Adsense

காலச்சுவடு கட்டுரை


மார்ச் மாத இதழில் உ வே சாவின் 150வது ஆண்டை சிறப்பித்து காலச்சுவடு சிறந்த கட்டுரைகளளைத் தாங்கி வந்துள்ளது. அவற்றுள் திரு ஆ.சிவசுப்பிரமணியனின் “உ வே சா வும் நாட்டார் வழக்காறுகளும்” கட்டுரை மிகச் சுவையான சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறது.

உ வே சா நூல்களைப் பதிப்பித்த காலத்தில் சங்க இலக்கியத்தில் இடம் பெற்ற சில கலைசொற்களுக்கும், செய்யுளடிகளுக்கும் நாட்டார் வழக்காறுகளின் துணை கொண்டு பொருள் அறிந்தார் என கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.

சில பத்திகள் அதிலிருந்து.

கள்ளா வா, புலியைக் குத்து
யாழ் மீட்டுதலில் தன் ஆர்வத்தைக் காட்டுவோருக்கு, தன் மகள் காந்தர்வதத்தையை மணம் புரிந்து தருவதாக அவளது தந்தை ஸ்ரீதத்தன் அறிவித்தான். காப்பியத்தலைவனான சீவகன் திறம்பட யாழிசைத்துப் போட்டியில் வென்றான். ஏற்கனவே சீவகன் மீது பொறாமை கொண்டிருந்த மன்னனான கட்டியங்காரன் மனம் புழுங்கி, சீவகனுடன் போரிட்டு வெல்பவர்களே காந்தர்வதத்தையை மணம் புரியத் தக்கவர் என்று யாழிசைப் போட்டிக்கு வந்திருந்த மன்னர்களிடம் அறிவித்தான். அவ்வறிப்பைக் கேட்ட மன்னர்கள் ஒன்று திரண்டு சீவகனுடன் போரிட்டனர். அவர்களைப் போரில் வென்று காந்தர்வதத்தையை சீவகன் மணம் புரிந்தான்.
பிற மன்னர்களை சீவகனுக்கு எதிராகத் தூண்டிய கட்டியங்காரனின் செயலை, “கள்ளரால் புலியை வேறு காணிய காவல் மன்னன்” என்று சிந்தாமணி குறிப்பிடுகிறது. இத்தொடர் இடம்பெறும் செய்யுளுக்கு நச்சினார்க்கினியர்
‘ சீவகன், தத்தையை யாழும் பாட்டும் வென்றான், நல்லனென்று மாந்தர் ஆர்ப்ப அது பொறாதே கட்டியங்காரன் மனம் புழுங்கி அரசரைக் கொண்டு சீவகனைப் போர் காண வேண்டி, அரசர்க்கெல்லாம் சில தீமொழிகளைக் கூறினானென்க’
என்று உரை எழுதியுள்ளார் ( உ.வே.சா 1991 அ.106)

உரை தெளிவாக இருப்பினும், “கள்ளரால் புலியை வேறு காணிய” என்னும் தொடருக்கு விளக்கம் ஏதும் இல்லை. இத்தொடருக்கு விளக்கம் காண இயலாத னிலையில் உ.வே.சா சீவக சிந்தாமணி பதிப்பு 1887 இல வெளியானது.

தமக்கு வேண்டாத ஒருவர், தமக்கும் மற்றொருவருக்கும் இடையே சண்டை மூட்டிவிட்ட நிகழ்வைக் கும்பகோணத்தில் வசித்துவந்த உ.வே.சாவிடம் சாமப்பா என்னும் கிழவர் பின்வருமாறு குறிப்பிட்டார்.
‘ எப்படியாவது நாங்கள் முட்டி மோதிக்கொண்டு சாகட்டுமே என்பது அவன் அபிப்பிராயம். நாங்கள் இரண்டு பேரும் அவனுக்கு வேண்டாதவர்களே, அதற்குத்தான், கள்ளா வா, புலியைக் குத்து என்கிறான். நானா ஏமாந்து போவேன்’
இதைக் கேட்ட உ.வே.சா “கள்ளா வா, புலியைக் குத்து” என்று கிழவர் பயன்படுத்திய பழமொழிக்கு விளக்கம் கேட்டார். இப்பழமொழி ஒரு கதையை உள்ளடக்கியிருந்தது. அக்கதையை உ.வே.சா விடம் கிழவர் பின்வருமாறு விளக்கினார்.
“ ஒரு மனுஷ்யன் பண மூட்டையோடு சுடுகாட்டு வழிகாக போய்க் கொண்டிருந்தான். அப்போது ஒரு திருடன் அவனைக் கண்டு துரத்தினான். எதிரில் ஒரு புலி உறுமிக் கொண்டு வந்தது. இந்த இரண்டு அபாயங்களிலிருந்தும் தப்புவதற்கு அந்த வழிப்போக்கன் ஒரு தந்திரம் பண்ணினான். திருடனைப் பார்த்து “அதோ பார், அந்த புலியைக் குத்தி கொன்றுவிடு; நான் உனக்கே பண மூட்டையைத் தந்துவிடுகிறேன்” என்றான். திருடன் அப்படியே புலியை எதிர்த்தான். புலி அவனை அடித்து தின்று பசி தீர்ந்தது. அதற்குள் வழிப்போக்கன் தப்பி பிழைத்து ஓடிபோய்விட்டான். அவன் தனக்குப் பகையாக வந்த புலியையும் கள்ளனையும் முட்டவிட்டுத் தான் தப்பினான் (மேலது 108)
இக்கதையைக் கேட்டதும் உ.வே.சாவிற்கு ஒரே மகிழ்ச்சி. “கள்ளரால் வேறு காணிய” என்னும் சீவக சிந்தாமணி அடிக்கு “கள்ளர்களாகிய அரசர்களால் புலியாகிய சீவகனை வெற்றி கொள்ளுதலைக் காணும் பொருட்டு” என்று பொருள் விளங்கிக்கொண்டார். பின்னர் 1907இல் சீவக சிந்தாமணியின் இரண்டாம் பதிப்பில் மேற்கூறிய செய்யுளின் கீழ் “கள்ளா வா, புலியைக் குத்து என்பது பழமொழி” என்னும் குறிப்பைச் சேர்த்தார்.

செண்டு
பாஞ்சாலியைத் துச்சாதனன் இழுத்து வரும் காட்சியை, “கைச் செண்டால் அவன் பைங்குழல் பற்றி” என்று வில்லிப்புத்தூர் ஆழ்வார் குறிப்பிட்டுள்ளார். இங்கு செண்டு என்பதன் பொருள் பூசெண்டா, பூப்பந்தா என்ற ஐயம் உ.வே.சா விற்கு ஏற்பட்டது. இவ்விரு பொருள்களும் மேற்கூறிய செய்யுள் குறிப்பிடும் சூழலுக்குப் பொருத்தமற்றன. “செண்டு” என்னும் சொல்லின் பொருளை உ.வே.சா. தற்செயலாக அறிந்துகொள்ள நேரிட்டது.
மையிலாடுதுறைக்கு ஆறு கல் தொலைவிலுள்ள ஆறுபாதி என்னும் கிராமத்திலுள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று வணங்கிய போது, பெருமாள் சிலையின் பிரம்பைப் போல் ஒன்று இருந்ததைக் கண்டார். பிரம்பின் தலைப்பகுதியில் இரண்டு வளைவுகள் இருந்தன. அது குறித்து விசாரித்தபோது செண்டு என்று அதைக் குறிப்பிட்டனர். தலைப்பகுதி வளைந்து பிரம்பு போன்று காட்சியளிக்கும் ஒரு கருவியின் பெயரே செண்டு என்று உ.வே.சா அறிந்து கொண்டார்.

இது தவிர இக்கட்டுரையில் மேலும் “கும்மாயம்” “இடையன் எறிந்த மரம்” போன்ற வழக்குகள் குறித்த பதிவுகளும் இருக்கின்றன.

No response to “காலச்சுவடு கட்டுரை”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman