Adsense

ஓர் இரவு


என் வாழ்க்கையில் இது போன்ற இரவுகள் பல வந்துள்ளன. இவ்விரவுகளில் நான் தூங்குவதில்லை. தூக்கம் வருவதில்லை. பகல் வாழ்வின் அத்தனை அவசரங்களுக்கும் ஈடு கொடுத்த மனதிற்கு தேவையான அமைதியான சூழல் கிடைப்பதாலோ என்னவோ எனக்கு இது போன்ற இரவுகள் அவ்வப்போது தேவைப்படுகின்றன. அதுவும் இரவு கழிந்த முன்காலைகளில் சாலையில் மனித நடமாட்டம் தொடங்கும் வேளைகளில் வாக்கிங் போகலாம் என வெளியில் செல்லும் சமயத்தில் காதில் விழும் “நேற்று”, “நேற்று ராத்திரி” போன்ற வார்த்தைகள் என் தூக்கமின்மையால் நான் விழுங்கியிருக்கும் காலத்தின் அளவை பெரிது படுத்திக் காட்டும்.
விடிய விடிய எந்த விதமான களைப்போ அயற்சியோ இன்றி ஏதாவது செய்து கொண்டிருப்பேன். பெரும் பாலும் வாசித்துக் கொண்டிருப்பேன். ஏற்கனவே படித்து முடித்த புத்தகங்களை மீண்டும் எடுத்து வாசிப்பேன், அசந்திருக்கும் பசு அசை போடுவதைப் போல. முதல் வாசிப்பில் அல்லது முந்தைய வாசிப்புகளில் சிக்காத ஏதேனும் ஒன்று மறு வாசிப்புகளில் சிக்க தவறுவதில்லை, புதிய கோணம், புதிய அர்த்தம் அல்லது நிறைந்த வாசிப்பு அனுபவம்.
இன்றைய (நேற்றைய) இரவும் அப்படித்தான். எதிலிருந்து துவங்குவது என தெரியாமல் லியணர்டோவின் ஓவியங்கள் (மட்டுமே) நிறைந்த புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு ரொம்ப நேரம் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். கிராண்ட் மாஸ்டர்... ம்ஹூம்.
பின்பு இலக்கின்றி ஏதோ ஒரு கவிதை புத்தகத்தை எடுத்து வைத்து குத்து மதிப்பாக ஒவ்வொரு கவிதையாக படிக்க ஆரம்பித்தேன். அப்படி படித்ததில் பிடித்தவை இவை.

வித்தியாசமான மியாவ்
----------------------------
எனக்கு தெரிந்த பூனை ஒன்று
நேற்று இறந்தது
சவ அடக்கத்துக்கு
நாங்கள் போயிருந்தோம்
என் நண்பனின் மனைவி
அழத் தொடங்கிய போது
என் மனைவியும் அழுதாள்
குழந்தைகள் அழுதன
சில வார்த்தைகள் பேசும்படி
என் நண்பன் என்னைக் கேட்டுக் கொண்டான்
நான் பேசத் தொடங்கினேன்:
‘இந்தப் பூனையின் மியாவ் மியாவ்
வேறு பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து
வித்தியாசமானது
மேலும்...’

பசுவய்யா
காலச்சுவடு கவிதைகள் - காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு.

2:
முடிவில்
-----------
ஒரு பெரிய பயம்
கரைந்த நாளில் -
ஒரு தண்டனை
இனி இல்லையென்ற பொழுதில் -
ஒரு முடிச்சு
நிரந்திரமாக அவிழ்ந்த கணத்தில் -
எனக்குத் தெரியவில்லை
இனி எங்கிருந்து தொடங்குவதென்று

மிகவும் நுட்பமான அனுபவத்தை இந்த கவிதை பதிவு செய்கிறது. தொடர்ச்சியாக போராடும் எல்லோருக்கும் வாய்க்கும் அனுபவம் தான். வளைந்து வளைந்து செல்லும் வாழ்க்கையின் பாதையில் ஒவ்வொரு திருப்பத்திலும் நாம் முடிவுகள் எடுக்கிறோம் அல்லது ஸ்திரப்படுத்திக் கொள்கிறோம். முடிவுகள் எடுக்கத் தேவையான புற நிர்பந்தங்களோ வாய்ப்புகளோ அற்ற ஒரு வெற்று கணத்தை பற்றிய பதிவாக இது எனக்குப் படுகிறது. தலைப்பு மிக கச்சிதம்.

மனுஷ்யபுத்திரனின் நீராலானது தொகுதியிலிருக்கிறாது அக்கவிதை. இத்தொகுதியில் மேலும் பல கவிதைகள் மனதைக் கவர்ந்தன.

சார்தல்
---------
யாருடைய வழிகளையும்
மறித்ததில்லை எனது நிழல்கள்
அளிக்கப்பட்டதற்கு மேல்
எதுவுமில்லை இப்பிரார்த்தனைகளில்
உன்னை அழுத்துவதற்காக அல்ல
இந்த பாரங்கள்
வெறுமனே சார்ந்திருக்கிறேன்

-oOo-

அழைப்பு
-----------
நான் பார்க்கும்போதெல்லாம்
அந்த மனிதர்
ஒரு போதும் ஒலிக்காத
தொலைபேசியினை
எடுத்துக் கேட்பதும்
வைப்பதுமாக இருக்கிறார்.

இதில்
மிகப் பெரிய துரதிருஷ்டம்
அந்தத் தொலைபேசி
ஒரு போதும்
வேலை செய்யாமல் இல்லை.

நுட்பமான பதிவு, மீண்டும்.

நீராலானது - காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு.

3:
மீனுக்குள் கடல் என்ற பாதசாரியின் தோகுதியை 15 ஜனவரி 2002இல் வாங்கியிருக்கிறேன். தலைப்பு கவிதை இங்கே

என் மனக் குரங்குக்கு
உடைகள் தைத்தே கை சலித்தோய்ந்தது
என் யாக்கையின் காலம்

நேற்றிரவு வரை
மடங்காக் கத்தி
குரங்கின் கையில்
ஆப்பிள் ந்றுக்க என்றோ ஒரு
ஆதாம் கொடுத்தது

மீனுக்குள் கடலொன் அலை ஓய்ந்த மோன இரவு

ஏதோ விதமாய் ஒரு அசதியில்
கத்தி கைநழுவ குரங்கது
மெய் புதைந்து தூங்குகிறது

ஒரு விழிப்பின் தருணம் திடுமென
குரங்கின் கனவில் புகுந்துவிட நான்
கண்டேன் ஒருத்தியை
திரை இன்றி
இலை தழைகூட மேலின்றி நிறை
நிர்வாணத்தில் ஒளிரக் கண்டேன்
அவளே என் அம்மாவும் அவளே என்
தங்கையும் அவளே என் மனைவியும் அவளே
என் குழந்தையும் அவளே....

மீனுக்குள் கடல் - தமிழினி பதிப்பகம் வெளியீடு.

அதன் பின் சறிது நேரம் Fountain head -இல் நான் அடிக்கோடிட்டு வைத்திருந்த பத்திகளைப் படித்து விட்டு தூங்கிவிட்டேன். என் அம்மா காபி போட துவங்கியிருந்தாள்.

தூங்குவதற்கு முன் எழுதிய கவிதை

கவிதைகளாய் தோன்றி வந்த
காலம் முடிந்து
வரி வரியாய் வந்த
காலமும் போய்
வார்த்தைகள் மட்டும் வந்து கொண்டிருந்தன.
இப்போதெல்லாம் வெறும்
எழுத்துக்கள் தாம்
அ, ஆ, இ, ஈ, உ...

One response to “ஓர் இரவு”

அன்பின் சந்திரசேகரன் கிருஷ்ணன்,
மிக அருமையான கவிதைகளைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றிகள். நீங்கள் எழுதிய கவிதையும் நன்று. கவிதைகளை நீங்கள் அசைபோட்ட கணங்களை கூட நான் மௌனக் கவிதைகளாக உணர்ந்தேன். நிறைய எழுதுங்கள். உங்கள் கவிதைகள் பரவலாகப் பேசப்படும். படவேண்டும். வாழ்த்துக்கள். என்றென்றும் அன்புடன், ஜெ

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman