல் என்ற கதை மனிதனின் நினைவுகளின் தாக்கங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட ஒரு சிறுகதை. உரையாடல் பாணி என்பது நிகழ்வுகளை அல்லது பாத்திரங்களின் செயல்களைச் சொல்லுமிடத்தில் நிரப்ப ஏதுவாக இருப்பினும், ஒரு தனி உலகில் சஞ்சாரம் செய்யுமொருவனின் மன போக்கை ஒரு உரையாடல் மூலம் எப்படி வெளிப்படுத்த இயலும் ? மௌனியின் பாத்திரங்கள் (மைய பாத்திரங்கள்) பெரும்பாலும் அக உலகில் பிரதானமாக உலவிக் கொண்டிருக்கின்றன. நினைவுச்சுழல் சிறுகதையில் வரும் சேகரனும் அவ்வகையிலான ஒரு பாத்திரம் தான். தனது இருப்பு நிலையிலிருந்து தீராத விடுதலை வேண்டுகிறான். தப்பித்து வேறு வெளி செல்ல விரும்புகிறான். ஒரு விதமான மனக்கிலேசத்துக்கு ஆட்பட்டவனாய், உலகில் யாரும் காணா வண்ணம் ஓடி ஒளிய விரும்புகிறான். அவன் நிலைகொள்ளாத்தன்மையின் காரணங்கள் என ஆசிரியர் எதையும் முன் வைக்கவில்லை. அவன் தன்மையயும் அத்தன்மையினால் ஆட்கொள்ளப்பட்டவனின் செயல்பாடுகளையும் பிரதாணப்படுத்தியதால் கூட இருக்கலாம். பட்டணம் வந்திருக்கும் சேகரனை, அவன் குடி போதையிலிருக்கும் ஒரு தருணத்தில சந்தித்து அவனை கல்லூரி விழாவில் அவள் செய்யும் கச்சேரிக்கு வயலின் வாசிக்க வரும்படி அழைக்கிறாள் கமலா. அதன் படி வந்து வயலினும் வாசிக்கிறான் சேகரன். அவன் அடிமனதிலிருந்து பிறக்கும் இசை அவனது ஆத்மாவின் இசையே. அந்த இசை கமலாவின் இறந்தகால நினைவுகளையும் தட்டி எழுப்புகிறது. சிறு வயது முதலே ப்ரிச்சயமுடையவர்களாய், சகோதர சகோதரியாக வளர்ந்து வந்த சேகரனும் கமலாவும் கொண்ட உறவினால், அவனின் வில்லிருந்து பிறந்த இசையின் ஒவ்வொரு இழையிலும் மறைந்திருக்கும் செய்தியை அறிய பிரயத்தணப்படுகிறாள். அறிய முடியாத ஒரு முடிச்சே நிரடுகிறது. கச்சேரி முடிந்து அமைதியாக வெளியேறிய சேகரன் மதுவோடும், மனக்கிலேசத்துடனும் இரவைக் கழித்தப்பின் விடியலில் பயணப்படுகிறான், யாரும் அறியாமல் மறைந்து விடுகிறான். காலையில் மாடியிலிருக்கும் அவனின் அறையில் அவனைக் காண வந்த கமலாவின் மனதில் சேகரனின் மறைவு ஒரு விதமான ஆறுதலையும் தீவிர ஆத்மவிசாரத்தையும் ஏற்படுத்துகிறது.
"என்ன எண்ணம், அறியாத வகையில் ரகசியமெனக் கருதிய என்ணம் அவனோடு பகிர்ந்து கொண்டேன்? வெளியே தெளியத் தோன்ற முடியாதது, உள்ளே இருந்ததா? இந்தப் புரியாத அமைதியின்மைக்குக் காரணம் ? தன்னுடைய மனதே பிளவு கொண்டு, ஒன்றையொன்று ஒன்றுமில்லாததற்கு பரிகசிப்பது தானா?..." என்ற மௌனியின் வரிகள் ஒரு உற்று நோக்கப்பட்ட மனதின் விசாரம். கமலாவைத் தேடி வந்த தோழி "என்ன கமலா, எவ்வளவு நேரம் மேலே இருக்கிறாய்? வா, கீழே போகலாம்" என்று சொல்லிக் கீழே அழைத்துச் செல்வதுடன் கதை முடிகிறது. மிகச்சிறந்த வாக்கியத்தோடு முடிக்கப்பட்ட கதைகளுள் இதுவுமொன்றாக எனக்குப் படுகிறது.
தன் வயப்பட்ட மனது கடலைப்போன்றது. அதன் அமைதியான ஆழத்தில் தான் புதைந்திருக்கின்றன பொக்கிஷங்களும் பேராபத்துகளும். அந்த மனதின் பிழற்சியும், செம்மையுமே ஒவ்வொரு மனிதனையும் மற்றொருவனிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அதன் பரிமாணங்களை மிகச்செம்மையாக இந்தக் கதையும் பதிவு செய்து இருக்கிறது.

No response to “மௌனியின் கதைகள் - சில குறிப்புகள”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman