Adsense

கிரிக்கெட்டும் நூடுல் ஸ்டிராப் ரவிக்கைகளும்


தொலைக்காட்சியில் கிரிக்கெட்டைப் பார்ப்பது என்பது ஒரு தனி அனுபவம் அல்லது பெரும்பாண்மையான கிரிக்கெட் ரசிகர்களுக்கு சாத்தியப்படும் ஒரு அனுபவம். ஒன்றுக்கும் மேற்பட்ட கோணத்தில் ஒவ்வொறு பந்தையும் பார்க்கும் வாய்ப்பு, ஆக்ஷன் ரீப்ளே, முக்கியமான தகவல்கள் (வீசப்பட்ட பந்தின் வேகம், அடிக்கும் ஒவ்வொறு ஓட்டத்தின் முக்கியத்துவம், புள்ளி விவரங்கள்) என தொழில் நுட்பம் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டு என்ற தளத்திலிருந்து வேறொரு தளத்திலிருந்து பார்க்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. வேறெந்த விளையாட்டைப் போலவே இந்த விளையாட்டிலும் பார்வையாளானின் ஞானம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இந்த காலத்தில் சராசரி கிரிக்கெட் பார்வையாளன் ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் கிரிக்கெட் பற்றிய தகவல்களை சேமித்டுக் கொண்டே போகின்றான். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு தகவல்கள் இருப்பதாலும், இந்த விளையாட்டின் அடித்தள பார்வையாள்னுக்கும் ஆட்டத்தின் அத்தனை நுணுக்கங்களும் தெரிவதாலும் ஒரு கிரிக்கெட் போட்டியின் வர்ணனையும், கருத்துக்களும் மிகவும் விஷயம் நிரம்பியதாக இருக்க வேண்டிய கட்டயாத்தில் இருக்கின்றது. இந்த வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் கிரிக்கெட் வர்ணனையாளர்களும், கிரிக்கெட்டை ஒளிபரப்பும் அன்னிய நாட்டு சேனல்களும் தான். இன்றைய நிலையில் கிரிக்கெட் வர்ணனை என்பது ஒரு ஆதாயமிக்க பணியாக (அதே சமயம் மற்ற பணிகளில் இருப்பது போன்ற சவால்களும் நிறைந்ததாகவும்) இருக்கின்றது. பெரும்பாலும், கிரிக்கெட் விளையாட்டு வீரர்களால் கொடுக்கப்படு வந்த வர்ணனை மெல்ல மாறி தொழில் நிலை கிரிக்கெட்டர் அல்லாதவர்களாளும் (இந்தியாவின் ஹர்ஷா போக்லே, சாரு ஷர்மா) திறம்படவே செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக ஹர்ஷாவின் பங்கு மிக மிக முக்கியமானது. ஹர்ஷா வர்ணனையின் போது எதிரெதிர் நாட்டு வர்ணனையாளர்களிடையே தலை தூக்கும் அணல் பறக்கும் விவாதங்களை யாருக்கும் மனம் நோகாமல் எடுத்துச் செல்வதாகட்டும், கிரிக்கெட் வீரர்கள் தொடர்பான புள்ளிவிவரங்களைச் சொல்வதாகட்டும், ஆட்டத்தின் போக்கைப் பற்றி தேர்ந்த கருத்துக்களை சொல்வதிலும் தனி முத்திரையை பதித்தவர்.
இந்த நிலையில் தான் நாம், கிரிக்கெட் வர்ணனையில் பெண்களின் நிலை குறித்த நமது கருத்துக்களை திரட்டும் கட்டாயத்தில் இருக்கிறோம்.
இந்தியாவில் இந்த பழக்கத்தைத் துவங்கி வைத்தது சோனி தொலைக்காட்சி (Extra innings – Mandira bedi). உண்மையில் இது ஒரு அதிரடியான துணிச்சலான முடிவு. கிரிக்கெட்டோடு ஸ்நாணப் ப்ராப்தி கூட இல்லாத ஒரு மாதுவை கிரிக்கெட் ஆட்டங்களைக் குறித்த விவாதங்களில் பங்கு கொள்ளச் செய்த்தனின் மூலம், பெண் பார்வையாளர்களையும் சம்பாதிக்க முடியும் என்ற திட்டத்துடனே அது செயல்பட்டதாக தோன்றுகிறது. (அதிக சர்ச்சைக்குண்டான மந்திராவின் ஆடைகளால் ஆண்களை கிரிக்கெட்டின் பக்கம் இழுப்பதாக நினைத்து அவர்கள் கிரிக்கெட்டையும் ரசிகர்களையும் அவமானப்படுத்த திட்டமிட்டிருக்க மாட்டார்கள்் என நம்புகிறேன்). அதைத் தொடர்ந்து இந்திய ஆட்டங்களை ஒளிபரப்பும் எந்த ஒரு நிறுவனமும் ஆட்டத்தைக் குறித்த நிகழ்ச்சி தொகுப்புகளிலும் விவாதங்களிலும் ஒரு பெண்ணை பங்கு கொள்ளச்செய்தல் என்பதை சம்பிரதாயமாக பின்பற்றி வருகின்றனர். கிரிக்கெட்டை ஒரு மதமாக கொண்டாடும் இந்தியர்களே பெரும்பாலும் பார்வையாளர்களாக இருக்கும் இந்நிகழ்ச்சிகளில் கிரிக்கெட் குறித்த எந்த ஒரு தேர்ந்த கருத்தையும் கூற முடியாமல் விவாதங்களிலும் அறிவார்த்தமாக பேச முடியாமல் சம்பந்தமில்லாமல் சிரித்துக் கொண்டு இப்பெண்கள் சிறுமையின் அடையாளமாகவே இருக்கின்றனர். இந்த பெண்கள் மூலம் பெண் பார்வையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்க சாத்தியமில்லை. பெண் உரிமை, 33 % என்றெல்லாம் பேசும் இக்காலத்தில் “இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை” என்று இப்போக்கு குறித்து யாரேனும் கேட்டால் அது பிற்போக்குத் தனமாகவும், பெண்ணடிமை கோஷமாகவும் வரிக்கப்படும் அபாயம் இருக்கிறது. ஆயினும் அந்த கேள்வி பெரும்பாலான “ஆண்களால்” வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் கேட்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றது. இந்நிலையில் நடந்து கொண்டிருக்கும் பாக்கிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஆறாவது ஒரு தின கிரிக்கெட் போட்டியில் பெண் வர்ணனையாளர்களை அறிமுகம் செய்ய இருக்கிறது தூர்தர்ஷன். இதற்காக ப்ரத்தியேகமாக ஒரு படக்காட்சியைக் கொடுத்து அது குறித்த வர்ணனைகளை ஒலி வடிவில் பதிவு செய்து அனுப்பச் சொல்கிறது தூர்தர்ஷன். அவ்வொலி பதிவின் மூலம் வர்ணனையாளர்களின் குரல் வளம், கிரிக்கெட் குறித்த அறிவு ஆகியவற்றை நிச்சயமாக அடையாளம் காண முடியும் தான். மேம்போக்காக பார்க்கும் போது இது மிகவும் ஆதாய பூர்வமான திட்டமாகத் தான் தோன்றுகிறது.
இந்த பெண் வர்ணனையாளர்களுக்கு இந்தியாவில் இதுவரை முழுமையான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இவர்களின் அங்கீகாரம் பற்றி பேசும் போது அந்த அங்கீகாரத்திற்கு அவர்கள் தகுதியாணவர்கள் தானா என்ற கேள்விக்கும் பதிலளிக்க வேண்டியுள்ளது. இக்கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது மேலும் சில விஷயங்களை நாம் திறணாய்வு செய்ய வேண்டும். கிரிக்கெட் போன்ற ஒரு விளையாட்டைக் குறித்த ஞானம் என்பது ஏடுகளில் மட்டும் நிச்சயம் கிடைக்காது. அனுபவ அறிவாகவோ அல்லது விளையாட்டை அதி தீவிரமாக தொடர்வதாலும் தான் அந்த ஞானத்தைப் பெறமுடியும். பெண்கள் கிரிக்கெட் என்பது கடந்த ஒரு பத்தாண்டுகளில் கணிசமான கவனத்தைப் பெற்றுள்ளது. தேசிய அளவில் என்று மட்டுமின்றி கல்லூரி அளவில் கூட இவ்விளையாட்டிக்கு கவனம் அதிகரித்துள்ளது. அதனால் கிரிக்கெட் குறித்த அறிவு கொண்ட பெண்கள் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. ஆனால் ஒரு வர்ணனையாளராக உருவாவதற்கு கிரிக்கெட் குறித்த ஒரு தாகமும், அழகாக கருத்துக்களை எடுத்துச் சொல்லும் திறமையும், பல்வேறு புள்ளி விவரங்களும் விரல் நுணியில் தேவை. உலகின் அணைத்து மூலைகளிலிருந்தும் தகவல் கொட்டிக்கொண்டிருக்கும் இன்றைய தினத்தில் புள்ளி விவரங்களை சேமித்தல் அவ்வளவு கஷ்டமான காரியமில்லை. இன்றைய கல்வியமைப்பில் கருத்துக்களை அழகாக எடுத்துச் சொல்லும் கலையை எல்லோருமே பெற்றிருக்கிறார்கள். கிரிக்கெட் குறித்த தாகம் தான் இப்போதைய கேள்வியே. இந்த தாகம் எத்தனைப் பெண்களிடம் இருக்கிறது ? தூர்தர்ஷன் கண்டுபிடிக்கப் போகும் மங்கை அந்த தாகமும் கிரிக்கெட் அறிவும் பெற்றிருந்தால் மகிழ்ச்சியே. மேலும் கிரிக்கெட்டிலேயா ஊறிக்கிடக்கும் இன்றைய சர்வதேச வர்ணனையாளர்களுடன் சரிசமமாக உட்கார்ந்து அவர்களுக்கு இணையான தொழில்நுட்ப அறிவுடன் வர்ணனை செய்ய நமது பெண்களிடம் விஷயமிருக்கிறதா ? இது வரை எந்த பெண் வர்ணனையாளரும் இந்த தகுதியை நிருபிக்காத காரணத்திலேயே இக்கேள்வி எழுகிறது.
எடுத்த எடுப்பில் ஒருவரை தேர்வு செய்து சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தும் அளவிற்கு நம்மிடம் வளமான பெண் வர்ணனையாளர்கள் நிஜமாகவே இருக்கிறார்களா ? அதை விடுத்து, உள்நாட்டு பெண்கள் கிரிக்கெட்டுக்கும், துலிப் டிராபிக்கும், ரஞ்சிக் கோப்பைக்கும் அவர்களை வர்ணனை செய்யச்சொல்லி அந்த தளத்தில் முதலில் அவர்களை திறம்பட செயல்படச்செய்து பின் சர்வதேச தளத்திற்கு அறிமுகம் செய்வது புத்திசாலித்தனமாக இருக்கும். இல்லாவிடில் நாம் நூடுல் ஸ்டிராப் ரவிக்கை அணிந்த இன்னுமொறு கோமாளியையே உலகுக்கு அறிமுகம் செய்வோம்.

One response to “கிரிக்கெட்டும் நூடுல் ஸ்டிராப் ரவிக்கைகளும்”

அன்பு said...

வணக்கம்.

ஆஹா அஞ்சறப்பட்டின்னு அதே ஆர்வத்தோட தொறந்துபார்த்தா....

நூடுல் ஸ்டிராப் ரவிக்கைகள் - பத்தி எழுதியிருக்கிறீங்க:)

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள் (இடையிடையே போதிய இடைவெளிவிட்டு - பதிவுகளுக்கு இடையேயல்ல - பதிவுக்குள்ளே - படிப்பதற்கு கஷடமாயிருக்கிறது)

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman