Adsense

What Next


சற்றேறக்குறைய ஒன்றறை மாதமாகிவிட்டது, நான் கவிதைகளைப் பற்றி சிந்தித்தோ அல்லது கவிதைகள் படித்தோ. கவிதைகள் என்றில்லை, வேலை சம்பந்தமில்லா எதையும் பற்றி சிந்தித்தும். என்னுடைய “To Do” லிஸ்ட் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது. என்னுடைய நன்பனொருவனும் இதே போன்ற ஒரு புலம்பலை பதிவு செய்திருக்கிறான்.

நேரம் கடிவாளாமற்ற ஒரு குதிரையைப் போல பறக்கிறது, நான்கு திசைகளிளும். புருவத்தை உயர்த்துவதற்குள் ஒரு நாளும், கொட்டாவி விட்டு முடிப்பதற்குள் ஒரு வாரமும் மறைந்து விடுவதாக தோன்றுகிறது. சற்று நிதானப்படும் ஒரு சனிக்கிழமை பிற்பகலில் உட்கார்ந்து யோசித்தால், வேலைக்கு ஒதுக்கும் சமயத்தில் எதையாவது இழந்து விட்டோமா என்று கூட யோசிக்கத் தோன்றுகிறது. ஒரு 20 வருடத்துக்குப் பின் என்ன செய்வேன், எப்படி இருப்பேன் என்று கற்பனை செய்ததெல்லாம் சாத்தியப்படுமா என்ற பயமும் சேர்ந்து கொள்கிறது. ஒவ்வொரு புதிய நாளும், புதிய புதிய சவால்களையும் வாய்ப்புகளையும் தந்து, அதன் போக்கில் என்னை இழுக்கவே செய்கிறது. ஒவ்வொரு ஓய்வு கணமும் என்னிடம் கேட்கிறது “What Next?”.

சுழலும் காலமும் மாறும் நிலைமைகளும் எப்போதும் ஒரு நிச்சயமற்ற தன்மையை உணர்த்திக் கொண்டே இருக்கின்றது. காலம், எவ்வித புற நிகழ்வுக்கும் அதிக முக்கியத்துவம் தர தேவையில்லை என்ற சித்தாந்தத்தை முன்வைத்து விட்டு அதை அடிக்கடி நிருபித்து வேறு காட்டுகிறது. வாழ்வை அதன் வெளியிலிருந்து பார்க்க கற்றுக் கொண்டபின் நிகழ்காலம் மிகவும் கேலிக்குரியதாகவும், சுவாரசியமாகவும் மாறி விடுகின்றன. எந்த நிகழ்வின் வீரியமும் நெடு நாட்களுக்கு நீடிப்பதில்லை. இக்கணத்தில் பேசும் வார்த்தைகளை பொய்யாக்கவோ/ அல்லது உறுதிப்படுத்தவோ எதிர்காலத்தில் ஒரு கணம் காத்துக் கொண்டிருக்கிறது. அந்த கணத்தை கருத்தில் கொண்டு பேச எத்தனிப்பதிர்க்குள் வார்த்தையின் தேவை தீர்ந்து விடுகிறது. அதன் பின் இரைக்கப் படுவதெல்லாம் பயனிலாச் சொற்கள். ஆனால் என்னை சூழ்ந்திருப்பவையும் இக்கணத்தில் நான் இரைப்பவையும் அவ்வகைச் சொற்களே. வார்த்தைகளுக்கே இந்த கதியென்றால் செயல்களைப் பற்றிச் சொல்ல தேவையில்லை.

சரி வேறு விஷயம் பேசுவோம்.

சென்ற மாதம் (அல்லது அதற்கு முந்திய மாதம் ?? ) நான் ஒரு கார் வாங்கினேன். புதிய சாண்ட்ரோ சிங். கருப்பு கலர் (ஏண்டா ஆயிரம் கலர் இருக்கரச்சே சனீஸ்வரன் கலர்ல கார் வாங்கறே ?). அம்மா அப்பாவின் ஆசைப்படி ராகு காலம் எமகண்டமெல்லாம் இல்லாத ஒரு வேளையில் பூஜையும் போட்டாகிவிட்டது. ஜம்மென்று ஓடுகிறது கார். அதற்கு “Black Horse” என்று நாமகரணம் சூட்டலாம் என்றிருந்தேன் (அதாவது ஸ்டிக்கர் ஒட்டலாம் என்றிருந்தேன்). இந்த கார் ஓட்டுவதில் நான் ஆங்கில கே-க்கும் எம்-க்கும் நடுவில். உங்களுக்கு எதாவது காமெடி ஷோ பார்க்க வேண்டுமென்றால் நான் ரிவர்ஸ் எடுப்பதைப் பார்க்கலாம். கியாரண்டியாய் சிரிப்பீர்கள் இல்லை கொஞ்சம் சீரியஸ் டைப்பாக இருந்தால் ரிவர்ஸ் எப்படி எடுக்க வேண்டும் என அட்வைஸ் செய்வீர்கள்> அதனால் அங்கங்கே உரசி பாடியில் வெள்ளிக்கோடுகள் ஏற்பட்டுவிட்டன. இன்னும் கொஞ்சம் உரசியபின் மொத்தமாக “Zebra” என்று பெயர் சூட்டலாம் என முடிவு செய்து விட்டேன் :-). குதிரையையும், வரிக் குதிரையையும் பற்றி பேசிவிட்டு கழுதையைப் பற்றி பேசாமல் எப்படி. இந்த மாத உயிர்மையில் “சாம்பல் நிற தேவதை” என்ற கதை சுவரசியமாக இருந்தது.

No response to “What Next”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman